Monday, February 2, 2015

குந்தியின் வெற்றி



தர்மனா, துரியனா பட்டத்து இளவரசன் என்ற வாக்கு வாதம் முக்கியமானது. அது வெண்முரசில் சரியாக அமையவில்லை என்று தான் எனக்கும் தோன்றியது.

சகுனி ஏற்கனவே தோற்றவன், அவமதிக்கப்பட்டவன், தன் நாட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் சிக்கி கொண்டவன். இவை அத்தனையும் அவனுள் பல வருடங்களாக ஊறி கொண்டிருக்கிறது. அவன் இரவெல்லாம் தூங்குவதேயில்லை. தாயம் விளையாடி கொண்டேயிருக்கிறான் - திட்டம் தீட்டுகிறான். ஓநாய் வேறு.

குந்தி ஏற்கனவே பட்டத்து ராணி ஆணவள். சிறிதளவு அவமானம் அடைந்திருக்கிறாள. இருந்தாலும் நிறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் என்றே நினைக்கிறேன். அவளிடம் இருக்கும் ஒரே அழுத்தம் ஐந்து பிள்ளைகளின் தாய் என்பது. அவர்களின் நலனுக்காக அவள் என்னவும் செய்வாள்.

இவர்கள் இரண்டு பேருக்குமான அவை விவாதம் இன்னும் கொஞ்சம் கணமாக அமைந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல் மிக முக்கியமான தருணம் பொசுக்கென்று முடிக்கப்பட்டது ஒரு சிறிய அதிருப்தியை தருகிறது.

பிரச்சினை என்னவென்றால் அரசு சூழும் கதாப்பாத்தரங்கள் அவர்களின் அறிவு கூர்மையை காட்ட பல காட்சிகள் சித்தரிக்கப்பபடுகிறது. அந்த காட்சிகளும் அதில் வெளிப்படும் அவர்களின் திறன்களையும் கொண்டு வாசகன் மனதில் அவர்களை பற்றி ஒரு பிம்பம் எழுந்து வருகிறது. குந்தி, விதுரர், வசுதேவர், சகுனி அத்தனை பேரும் கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் என் மனதில் உருவாகி வந்தார்கள். இதில் ஒரு கதாப்பாத்திரம் ஒன்றுடன் தோற்கும் போது வெல்லும் கதாப்பாத்திரம் உயர்த்தப்படுவதற்க்கு பதிலாக, தோற்கும் கதாபாத்திரம் நாம் இதுவரை பார்த்த அதன் திறன்களிலிருந்து கதைக்காக கொஞ்சம் குறைக்கபடுவதாக தோன்றுகிறது.

இங்கு குந்தி வென்றாலும் சகுனி வென்றாலும் கவலையில்லை. மஹாபாரதத்தின் படி குந்தி தான் வென்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு கச்சிதமான ஒரு வாதம் அமைந்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும். கதை ஓட்டத்திற்கு ஏற்றார் போல் பல இடங்களில் சரியான தர்க்கங்கள் சொல்லப்படுவதாலேயே நாம் இங்கும் அத்தகையதை எதிர்பார்க்கிறோம்.

குந்தியின் வாதமும் hypotheticalலானது தான் அதை சகுனி எளிதில் தான்டி சென்றிருக்கலாம். அவன் இதே போல் ஒரு அனுமானத்தை முன் வைத்து இப்படி ஏன் இப்படி இருந்திருக்க கூடாது என்று கேட்டிருந்தால் இரு வாதமும் முட்டி கொண்டு நின்றிருக்கும். அதன் பிறகு நிமித்திகரிடம் குறி கேட்பது ஒன்று தான் வழியாக இருந்திருக்கும். குந்தியின் வாதங்களை யோசிக்கமால இத்தனை வருடம் சகுனி இருந்திருப்பான்? அதற்கு ஒரு எதிர் வாதத்தை முன்னரே ஏற்பாடு செய்திருக்க மாட்டானா? ஆனால் அப்படி அவன் எதையும் செய்யாமல் எளிதாக குந்தியை வெல்ல விடுவது ஏற்று கொள்ள முடியவில்லை.

குந்தியின் அரசு சூழ்கை பொதுவாகவே பிரயாகையில் அனைத்து அமைச்சர்களையும் விஞ்சுவதாக இருக்கிறது. தருமனை இளவரசனாக ஆக்குவதிலும் சரி, ஏழு வருடங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் காட்டில் மறைந்திருப்பதிலும் சரி.

இலக்கயத்தில் இப்படி பட்ட வாதங்கள் நடத்துவது சரியா என்று தெரியவில்லை. ஆனால் இலக்கியம் நமக்கு ஒரு நிகர்வாழ்க்கை என்றால் கதை அமைப்பும் முக்கியமாகிறது. அதில் இருக்கும் போதாகுறைகளை விவாதிப்பதும் அவசியமாகிறது.

ஹரீஷ்