அன்புள்ள ஜெ,
உவமைகளைப்பற்றி ஒருநண்பர் எழுதியிருந்ததை வாசித்தேன். வெண்முரசே உவமைகளின் பெரும் தொகுப்பு என்ற எண்ணம் வந்தது. முதர்கனலில் இருந்தே உவமைகள் தொடங்கிவிட்டன. உவமைகளை வாசிக்கும்போது இபப்டி வாரி இறைக்கிறாரே எவ்வளவு தாங்கும் என்று தோன்றியது. குறிப்பாக முதற்கனல் நாவலில் பாம்பைப்பற்றி ஒரே இடத்தில் ஏழு உவமைகல் இருக்கும்
உவகைகள் அணிகள் என்றுதான் நமக்குத்தெரியும். அலங்காரப்பொருட்கள் அவை. ஆனால் அவையெல்லாமே சம்பிரதாயமான உவமைகள். நிலவு போன்ற முகம், நட்சத்திரங்கள் போன்ற கண்கள் என்றெல்லாம் வழக்கமாகச் சொல்லப்படுகின்றன. வெண்முரசில் அப்படிப்பட்ட உவமைகள் இல்லை. அனேகமாக ஒன்றுகூட இல்லை
அத்தனை உவமைகளும் புதியவை. ஏன் இந்த உவமைகள் என்று சிந்தித்தேன். ஒன்று நமக்குத்தெரியாத மறைந்துபோய்விட்ட நிலங்களையும் ஊர்களையும் வெறும் கற்பனையைக்கொண்டே மீட்டு எடுக்கவேண்டியிருக்கிறது. அதற்கு உவமை தேவை இல்லாவிட்டால் அவை காட்சியாக ஆகாது
அதேபோல உவமைகளை சொல்லும் இடங்கள் சாதாரணமல்லாத அபூர்வமான மனநிலைகளைச் சுட்டிக்காட்டுவதற்காகவே உள்ளன. ஒரு சிக்கலான மனநிலையை உவமை சரியாகச் சொல்லிவிடுகிறது
இந்த இரண்டுமே வாசகர்கள் வாசிக்கவெண்டியது. அவர்களின் கற்பனையிலே விரியவேண்டியது. இன்னது இன்னதைச் சுட்டுகிறது என்று சொல்லிவிட்டால் வாசக அனுபவமே இல்லாமலாகிவிடும்
[அதோடு ஒரு சின்ன விஷயம் உவமைகள், உதாரணகதைகள், துணைக்கதைகள் என்று மூன்று விஷயம் வென்முரசில் உள்ளது. மூன்றும் வேறுவேறு. சித்ரகர்ணி ஒரு உதாரண கதை. பருந்துகளும் உதாரண கதைகள். தாட்சாயணியின் கதை துணைக்கதை. உவமைகள் வேறு]
சுவாமி