ஊன்வாய் திறந்து மண்ணில் விழும் உடல், கண்டும், நுகர்ந்தும், சுவைத்தும், செவியுற்றும், தீண்டியும் அறிவதெல்லாம் அக்னியே.
வானறிந்த பேரமைதி அவன். மண் தொட்டு நின்றாடும் விண் அவன். மண்ணில் தீண்டும் அனைத்தையும் தாவி ஏறி உண்டு, தன்னைப் பெருக்கி, கோடி கொடி இதழ் விரித்து எங்கும் விரியும் முடிவற்ற பொன்னொளிர் நா அவன்.
ஆழி மேல் நின்றாடும் ஊழி அவன்.
பச்சைப் பசுங்குருத்தில், குளிர் சுனை நீரில், தாய் முலைப் பாலில் உரையும் தீ அவன்.வயிற்றில் பசி அவன். மாளும் இவ்வுடல் கொண்டு உண்டு உயிர்த்து கண்டு கற்றது அனைத்தையும் தீண்டி தூய்மை செய்பவன்.
நாவில் மெய்யாக,நெஞ்சில் நெறியாக உறைபவன்.தீந்தமிழில்,சொல்லில் உறையும் தீ அவன்.
சொல்லில் உறையும் தீ , சிறை மீறட்டும் , காப்பியமாக திரௌபதியின் கதை எழட்டும். சொல் சொல்லாக வெண் முகில் நகரம் பூக்கட்டும்.
இனிய ஜெயம் ,புதிய நாவல் ஒன்றின் பாய்ச்சலுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
கடலூர் சீனு