வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Saturday, October 31, 2015

அழகின் எதிர் நிகர்


ஆசிரியருக்கு ,

பகுதி 9 இல் நீலாஞ்சனை அழகு பெருகப் பெருக ஆடினாள்  என்றால் அது குறுகக் குறுக இப்பகுதியில் அடங்கினாள். தசை உருக்கமும், கோரம் கொள்ளும் உடலும் பகுதி 9 ஐ எதிர் நிகர் செய்து விட்டது.    

ஈச்சையின் இயல்பும், வெல்லம் காய்ச்சும் பதமும் அது திரளும் முறையும் கூட ஒரு ஆன்ம மணம் வீசுகிறது. 

திரும்பத் திரும்ப வரும் கோல் விழுந்த முரசு உவமை இது வெண் முரசு வெண் முரசு என அதிர்கிறது.

கிருஷ்ணன்
Posted by ஜெயமோகன் at Saturday, October 31, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண்டீபம் - 46)



      மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ஊரில்  இறங்குகிறார்கள். அங்கு விடுதிகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். புதிய நட்புகள் உறவுகள் உருவாகின்றன. சிலர் அந்தவூரை சுற்றிப்பார்த்து அனுபவிக்கிறார்கள். சிலர் அந்த ஊரின் நலத்திற்கென பல பணிகளை செய்கிறார்கள். எப்படி இருப்பினும் அந்த ஊரை விட்டு அனைவரும் சிலநாட்களில்  வெளியேற வேண்டும். அது அவர்கள்  அவ்வூருக்கு உள்ளே நுழையும்போதே சொல்லப்பட்ட விதி. சிலர் அதை மறந்ததைப்போல் நடந்துகொண்டாலும் இது வரை யாரும் இங்கே நிரந்தரமாக தங்கியதில்லை.
   

     ஊருக்கு வந்த சில நாட்களிலேயே அந்த ஊரில் இருக்கும் மலைச்சிகரத்தை அடையவேண்டும் அந்த நோக்கத்திற்காகத்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என பலரால்  அறிவுறுத்தப்படுகின்றனர்.  அம்மலை ஊரை ஒட்டி இருப்பதால் ஊரில் உள்ள உயர்ந்த கட்டிடங்களால்  மறைக்கப்பட்டிருக்கிறது. அதனால் சிலர் அப்படி ஒரு மலை இல்லவே இல்லை எனச் சொல்கிறார்கள். அப்படியே இருந்தாலும் எனக்கென்ன என இருக்கிறார்கள். 'எப்படியோ வந்துவிட்டோம், அனுமதிக்கும்வரை தங்குவோம் வெளியில் அனுப்பும்போது போய்விடுவோம்' என்பது அவ்ர்கள் நிலைப்பாடு.


         ஆனால் பலர்  'வெறுமென சிலநாள் தங்கிச் செல்லவா இங்கே அனுப்பப்பட்டோம். அப்படியென்றால்  நாம் இங்கு வந்து செல்வது வெறும் அபத்தமான வீண் செயல் என ஆகிறதே'  எனச் சொல்கிறார்கள்.  அவர்கள் அந்த மலையை ஏறவேண்டும் என நோக்கம் கொள்கிறார்கள். அப்போது  பலகுழுவினர் அவர்களை அணுகுகிறார்கள். ஒவ்வொரு குழுவினரும் மலையேறுவதற்கு ஒவ்வொரு வழிகளை கூறுகின்றனர். அது இயல்பானதுதான் ஒரு பெரிய உயர்ந்த மலையை ஏற பலவழிகள் இருக்கலாம் அல்லவா? பெரும்பாலானோர், அவ்வூருக்கு வந்த நாளில் அவர்கள் கண்ணில் பட்டு பழகிய குழுவினரோடு சேர்ந்துகொள்கிறார்கள்.  இருப்பினும் ஒவ்வொரு குழுவினரும் மற்ற நபர்களை தம் குழுவில் சேர்த்துக்கொள்ள முயல்கிறார்கள்.


       அப்பெருமலையின் அடிவாரத்தை சுற்றி அமைந்திருக்கிறது அந்த ஊர்.  மேற்கு பக்கம் இருக்கும் ஊர்ப்பகுதியில் மூன்று பெருங் குழுக்கள் உள்ளன. அவை   தங்களுக்கென இறுக்கமான விதிமுறைகளையும்,  மலையேறுவதற்கான மாற்றம் செய்யமுடியாத கையேடுகளை வைத்திருக்கின்றன.  அதை சரியாக பின்பற்றி மலையேறினால் மட்டுமே சிகரத்தை அடைய முடியும்  என்றும்  அந்தக்  கையேட்டின் வழிகாட்டுதலை சரியாக பின்பற்றாதவர்கள், மற்றும் மற்ற குழுவைச் சார்ந்த அனைவரும்  ஒரு  பெரும் பள்ளத்தாக்கில் விழ நேரிடும் என்ற நம்பிக்கை உடையவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.
    

கிழக்கு பக்கம் இருக்கும் குழுக்கள் அவ்வளவு இறுக்கமானவை அல்ல. இந்தப் பக்கத்தில் இருக்கும் நபர்கள் தங்களுக்கான் கையேடுகளை முதலில் நெடுங்காலமாக இருக்கும் பல்வேறு கையேடுகளிலிருந்து தொகுத்துக் கொள்ளலாம். அந்தக் குழுவினரின் விதிமுறைகள் காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளும். அதில் பயணிக்கும் ஒருவர் தன் அனுபவத்தை பிறருக்கு தெரியப்படுத்தி பின்வருபவரை ஊக்குவிக்கிறார். அதனால் பழம்பெறும் கையேடுகளில் நீட்சியாக தோன்றிய  பல்வேறு கையேடுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது இப்பகுதியில் காணக் கிடைகின்றன. அதில் சிலர் நான் சிகரம் பார்த்தவன் அல்லது சரியான வழி எனக்கு தெரியும் என்று கூறிக்கொண்டு என் வழியே வாருங்கள் என அழைக்க அவரை நம்பி அவர் பின்னே சிலர் குழுவென திரண்டு செல்வார்கள். சிலர் மலை ஏறுவதற்காக உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்குவதை முக்கியம் எனக் கொள்வார்கள். சிலர் ஒன்று சேர்ந்து இசைக்கருவிகள் இசைத்து பாடல்களை பாடிக்கொண்டு சென்றால் எளிதாக இருக்கும் என நினைத்து செல்வார்கள்.  ஒற்றைக்கயிறை பிடித்து சிலர் மலை மேலேறி சிகரம் சென்றதாக சொல்லப்படுகிறது. சிலர் சிறிது தூரம்  ஏறி ஒரு சிறு சிகரத்தை அடைந்து இதுவே போதும் என அமர்ந்து விட்டவர்கள் உண்டு.    மேலே போக போக பாதைத் தடங்கள் குறைந்துகொண்டே சென்று இல்லாமல் போய்விடும்.

அதற்கப்புறம் மேற்கொண்டு தடங்கள் இல்லாத  பரப்பில்  ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான பாதையை தானே கண்டறிந்து மேலே செல்லவேண்டும் என சொல்வார்கள். கையேடுகளில் மேற்கொண்டு செல்ல குறிப்புகள் இருக்காது.  கண்ணுக்கு தெரியாமல் முகில் கூட்டதின் மேலே மறைந்திருக்கும் அந்தச் சிகரம், எதோ ஒரு வகையில் மனிதர்களை தன்பால் ஈர்க்கிறது.  அந்த பெருமலையின் சிகரம் நோக்கி அடிவார ஊரிலிருந்து மக்கள் சிற்றெறும்புகளைப்போல் பல்வேறு வரிசைகளில் மேலேறுகிறார்கள்.
   

வெண்முரசு இன்று அந்தச் சிகரத்தை நோக்கி அருகர்கள் பயணிக்கும் ஒரு வழியை  காட்டுகிறது.  ஒரு ஆசானாக எனக்கு இன்று அதைப்பற்றிய அறிவை கூட்டி இருக்கிறது.   அருகர்களின் வழி,  ஒரு எளிய பாதையாக தெரியவில்லை. ஆனால் அப்பாதை சிகரம் நோக்கி நீண்ட தூரம் அழைத்துச்செல்லும் எனத்தோன்றுகிறது. அது ஒருவேளை மற்ற அனைத்து பாதைகளையும் தாண்டி இன்னும் மேலே அழைத்துசெல்லுமோ?  யாரறிவார்கள் அதை.

தண்டபாணி துரைவேல்
Posted by ஜெயமோகன் at Saturday, October 31, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, October 30, 2015

ஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)



நாம் ஒன்றை அறிந்திருக்கிறோம் என்பதற்கும் ஒன்றை உள்ளபடி உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. நாம் இந்த உடலை வெறும் சதை, எலும்பு, ரத்தம், நரம்புகளால ஆனது என அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஒருமுறை என்  மாணவன், சற்று வயது முதிர்ந்து பருமனாக இருப்பவன், முற்பகலில் நடந்த எங்கள் துறை விழா ஒன்றில் மிகவும் ஆவேசத்தோடு நடனமாடினான்.  பிற்பகலில் விடுதியில் மயங்கிவிழுந்து மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டான்.  மறுநாள் அவனுக்கு அஞ்சலி  செலுத்த மாணவர்களுடன் மருத்துவமணை சென்றேன். அவன் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்கு பிண ஆய்வு செய்யும் அறை வழியாக செல்ல வேண்டியிருந்தது.  மின்னணு தராசில் பொருள் வைக்க நீள்சதுர தட்டு ஒன்றை பயன்படுத்துவார்களே அதைபோன்ற ஆனால் ஆறடி நீளம் இரண்டடி அகலம் கொண்ட நீள் சதுர எவர்சில்வர் ட்ரே ஒன்றைப் பார்த்தேன். அது ஏன் என யோசிக்கும்போது அங்கிருந்த பெரிய மின்னணு தராசு கண்ணில் பட்டதும் மனம் அதிர்ந்தது. உடல் சிலிர்த்தது. அங்கிருந்து ஓடிவிடலாம் என ஒருகணம் நினைத்தேன். அந்தத் தட்டு பிணஆய்வுக்கு வரும் மனித உடல்களை எடைபோடப் பயன்படுத்தப்படும் ஒன்று. மனித உடல் வெறும் ஊன் என உள்ளத்தில் தைக்கும்  பொருளாக அது இருந்தது. 


   அப்போது அந்த கணத்தில் என் மனம் உடலை ஊன் என உள்ளூர உணர்ந்து அதிர்ந்தது. இதைப்போல்  சென்னை இராயப்பேட்டை மருத்துவமணையில்,   கழிவறை பீங்கான் உடைந்து ஒருவன் காலின் தோல் கிழித்து சதையும் எலும்பும் தெரிய துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தபோதும் இத்தகைய அதிர்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் அது மீண்டும் பெரிதாக மனதில் உறைத்தது.  அப்புறம் இன்னும் சில சமயங்களில் அதைப்போன்ற நிகழ்வுகளில் இவ்வுணர்வை அடைந்திருக்கிறேன். ஆனால் அவை தற்காலிக உணர்வுகளாக சில மணி நேரத்தில்  மறைந்துவிடுகின்றன. மீண்டும் எனக்கு உடல் ஊன் என்பது ஆழ்மனம் உணரும்  ஒன்றாக  இல்லாமல் வெறும் அறிவு என்ற அளவில் மாறிவிடுகிறது.

        ரிஷபர் அழகும் நளினமும் கவர்ச்சியும் கொண்ட ஒரு உடல் வெறும் ஊனென குறுகிவிடும் முழுமையை கண்டுணர்கிறார்.  அந்த உணர்வை முழுமையாக தன்னுள் வாங்கி மறையாமல் அப்படியே தக்கவைத்துகொள்கிறார்.   அதை மேலும் மேலும் தியானித்து வீடுபேற்றை அடைகிறார். அதை இன்றைய வெண்முரசு அற்புதமாக காண்பிக்கிறது.

    இதைப்போல் ஒரு பதினேழு வயது சிறுவன் ஒரு அறையில் தனித்திருக்கும்போது ஏனோ அவனுக்கு மரணபயம் ஏற்பட்டது. தான் இறந்து விட்டதாகவும் தன் ஐம்புலனகளும் அவிந்துவிட்டதாக கற்பனை செய்துகொள்கிறான். அவன் உடல் அவன் கண்ணெதிரே இறந்துவிட்டது. அப்போது அவன் உடல் வெறும் ஊனென உணர்ந்துகொள்கிறான். அப்படியென்றால் தான் உடலில்லை என ஆகிறது. அப்படியென்றால் நான் யார் என அறிய முற்படுகிறான். அந்தக் கணம் அவனுக்கு ஞானம் சித்திக்கிறது. தன் வீடு உறவுகளைவிட்டு வெளியே போகிறான்.  அதற்கப்புறம்  அவன் ஞானத்திற்கென எந்த சாதனையோ தவமோ செய்ததில்லை.  சிலவருடங்கள் தியானத்தில் மௌனத்தில் தன்னுள்ளே ஆழ்ந்து,  பின் தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு மனம் இரங்கி குருவென ஆகி தன் வாழ்நாள் முழுதும் ஞான அருள் பொழிந்து வாழ்ந்த அந்த மகான்,  பகவான் இரமணர் ஆவார்.


   ஞானிகளின் கதையை சொல்வது அல்லது அவர்களுடைய தத்துவங்களை எடுத்துக்கூறுவது என்பது சிறப்பு என்றால் நம் கண்ணெதிரே ஒருவன் ஞானியாக மலர்ந்து முக்தியடைவதை சித்தரிப்பது  அதிசிறப்பு.  அதனால் வெண்முரசை படிப்பது என்பது ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்கும் ஞானத்திற்கு சற்றும் குறைந்ததல்ல எனக் கருதுகிறேன்

தண்டபாணி துரைவேல்
Posted by ஜெயமோகன் at Friday, October 30, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Thursday, October 29, 2015

வில்லும் அகிம்சையும்

பாரதவர்ஷத்தின் மிகச்சிறந்த கொல்லும் இயந்திரமாகிய அர்ஜூனன் கொல்லாமையை அடிப்படையாகக் கொண்ட அருக நெறியை அணுகி அறிகிறான். நல்ல நாடகீயத் தருணம் இது. இது அவனில் எப்படி விரிந்து எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ !

ராஜா
Posted by ஜெயமோகன் at Thursday, October 29, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தொன்மங்களின் இணைவு

ஆசிரியருக்கு ,

தேரோட்டி – 9, வெண் முரசில் ஒரு புதிய தரிசனம் , அழகையும் அநித்தியத்தையும் கவித்துவமாக இணைத்துவிட்டீர்கள். ஒன்றின் அழகு இன்னொன்றில் எழுவதும் அது அனைத்திலும் பிரதிபலிப்பதும் அற்புதம்.

பகுதி 8 இல்  இருவேறு தொன்மங்களின் இணைப்பு மயக்கம் என்றால் இதில் ரிஷபரின் கதை. நமது அருகர்களின் பாதையையும் எல்லா இடத்திலும் கண்ட புலி கன்றுக்கு பால் தரும் ஓவியத்தையும் நினைவு மீட்டினேன்.  

கிருஷ்ணன்
Posted by ஜெயமோகன் at Thursday, October 29, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, October 28, 2015

வெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்



கோவையில் இரண்டாவது கூடுகையாக வெண்முரசு கலந்துரையாடல் விஜயசூரியனின் இல்லத்தில் நடைப்பெற்றது.

இந்த கூடுகை ஒவ்வொரு வாசகரும் தனக்கு வெண்முரசு ஏற்படுத்திய பாதிப்பையும் அதன் தாக்கத்தையும் பேசுவதாகவும், இதன் மூலம் தாங்கள் தங்கள் கடந்து வந்த வாழ்க்கையின் பாதைகளையும், நிகர் வாழ்க்கை வாழவும் வகை செய்யும் கூறுகளையும் பேச முற்பட்டார்கள்.
மேலும் வெண்முரசின் ஒரு அம்சம் உதாரணமாக குல வரலாறு, நகர் அமைப்புகள், நிலக்காட்சிகள் என்று மட்டும் கட்டுரையாக எதிர்வரும் காலங்களில் படிக்காமல் ஒட்டு மொத்த பார்வையாக கட்டுரை எழுதலாம் எனவும் பேசினார்கள்.

இதில் புதியவர்களின் கருத்துக்கு முதலிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அவர்களின் பார்வையாக முதலில் அவர்களை பேசச் செய்து பின் எல்லோரும் கலந்துரையாடலாம் எனவும் பின் வரும் கூட்டங்களில் கட்டுரைகளை படிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
குணா- இவர் தனக்கு. தனி பாத்திரங்களின் வடிவமைப்பு, அந்த கதாபாத்திரத்தின் நேர்மறை மற்றும் எதிர்மறை கூறுகளை சொல்லும முறையும், காலப்போக்கில் ஒரு கதாபாத்திரம் சென்றடையும் இடமும் எதுவும் வாழ்வில் நிலையற்ற தன்மை பெற்றிருப்பதையம் வெண்முரசிலிருந்து அறிந்து கொள்வதாக சொன்னார்.

சுந்தர் ராஜன் – இவர், தனக்கு வெண்முரசின் நிலக்காட்சி விவரணைகள் ஆற்று பிரயாண போக்குவரத்து முறைமைகள் அதை சார்ந்த பொருளாதாரம், வாணிபம், அரசியல், நகர விவரணைகள், ஆகியவை மிகவும் ஈர்ப்பதாகவும் கூறினார்.

ராஜாராம் – இவர், மூல மகாபாரதத்திலிருந்து வெண்முரசு பல இடங்களில் பிரிந்தும் நகர்ந்தும் செல்வது ஏன்? எனவும், காண்டீப நாவலில் ஐந்து சுனைகளில் அர்ஜீனனை நோக்கி வரும் ஐந்து கேள்விகளை புரிந்து கொள்வது சிரம்மாக இருந்ததாகவம் சொல்லவும், அதைப்பற்றி விவரணைகள் கொடுக்கப்பட அது மிகவும் விரிவடைந்து செல்லவே, இதை மட்டும் அடுத்த கூட்டத்தில் வாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.


விஜயசூரியன் – தனக்கு வெண்முரசை படிப்பதற்கு முதலில் ஒருவரை கருப்பு வெள்ளையாக அவர்களின் இயல்புகளை பகுத்து கொண்டதை தவிர்த்து அவர்களின் சூழ்நிலையிலிருந்து பார்க்கும் கோணத்தையும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை முடிவுகள் எதனால் எடுக்கிறார்கள் என்னும் பாகுபாட்டையும் உய்த்து அறிந்து கொள்ள முடிகிறது, அதனால் முதலில் ஏற்பட்ட வெறுப்பு நீங்கி அவர்களின் செயல் எதனால் செய்யப்பட்டது என்ற புரிதலால் பரிவுகூட ஏற்படுகிறது என்றார்.

செந்தில் – முதற்கனலில் நாகர்களின் சரித்திரமாக ஆரம்பித்து வெண்முரசு தொடங்குகிறது. இதன் மேம்பட்ட விவரணையை மேலும் அதிகமாக அனுபவிக்க பல்வேறுபட்ட பாரத கதைகளான ஸ்ரீஜெயா, ராஜாஜியின் பாரதம், சோ எழுதியது ஆகியவைகளையும் படித்தால் நல்லது என்றார்.

மேலும் எல்ல புத்தகங்களும் மகாபாரத நிகழ்வுகளை மட்டும் சொல்லி போகும் போது ஐராவதி கார்வே எழுதிய ”யுகாந்தா” மட்டும் மகாபாரத கதை பாத்திரங்கள் தங்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் ஏன் அங்ஙனம் செய்தார்கள் எதனால் அப்படி நடந்தார்கள் எனும் கேள்வியையும் எழுப்பி அதற்கு பதிலும் சொல்கிறது என்றார்.

மேலும், வெண்முரசுவில் வரும் கதை மாந்தர்களின் வாழ்க்கையில் நிகழும் நெருக்கடிகளையும், சிக்கல்களையும், நுட்பமாகவும் குவித்தும் சொல்லிவிட்டு பின்பு காட்சி அமைப்பை உயர்தி ஊர் மற்றும் நாடு ஆகியவைகளை பறவை பார்வையாக காட்டும் போது தனி மனித பிரச்சனைகளின் அர்த்தமற்ற போக்கை சொல்லிச் செல்வதை ரசித்து பாராட்டினார்.

இந்த குறிப்பை சுரேஷீம் விஜயராகவனும் ஓப்புக்கொண்டு மற்ற புத்தகங்களை படித்திருந்தால் ஒப்பு நோக்கவும், மேம்பட்ட வாசிப்பு அனுபவத்திற்கும் ஏதுவாகும் என்றனர்.

ராதகிருஷண்ன் – தொடர்ந்து வாசிப்பின்பத்திற்காக வெண்முரசை படித்துக்  கொண்டிருப்பதாகவும். தொழில் நிமித்தமாக விட்டுவிட்டும் படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். சகோதரிகளான அம்பிகையும் அம்பாலிகையும் அரசு சூழ்தல் போராட்டத்தில் இரு துருவங்களாக இருந்தவர்கள் முடிவில் வாழ்கையின் பொருளற்ற தன்மையை உணர்ந்து சத்தியவதியுடன் வனவாசம் செல்வது மிக ரசிக்கத்தக்கதாக இருந்ததாக சொன்னார்

சந்திரசேரன் – வெண்முரசில் வரும் அரசியல் நிலைகளை விவரிப்பது, தற்போதைய அரசியல் சூழல்களை காட்டுவது போலவே உள்ளதால் ரசிக்க முடிகிறது என்றும், இதில் வரும், போர்காட்சிகள் வியூகங்கள், ஆகியவைகளின் பிரமாண்டமும், விவரணைகளும் தத்ரூபமாகவும், பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக உள்ளது எனவும், மேலும், இதில் வரும் இணைபாத்திரங்களாக
துருபதன்  x  துரோணர்
அர்ஜீனன்  x  கர்ணன்
துரியோதனன் x பீமன்
கிருஷ்ணன் x சததன்வா
திருஷ்ட்தயும்னன் x கிருதவர்மன்

ஆகியோரின் பாத்திரபடைப்பில் சமநிலை பேணுவதை சிலாகித்தார். இதில் போர் இயந்திரங்கள், போர் பொறிகள் ஆகியவற்றின் செயல்பாடு ஆகியவை பற்றியும் அதன் ஆரம்ப படிநிலைகள் எவ்விதமிருந்திருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார்
சகுனியின் வீழ்ச்சியின் கணத்தை

 அவன் கால் ஒநாயால் கடிபடுமிடமிருந்து தொடங்குகிறது என கூறிவிட்டு ஒருவர் மேல் மதிப்பும் மரியாதையும் விலக்கம் கொள்ளுமிடம் என துரோணர் துருபதனிடம் போலித்தனமாக பேச ஆரம்பிப்பதை பார்த்த அர்ஜீனன் கொள்ளும் விலக்க புள்ளியாக விவரித்தார்.

ரத்தீஷ் – வெண்முரசில் வரும் தொடர் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விவரித்தார். சித்ரகர்ணி எனும் சிங்கம், பசுவை கொல்ல, அதன் வலதுகண் குறைப்பட்டிருப்பதை ஒரு அத்தியாயத்தில் சொல்லி விட்டு பின்பு வேறு அத்தியாயத்தில் அது ஏன் அதன் கண் பழுது பட்டிருக்கிறது என்பதற்கான விடையாக செம்பருந்து கொத்திகண்ணை காயப்படுத்தியதையும், அச்செம்பருந்தை குஹ்யஜாதை எனும் பெண் ஒநாயின் மகனான குஹ்யசிரஸ் வேறு ஒரு இடத்தில் உண்டு கொண்டிருப்பதையும் சொல்லி வாழ்வின் போக்கை போலவே இது உள்ளதாகவும், இத்துடன் கதை மாந்தர்களான சகுனி, காந்தாரி ஆகியோரின் வாழ்வு பின்னி பிணைந்துள்ளதையும் சுட்டிகாட்டினார்.

மேலும் இவர் மண நிகழ்வுகளின் மூலம் அரசியல் வலுப்பெறுதலையும், எதிராளியை பலவீனப்படுத்துதலையும் சுட்டி காட்டி அது இன்றைய அரசியலுடன் ஒத்துப் போவதையும் கூறினார்

விஜயராகவன் – காண்டீபத்தில் அர்ஜீன்ன் பயணத்தை புறப்பயணமாக பார்க்கும் அதே நேரத்தில் அகப் பயணமாகவும் ஜனனேந்திரியங்களில் 7 சக்கரங்களையும் இடமளிப்பதையும், ஐவகை பிராணன்களையும் உருவகப்படுத்தி இருப்பதையம். உலூபி மண முடிக்கும் காதையில் இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

குணா - பாத்திரங்கள் அறம் மீறிய அல்லது தங்களது இயல்பான குணநலனிலிருந்து மாறி செயல்புரியும் போது ஏன் கடுமையாக பாதிக்கப்பட்டு இறக்குமளவிற்கு போகிறார்கள் என வினா எழுப்பினார்
இதற்கு அகங்காரம் மிக்க ஆக்கமும் வீரமும் உள்ள பாத்திரங்கள் தங்கள் அறத்திலிருந்து பிறழும் போது அதை அவர்களின் பிரதி பிம்பமே ஒப்புக் கொள்ள மறுக்கிறது அதனால் அவர்களின் புற மற்றம் அக வீழ்ச்சி மிக கடுமையாக உள்ளது என விபரம் தரப்பட்டது.
உதாரணம் துரோணர், காம்பில்ய போருக்கு பின் கர்ணன்.

மேலும் சந்திரசேரன், சித்ராங்கதனாகவும், பால்கணையாகவும் விவரித்து, ஒவ்வொரு ஆணிலும் உள்ள பெண் பாகத்தையும், ஒவ்வொரு பெண்ணிலும் உள்ள ஆண் பாகத்தையம் விவரிப்பதாகவும் எடுத்து கொள்ள வாய்ப்பிருக்கிறது எனவும் சொன்னார்

மீனாம்பிகை – ஒட்டு மொத்தமாக வாசிப்பின்பம் கொடுக்கும் ஆக்கமாக வெண்முரசு வரிசையை படித்து வருவதாகவும், எதிர் கருத்தாக வெண்முரசு மூல மகபாரத்திலிருந்து விலகி செல்வதாக சொன்னபோது அதற்கு பதிலாக இவர் காளிதாசனுக்கம், வில்லிபுத்தூராருக்கும் கற்பனையின் மூலத்திலிருந்து விலகுவதற்கு இடமிருக்கும் போது வெண்முரசிற்கும் அந்த இடம் தாராளமாக உண்டு என கூறினார்
.
சுரேஷ் – ஒரு மாபெரும் காவியம் எழுதப்படும் போது கட்டாயம் கால வழு போன்ற சிறிய பிரச்சனைகளை கவனிக்க வேண்டியதில்லை என்றார். ஆடிப்பாவைகள் என தங்களின் அந்தராத்மாவை ஆசிரியர் விவரிப்பதையும், சிறுகதையான கடைசி முகத்தில் ஆரம்பித்து சித்ராங்கதன் x சத்தியவதி மற்றும் அர்ஜீன்ன் x குந்தி ஆகியோர்களின் கேள்விகள் வாழ்வின் இக்கட்டான தருணங்களில் கேள்விகளாக ஐந்து சுனைகளிலும், சத்தியவதியும் சுனையில் விவரிப்பதையும், இதே இக்கட்டு விஷ்ணுபுரத்தில் சங்கர்ஷ்ண்ணுக்கும் லட்சுமிக்கும் வருவதையும் எடுத்துக் காட்டினார். இதற்கு, எல்லா மகத்தான எழுத்தாளர்களுக்கும் இந்த ஒற்றை சரடு அவர்கள் எழுதிய எல்லா ஆக்கங்களிலும் தொடர்வதை விஜயராகவன் சுட்டினார். உதாரணம், தாஸ்தாஸ்வஸ்கி, டால்ஸ்டாய், ஜெயமோகனின் நீலி வடிவம் பல கதைகளில் தொடர்வது..

மேலும் சுரேஷ் பேசும் போது. தமிழ் இலக்கிய பரப்பில் வரும் மிக பிரமாண்டமான படைப்பு வெண்முரசு தொடராகும். இதை பற்றி ஆக்க பூர்வமான, பொருட்படுத்தக்க விமர்சனங்கள் அவசியம் தேவை. ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் இதன் வடிவத்தை பார்த்தே படிக்காமல் விம்ர்சிப்பது வருந்தக்கது. அதை பொருட்படுத் தேவையில்லை.

ஆனால் எந்த ஒரு ஆக்கத்திற்கம் நேர்மறையான, ஆக்கபூர்வமான விமர்சனம் தேவை. வெறும் விதந்தோதுதலும், நயம் பாரட்டுதலும் மட்டும் போதாது என்றார்.

அதற்கு மீனாம்பிகையும் விஜயராகவனும் விஜயசூரியனும் அவ்வாறான பொருட்படுத்த தக்க விமர்சனம் ஏதும் உண்டா? என கேட்க
.
சுரேஷ் தினமும் இரவு 12.30 மணிக்கே படித்து முடிக்கும் வாசகரும் விமர்சகருமான ஒருவர், வெண்முரசின் மொத்த தொகுப்பும், ஜெ. இதுவரைதான எழுதியவற்றையெ மீண்டும் தொகுக்கிறார் (SUM UM BONUM)  என கூறுவதாக சொல்ல,

அதற்கு வாழ்வில் எதுவுமே புதுமைகள் இல்லை, அதேபோல் வாழ்வில் எல்லாமே புதுமைதான் என சொல்லப்படுவதுண்டு என எதிர் கருத்து வைக்கப்பட்டது.

இரண்டாவதாக வெண்முரசின் மூலம் ஒரு அகண்ட கலாச்சார ஒருமித்த இந்தியதன்மையை வைக்க முற்படுவதாகவும், விமர்சனம் எழுகிறது என்றார்.

இதற்கு ஒரு ஆக்கம் முழுமைபெற்ற பின்பே இறுதியான விமர்சனம் வைக்க முடியும், தொடர்ந்து கொண்டிருக்கும் போது இப்படி சொல்ல முடியாது, மேலும் தற்போது இங்கு விவாதிக்கும் நண்பர்கள் விமர்சிக்க ஏதும் உண்டா என கேள்வி எழுப்ப, அதற்கு செந்தில் படைப்பூக்கத்தின் வாசிப்பு இன்பத்திலோ, கதை போக்கிலோ எந்த விமர்சனமும் சொல்ல இயலாத அளவில் சீராக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நகர் விவரிப்பு, உண்டாட்டுகள், ஜோடனை போன்ற அலங்காரங்களை விவரிக்கும் போது மிகவும் நுண் விவரிப்பு அடிக்கடி வருவது விமர்சனமாக உள்ளது என்றார்.

சுரேஷ், அது வரை மிக உயர்வாகவும் சமநிலையுடனும் விவரிக்கப்பட்ட குந்தியின் பாத்திரப்படைப்பு சௌவீர மணிமுடியை சூடிக் கொண்டதாக கீழிறக்கப்படுதல், கௌரவ பாண்டவர் சமநிலையை பேணுவதற்காக இருக்கலாம், இது நெருடலாக உள்ளது என்றார். இதற்கு மீனாம்பிகை எந்த காரணமுமின்றி ஒருவர் தன் அறத்தை மீறி கீழ்மையாகவும், அதுவரை கீழ்மையாக இருந்த ஒருவர் மேன்மையாகவும் நடப்பது வாழ்வில் இயல்பு என்றார்.

இத்துடன் விவாதம் நிறைவுக்கு வந்தது, அடுத்த கூட்டத்தில் ரித்தீஷ் கட்டுரை வாசிப்பதாகவும், சுனையின் 5 கேள்விகள் பற்றியும் விஜயசூரியன் பேசுவார் என முடிவெடுக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் 15-11-2015 வைப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த கூடுகை முடிந்த மதியம் 1.30 மணியளவில் எல்லோருக்கும் (12 பேர்) விஜயசூரியனின் மனைவி அன்போடு அறுசுகை உணவிட்டார்கள், மகிழ்வோடு உண்டுவிட்டு கூடுகை முடிந்து வந்தோம்.
Posted by ஜெயமோகன் at Wednesday, October 28, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

அதிலும் அப்பாலும் நிற்பவள்.


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே! –அபிராமி அந்தாதி.

அன்னை பராசக்திக்கு இவ்வளவுதான் நாமங்களா? ஆயிரத்தெட்டு நாமங்களுக்கு அப்பாலும் நாமம் கொண்ட அன்னைக்கு இப்படியும் சில நாமங்கள் இருக்கு. பெயரை கேட்கும்போது சும்மா அதிற அடிக்கிறாள். ஸ்ரீமாதாவாகிய அன்னை ஏன் இப்படி அதிரடிக்கும் நாமங்களையும் கொண்டு விளையாடுகின்றாள். அன்னை முழுதானவள், முழுதாகமால் அவளால் இருக்க முடிவதில்லை. பொத்தி பொத்தி கருவளர்ப்பாள், பெற்று எடுக்கும்போதே ஒன்று இரண்டு குட்டிகளையும் தின்பாள். ஸ்ரீமாதா என்ற பெயரோடு மட்டும் அவளால் இருக்கமுடியவில்லை. மஹாக்ராஸா  மஹாசனாவாகவும் ஆகின்றாள். அண்டங்களையே பெற்று எடுப்பதுபோல அண்டங்களையே ஒரு கவளமாகவும் உண்ணுகின்றாள். நிர்அகங்காரா என்று சொல்லிக்கொள்ளும் அன்னை அதிகர்விதாவாகவும் ஆகின்றாள்.

எங்கே நிர்அகங்காராவாக இருக்கிறாள்?, எங்கே அதிகர்விதாவாக ஆகின்றாள்? என்பது எல்லாம் அவள் விளையாடும் விளையாட்டுதான். இரண்டாக நமக்குத்தெரிகிறது. ஒன்று என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். பீஷ்மகனின் ஆடைப்பற்றி விளையாட நினைக்கும் மந்தன், அண்ணனால் தள்ளப்படும்போது “நாளைக்கு நான் வளர்ந்து பெரும் புயலாக மாறுவேன்” என்று சினம்கொள்ளும்போது நிர்அகங்காரம், அதிகர்வமாக மாறுகிறது. சக்தியின் இரும்பெரும் நிலைகள் மந்தனுக்குள்  கிளைத்து விளையாடிச்செல்கிறது.

கண்டர்கள் செய்யும் முதல்போர் அதிகர்விதாவின் ஆடல் என்றால், இரண்டாவது போர் குஜ்ஜர்களின் அதிகர்விதாவின் ஆடல். முதல்போர் நடக்கும்போது நாம் குஜ்ஜர்கள் பக்கம் இருந்தால் நம்மை நிர்அகங்காரா ஆட்கொண்டு கண்டர்கள் எத்தனை கொடுமையானவர்கள் அதிகர்விதாக்கள் என்று சொல்லவைக்கிறது. இரண்டாவது போரில் நாம் கண்டர்கள் பக்கம் இருந்தால் அதே நிர்அகங்காரவால் ஆட்கொள்ளப்பட்டு குஜ்ஜர்கள் எத்தனை கொடுமையானவர்கள் அதிகர்விதாக்கள் என்று எண்ண வைக்கிறது, அன்னை நிர்அகங்காராவாகவோ அல்லது அதிகர்விதாவாகவோ இல்லை, அவள் ஸ்ரீமாதவாகவே இருக்கிறாள். தனது பிள்ளைகளின் உணவை இரண்டாக பிரிந்து விளையாடல் மூலம் கிடைக்கவைக்கிறாள். கண்டர்கள் கெட்டவர்களா? குஜ்ஜர்கள் கெட்டவர்களா? யாரும் கெட்டவர்கள் இல்லை. விளையாட்டுக்களத்தில் ஒருவன் தொட்டுவிட முயல்கிறான் ஒருவன் தொடவிடாமல் பிடித்துவிட நினைக்கிறான். ஆடு பிறக்கும்போதே ஓநாயும் பிறக்கிறது. இரண்டுக்குள்ளும் அதிகர்வமும், நிர்அகங்காரமும் இருக்கிறது. எங்கே எது மிஞ்சுகிறது என்பது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் சிலநேரம் இறைவனை நல்லவர் என்று நினைக்கிறேன், சிலநேரம் இறைவனை கெட்டவர் என்று நினைக்கிறேன் என்கிறார். முதல்போரில் கண்டர்கள் குஜ்ஜர்களின் குழந்தைகளை, முதியவர்களை பெண்களை கொல்லும் கொடுமைகளைப்பார்த்து இறைவன் இத்தனை கொடுமையானவான என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை, அது பீஷ்மகனின் யதார்த்தமனா விளையாட்டு. மந்தனின் வாளோடு குஜ்ஜர்கள் கண்டர்களை முற்றும் அழிக்கும்போது இறைவன் இத்தனை கொடுமையானவான என்றுதான் நினைக்கதோன்றுகின்றது. இது மந்தன் புயலாகும் விளையாட்டு. பீஷ்மகனும் மந்தனும் அவனுக்கு அவனுக்கு உரிய விளையாட்டை விளையாடுகிறார்கள். வேடிக்கைப்பார்க்கும் நாம்தான் அது சரி இது தப்பு என்று தீர்ப்பு எழுதிக்கொண்டு இருக்கிறோம். மஹாக்ராஸாவான ஸ்ரீமாதாவின் பெரும் பசிக்கு யாரால் பெரும் கவளத்தை சமைக்கமுடியும். அவள் உருட்டும் பெரும் கவளப்பாத்திரம் அல்லவா இந்த பூமி. யார் கண்டது இதுகூட அவளுக்கு சிறு கவளமாக இருக்கலாம்.

பெரும்போரில் தப்பி உயிர்பிழைத்து, ஓநாயிடமிருந்து உயிர் காத்து. பின்பு தற்கொலைக்கு முயன்று, மீண்டு, ஊழகத்தில் அமர்ந்து, எழுந்து, படைக்கொண்டு வென்று //தன் வாளைத்தூக்கி “இனி எம்மை வெல்ல எவருமில்லை இப்புவியில்”// என்றார்.  அதிகர்வம் கொள்ளும் ரைவதகரை பார்க்கிறேன். இப்பொழுது சாருஹாஸா என்ற நாமத்தில் அன்னை புடவியை நிறைக்கிறாள்.   

நித்தியவலியும் நித்தியசுகமும் நிறைந்த உலகில் புடவியை சமைக்கும் அன்னை அதிலும் அப்பாலும் நிற்கிறாள்.  

ராமராஜன் மாணிக்கவேல்

Posted by ஜெயமோகன் at Wednesday, October 28, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, October 27, 2015

யானைகள்

அன்புள்ள ஜெம் சார்

காண்டீபத்தில் பிரபாசதீர்த்தம்செல்லும் அர்ஜுனன் அதற்கு முன் யானைகளைக் கனவுகாண்கிறான். அல்லது நேரில் காண்கிறான். அவை இருட்டில் இருந்து எழுந்து வந்தபின் திரும்பிச்செல்கின்றன.

பல அர்த்தங்கள் கொண்ட ஒரு கனவுக்காட்சி அது. ஆனால் பெரும் வலிமை கொண்ட ஒரு பெண் சுபத்திரை அவன் வாழ்க்கையில் வரப்போகிறாள். அதைத்தான் அந்தக் கனவுக்காட்சி காட்டுகிறது என்று எடுத்துக்கொண்டேன்

சாரங்கன்
Posted by ஜெயமோகன் at Tuesday, October 27, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

போரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)


   ரைவதகரின் நாட்டு மக்கள் கண்டர்களின் படையினரால் கொன்று அழிக்கப்படும் நிகழ்வு சித்தரிக்கப்பட்டுள்ளது. கண்டர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு அறம் என்ற ஒன்று கிடையாதா? இது அவர்களின் படையினருக்கு மட்டுமே உரித்தான கொடுங்குணமா?

  ஒரு நாட்டின் படை என்பது ஒரு யானையைப்போன்றது.  அதன் தேவைக்கேற்ப உணவளித்து பராமரித்துவந்தால் அது மிகுந்த பலமும் விசுவாசமும் நிறைந்ததாக இருக்கும். அந்நாட்டு மக்கள் அதனிடம் பிரியமும் மரியாதையும் வைத்திருப்பர். அதனுடைய இருப்பு அவர்களுக்கு பாதுகாப்புணர்வை தரும்.  ஆனால் அதே  படை  பகை நாட்டின் உள் நுழைந்து போரிடும்போது மதயானையாக மாறி கொடுமைகளை நிகழ்த்தும். கண்ணில் படுபவரை காலில் போட்டு நசுக்கும். எதிர் வருபவன் வீரனா, வயோதிகனா, குழந்தையா, பெண்ணா, எனப் பார்க்காது.   நல்லது, கெட்டது, தருமம், இரக்கம்  அனைத்தும் அதன் கண்களுக்கு தெரிவதில்லை.


     படை வீரன் ஒவ்வொருவனும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன். ஆனால் எதிரிகளின் நாட்டில் எந்த தயக்கமுமின்றி வயோதிகரை,  ஒரு பெண்ணை, ஒரு இளங் குழந்தையை, கொடூரமாக கொல்கிறான். அந்தச் செயலில் எந்த உறுத்தலும் இல்லாமல் களி வெறியுடன் ஈடுபடுகிறான். அங்கே அப்போது அனைத்து தருமங்களும் கொல்லப்படுகின்றன. என்னவாயிற்று அவனுள் இருந்த மனிதத்திற்கு?  ஏன் விலங்கினும் கேடாக நடந்துகொள்கிறான்? அவனுள் வாழ்ந்த அறத்தேவதை எங்கு சென்று ஒளிந்து கொண்டாள்? 


   இது ஏதோ ஒரு படை, எங்கோ  செய்த அழிவல்ல. வாதாபி கொண்டான் என்ற பட்டப்பெயருக்கான  சண்டையிலிருந்து, மாற்று நாட்டில்  அமைதி காப்புக்கென செய்யப்பட்ட சண்டை வரை நம் படை வீரர்களும்  அவ்வாறு நடந்து  கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறார்கள்.  உலக அமைதி, சகோதரத்துவம் பேசிய மதத் தலைவர்  வழி நடத்திய படை,     அன்பு, இரக்கம், மன்னிப்பின் நாயகனின் அருள் பரப்ப எழுந்த படை,     அஹிம்சை கருணை இரு கண்களெனகொண்டவரின் வழி வந்த நாட்டின் படை அனைத்தும் இவ்வாறு அநீதிகளை இழைத்தவைதான்.  ஏன் சொந்த நாட்டில் கலவரத்தை அடக்க,  கொள்ளையனை பிடிக்க, தீவிரவாதத்தை அடக்க என  சென்ற படையின் மீது கூட இந்தக்  குற்றச்சாட்டுகள் உண்டு. போர்வீரர்களுக்கு அப்போது என்னவாகிறது?   அவர்கள் அப்போது இறப்பின் கோர வாயின் உள்ளிருந்து நழுவி  வந்தவர்கள் என்பதாலா?  தன்னுடன் போரிட்ட நண்பர்களை இழந்த கோபமா? அடுத்த கணத்தைப் பற்றிய நிச்சயமின்மையா?   கண்ணெதிரே கண்ட இறப்புகள் தந்த விரத்தியா? எதிர் வருபவர்களில் எதிரியை மட்டுமே காணும் அச்சமா?  வெற்றி தந்த பேரகங்காரமா?
     

இவை அனைத்தும்  கலந்த ஏதோ ஒன்று மனிதனின் மனதில் கொடுமையை நிறைக்கிறது. ஆகவே ஒரு சிறந்த அரசு தன் நாட்டை  போரில் வீழாமல்   பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல தலைவன் தன் மக்களை போருக்குள் புகுத்தி விடக்கூடாது. எதோ ஒரு படையின் பிடிக்குள் தன் மக்களை ஆழ்த்திய தலைவன் மக்களுக்கு பெருந்துயரத்தை இழைக்கிறான். நாட்டின் நன்மைக்காக எனச் சொல்லி  ஆயுதம் தூக்கும் ஒருவன்  போரை தன் நாட்டின் மக்கள்மீது சுமத்துகிறான். எதிரி ராணுவத்திற்கு தன் கொடுமைகளை செய்ய அவன் அழைப்புவிடுக்கிறான். மக்கள் நடுவே அமர்ந்துகொண்டு சில வீரர்களை அனுப்பி எதிரிக்கு சேதம் விளவித்து போராடும் தலைவர்கள் நாம் வீர நாயகர்கள் எனக் கொண்டாடுகிறோம். அவர்களை சிங்கங்கள்  என நாம் பாராட்டி சிலிர்த்துக்கொள்ளலாம். ஆனால் தன் நாட்டு மக்களை எளிய முயல்களாக  எதிரிப்படையின் வேட்டை நாய்களுக்கு உணவாக்கியவர்கள்  அவர்கள்.    நாம் ஒரு வீர நாயகனை கொண்டாடும் முன்னர் அவன் செய்கையால எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள், எத்தனைபேர் கொடும் துயரங்களை அனுபவித்தார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவனால்  கொல்லப்பட்டவர்கள், அவனை கொல்வதற்காக அவன் எதிரிகளால் அழிக்கப்பட்டவர்கள் என இருபக்கமும் விழுந்த பலர் பிணங்களின் மேல்தான் ஒரு வீர நாயகன் அமர்ந்திருக்கிறான்.

    அனைவருக்கும் நன்மைதரும் போர் என்ற ஒன்று இல்லவே இல்லை. அதே நேரத்தில் போர் நம் மீது திணிக்கும்போது வேறு வழியில்லை நாம் போரிட்டுதான் ஆகவேண்டும். ஒரு நல்ல தலைவன் போரை தவிர்ப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்தபிறகு, அனைத்து மக்களின் நன்மைக்காக அவர்களின் ஒப்புதலைப்பெற்றுக்கொண்டு தான் போருக்கு செல்ல வேண்டும். முழு வெற்றிக்கு சாத்தியமிருக்கிறதா என ஆய்ந்து தெளிந்தபின்னர்தான் அவன் போரை துவக்க வேண்டும்.    ரைவதகன்  முதலில் தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமால், திறனில்லாம, போரில் ஈடுபட்டு, தன் மக்களை போரில் பலிகொடுத்துவிடுகிறான். அதே ரைவதகன் தன் ஆற்றலை பெருக்கிக்கொண்டு போரில் வெற்றி பெறுகிறான். ஆக போரில் நுழையும் ஒவ்வொரு தலைவனும் தன் சொந்த  விருப்பு வெறுப்புகளுக்கோ அல்லது வீண் அகங்காரத்திற்காகவோ,  வேறு வழிகளை பரிசீலிக்காமலோ இருத்தல் மிகப்பெரிய தவறு ஆகும்.வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதில் மட்டும் அறத்தை காப்பதற்கென்று, தன் மக்களை காப்பதற்கென்று மட்டுமே ஒரு போர் நடத்தப்படவேண்டும்.

தண்டபாணி துரைவேல்
Posted by ஜெயமோகன் at Tuesday, October 27, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பிழைகள்

தேரோட்டி -5

இனிய ஜெயம்,


மற்றொரு கூர்மையான அத்யாயம்.

உண்மையில். தெரியாமல் செய்துவிட்டேன் என்ற சொல் ஒரு மாபெரும் பொய். தான் இன்னது செய்கிறோம் என்று செய்யும் கணத்தில் அறியாத ஒரு அகமும் இல்லை. இது என்னிலிருந்து எப்படி வெளிப்பட்ட்டது. நானா இதை செய்தேன் என்று ஆச்சர்யம் வேண்டுமானால் கொள்ளலாமே அன்றி தெரியாமால் மட்டும் செயா முடியாது.

இதுதான் கதன் கேள்விஇக்கு அர்ஜுனனின் பதிலின் சாரம்.

'' இவர்கள் பிழையீடு செய்ய ஏன் இவ்வளவு தொலைவு வருகிறார்கள்?''

'' காரணம் இத்தனை தொலைவு சென்றே அந்த பிழையை செய்திருக்கிறார்கள்''

தெய்வங்களே வந்து தாண்டித்தாலன்றி இவர்களின் அகம் ஆறாது. எப்பேர்ப் பட்ட பிழை.

எனில் கால் தவறி இறந்தவர்கள், அந்த தண்டனை கூட கிடைக்காது எனும் அளவு பெரும் பிழை செய்தவர்கள்.

தெய்வங்களும் தண்டனை தர மறுதலிக்கும் அப் பெரும்பிழை எது.

ஆற்றவே ஒண்ணாத எட்டாவது பிழை.
கடலூர் சீனு
Posted by ஜெயமோகன் at Tuesday, October 27, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, October 26, 2015

தேரோட்டி.-3


இனிய ஜெயம்,

இன்றைய அத்யாயம் கதன் வழியே அன்றைய மதுராவின் சமூகமும், அரசு குடிகளும், அதன் அரசியல் செயல்திட்டமும், உள்ளுறையும் நீலன் மீதான பொறாமையும் என அர்ஜுனனுக்கு [அவன் யார் என்று அறிந்தே] உரைப்பதன அத்யாயமாக இருந்தாலும், இன்றைய அத்தியாத்தின் துவக்கமும் முடிவும், இதை தனித்ததொரு சிறுகதை போல காட்டுகிறது.

குறிப்பாக அர்ஜுனன் யானைக் கூட்டத்தின் இருப்பை அறியும் சித்திரம். விழிக்கையில் அர்ஜுனன் பார்க்கும் முதல் புறம்காட்சி அவனது அகத்துள் இறங்கும் விதம்.முதலில் அதன் ஒலியை கேட்டு அவன் உடல் விழிக்கிறது, அதன் மணத்தில் அவனது புலன்கள் விழிக்கிறது, விழி நீவி நீவி காட்சி விரிய, அவன் உள்ளம் விழிக்கிறது. இந்த வரிசையில் எங்கும் அவன் எண்ணம், பிறக்க வில்லை.

உள்ளம் விழித்த கணம் அவன் இருப்பை தித்திப்பாக உணர்கிறான். தித்திப்பு என்ன ஒரு சொல் தேர்வு. இனிப்பு என்ன ஒரு அபத்தாமான சொல். ஆம் தித்திப்பு என்பதே உணர்வைத் தைக்கும் சொல்.

அர்ஜுனனின் முதல் எண்ணமே, சித்ராங்கதையை அழைத்து வந்து விடுகிறது.  இழப்பதன் இனிமைக்குப் பெயர்தான் ஏக்கமோ ?

இறுதி வரிகள் கவித்துவமும், தியான கணமும் கச்சிதமாக முயங்கிய தருணம்.

வெளியே பெருங்களிறு ஆழ்ந்த குரலில் பிளிறியது. அதன் மந்தை தொடர்ந்து சென்று மறையும் ஒலிகள் கேட்டன. காட்டுமரக்கிளைகள் மெல்ல ஒடியும் ஒலி. பறவைகள் எழுந்து கலைந்து கூவியமரும் ஒலி. பின் காடு அமைதியடைந்தது. மீன்கள் ஆழ்ந்திறங்கி மறைந்த சுனை என. ஆழத்தில் மீன்கள் நீராக மாறிவிடுகின்றன என்று இளவயதில் கதைகளில் அவன் கேட்டிருந்தான். ஆழம் அலைவடிவுகொண்டு விழிபூண்டு எழுந்து மீனாகி வந்து வானையும் உலகையும் நோக்கி மீள்கிறது.

 இனிய ஜெயம்,

உங்களது எழுத்தில் மிகத் தனித்துவமான விவரணைகளில் தலையாய காட்சிகளில் ஒன்று இது. உங்கள் படைப்புத் திறன் மிதித்து ஏறி உயரும் மற்றொரு படி.
 
கடலூர் சீனு
Posted by ஜெயமோகன் at Monday, October 26, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சாட்டையடி (காண்டீபம் 40)


  

   சிறுவயது காலங்களில் திரௌபதியம்மன் கோயில் திருவிழாவை கண்டு வந்திருக்கிறேன்.  அந்த நாட்களில் பத்து நாட்கள் நடைபெறும். ஊர் முழுக்க திருவிழாவில் பங்கு கொள்ளும். தினமும் தெருக்கூத்து நடைபெறும்.  ஒருநாள் தீமிதி விழா நடக்கும். அன்று காலை அரவான் பலி கொடுக்கும் நிகழ்வு, பயமும் ஆர்வமும் மனதில் நிறைந்திருக்க சென்றூ பார்ப்பேன். இளைய பாண்டவர்கள் ஐவர் மாய்ந்துபோகும் படுகளக் காட்சி நடுக்கமூட்டுவதாக இருக்கும். மாலை ஊரில் உள்ள பெருமபாலானோர் தீ மிதிப்பர்கள். 


     நீண்ட காலம் கழித்து ஒரு தீ மிதி திருவிழாவுக்கு சென்றிருந்தேன்.   பக்தர்கள் தீமிதித்து  சென்று  திரௌபதி அம்மன் முன்னே சென்று குழுமினார்கள். சிறிது நேரத்தில் பளீர் பளீர் என்ற சத்தம் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. நான் கூட்டத்தில் நுழைந்து என்னவென்று பார்த்தேன்.   நான்கு நபர்கள்  கையில் சாட்டையுடன் இருக்க பக்தர்கள் இரு கையை பிணைத்து முன் நீட்ட அவர்கள் சாட்டையால் வேகத்துடன் அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த சத்தமே அவர்கள் அடையும் வலியை காட்டியது. தீ மிதித்த பக்தர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் இப்படி சாட்டையடி வாங்கிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே என் கைகளும் பிணைத்துக்கொண்டு முன் நீண்டது. பளீர் பளீர் என்று மூன்று சாட்டை அடிகள். கைகளில் சாட்டையின் அளவை காட்டும் மூன்று தடிப்புகள்  உடன் தோன்றின. கைகள் வலித்துக்கொண்டிருந்தன.

ஆனால் வலி தித்திப்பதை அன்று உணர்ந்தேன். ஏதோ ஒரு கடனில் ஒரு பகுதியை திரும்பக் கொடுத்தைப்போன்று மனதில் ஒரு நிம்மதி.   திரௌபதி அம்மன் சிவந்த முகத்துடன் கோபம் கொப்பளிக்க நின்றுகொண்டிருந்தார். ஆண்களால் ஆண்டாண்டு காலமாக அடக்கப்படும், அவமதிக்கப்படும் பெண்ணிணத்தின் பிரதிநிதியென அம்மன் இருப்பதைப்போல் தோன்றியது. ஆணிணத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் நான் கைகூப்பி மன்னிப்பு கேட்டு தண்டனை நாடி அந்த அடிகளை வாங்கிக்கொண்டேன் எனச் சொல்லலாம்.
    

 நாம் எத்தனை எத்தனை   பிழைகள் செய்கிறோம். “குருதிப்பிழை, வஞ்சப்பிழை, களவுப்பிழை, பெற்றோர்பிழை, ஆசிரியர்பிழை, பெண்பிழை, பிள்ளைப்பிழை என பிழைகள் ஏழு"  என   வெண்முரசு  சொல்கிறது.  அது   தன் உயிரைப் பயணம் வைத்து பிரபாச தீர்த்தத்தில் நீராட செல்லும் பக்தர்களையும்  காட்டுகிறது.    எவருக்கும் தெரியாது என நினைத்து பல தவறுகளை செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் நம்முள்  வாழும் பிரபாசர். கையில் துலாக்கோலுடன் இருந்து நம் செய்கைகளின் அறத்தை நிறுத்துக்கொண்டு இருக்கிறார். அவரை நாம் அறிவோம்.  அவரின் அறக்கோபத்த்ற்கு அஞ்சுகிறோம்.

 பிரபாசதீர்த்த யாத்திரை அளவுக்கு இல்லையென்றாலும் இன்றும் உயிரைப் பணயம் வைத்து சிரமமான பாதையில் பக்தி யாத்திரை செல்லும் பலரைப்பார்க்கலாம். பக்தர்கள் தம்மை சிரமத்திற்கு உள்ளாக்கிக்கொள்ளும் பல சடங்குகளை மேற்கொள்கின்றனர். அலகு குத்திக்கொள்ளுகிறோம்.முதுகில் கொக்கிமாட்டி அதில் கயிறுகளை கட்டி பெரிய எடைமிகுந்த  வண்டிகளை இழுக்கிறோம்.  கத்தியால் உடம்பில் அடித்துக்கொள்கிறோம். காடுகளிலும் மலைகளிலும் மிகச் சிரமமான யாத்திரை மேற்கொள்கிறோம்.  இந்த அறிவியல் யுகத்திலும் நாம் இவற்றை தொடர்வது, ஒருவகையில் தெரிந்தும் தெரியாமல் தாம் செய்தபல தவறுகளுக்கு பிராயச்சித்தம் என்பதை  நம் ஆழ்மனது அறிந்திருக்கிறது என்பதை குறிக்கிறது என நான் கருதுகிறேன்.

தண்டபாணி துரைவேல்
Posted by ஜெயமோகன் at Monday, October 26, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

உணர்வெழுத்து

வெண்முரசின் சிறப்பம்சங்களில் ஒன்று மனித மனம் கொள்ளும் உணர்வுகளைக் கச்சிதமான வார்த்தைகளாக்குவது. அது அத்தனை எளிதல்ல. அது அகத்தைப் புறமாக்குவது. அனுபவங்கள் வார்த்தைகளாகும் போது நீர்த்துப் போவது தான் இயல்பு. அவ்வாறல்லாமல் மேலும் கூர்மையாக்கி, அதே அனுபவத்தை மீட்டு அளிப்பது என்பது மகத்தான சாதனை. வெண்முரசு அதைச் சத்தமேயில்லாமல் செய்து செல்கிறது.
காண்டீபம் 38 ம் அத்தியாயத்தில் அர்ஜுனன் கூற்றாக வரும் இவ்வரிகள் அத்தகைய ஓர் சாதனையின் சான்று. “வெகு நாட்களுக்குப் பின் தன் இருப்பு தித்தித்திருப்பதை உணர்ந்தான். அக்காட்சி எதனுடனும் தொடர்பு கொள்ளவில்லை. எனவே எப்பொருளும் கொள்ளவில்லை. முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா? ஆம். இருத்தல் என்பதன் தூய இன்பத்தை அது காட்டுகிறது. இன்பங்களில் தலையாயது உள்ளேன் என்றுஉணர்வதே.” 

என்ன ஒரு வரிகள்!!! அர்ஜுனன் உலூபியை வெல்ல ஏழு பாதாளங்களில் மேலேறி வரும் அத்தியாயத்தில் கடைசி உலகத்தின் மையத்தை நோக்கிச் செல்லும் போது அவன் ‘இங்குள்ளேன்’ என்று கூறுவான். ‘இங்கிருக்கிறேன்’, ‘உள்ளேன்’ என்று பல இடங்களில் ஒரு சொல்லாக இவ்வார்த்தைகள் வெண்முரசு முழுவதிலும் வந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் அவை எனக்கு முழுப் பொருளையும் அளிக்கவில்லை. இத்தனை நாட்களிலும் ஏன் அச்சொற்கள் அவ்விடத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன என்று குழம்பிக் கொண்டே இருந்திருக்கிறேன். இன்று அதற்கு ஒரு தெளிவு கிட்டியது.

‘உள்ளேன்’ என்ற சொல், இருத்தல் என்பதை மட்டுமே உணர்ந்த சித்தமாக, அசையாமல் அச்சொல்லாகவே மாறிய ஒன்றாக, அந்தமிலா ஆனந்தத்தில் திளைத்ததாக இருப்பதையே குறிக்கிறது. ‘இங்கிருக்கிறேன்’ என்றோ ‘இங்குளேன்’ என்றோ கூறும் போது அவ்வுணர்வு இன்னும் இன்னும் கூர்மை கொள்கிறது. நிர்மலமான வானை தெய்வங்களும் விரும்பும் அல்லவா!! இந்த நிலையை அடையத் தானே அத்தனை சாதகர்களும் தவமிருக்கின்றனர். சொல்லள்ளி சொல்லள்ளி சொன்னதெல்லாம் இந்த ஒற்றைச் சொல்லாகத் தானே!! 

என்னளவில் ஓங்கி உயர்ந்த பனி மூடிய மலைகள் என்னில் இந்த தூய இன்ப நிலையைக் கிளர்த்தியிருக்கின்றன. காண்டீபத்தின் இந்த வரிகள், பனி மூடிய சிகரங்கள் ஆழத்து நீரில் முகம் பார்த்து, தன்னொளியால் நடு இரவை அந்தியாக்கிய தருணத்தில், திரை விலகி வெளிவந்த பிறை நிலவைக் கண்டு மெய்மறந்து நின்ற அந்த குளிர் இரவின் அனுபவத்தை அப்படியே இவ்வரிகள் எனக்கு மீட்டளித்தன.

பார்த்தன் அவ்வுணர்வை ஒரு தித்திப்பாக உணர்ந்தேன் என்கிறான். கடலூர் சீனு சொல்வதைப் போல என்ன ஒரு அருமையான சொல் தேர்வு!! இனிப்பை உண்ணும் போது ஒவ்வொரு இனிப்பின் தன்மைக்கு ஏற்ப தித்திப்பை நம் உணவுப்பாதையின் ஒவ்வொரு பகுதியில் உணர இயலும். தாமிரபரணி நீரைக் குடிக்கையில் தித்திப்பை நெஞ்சில் உணரலாம். நெல்லியின் தித்திப்பு அடித்தொண்டையில். தித்திப்பு என்பது அனுபவிக்கத் துவங்குகையிலேயே மறையும் உணர்வு. நினைவில் மீட்ட இயலா உணர்வு. இனிப்பை நினவுறலாம், மனத்தால் இனிப்பு தரும் சுவையை உணர்ந்து நாவூறலாம். ஆனால் தித்திப்பை அனுபவிக்க மட்டுமே இயலும். இங்கே அவன் உடலே நாவாக மாறி தித்திப்பை அனுபவிக்கிறான். 

ஆனந்தம் என்பது அப்படியே இருக்குமா என்ன? அல்லது அந்த ஆனந்தத்தில் தான் நிலைத்து விட இயலுமா!! மலையுச்சியிலேயே வாழ இயலாது என்று தானே வெண்முரசும் சொல்கிறது. சில கணங்களே நீடிக்கும் அவ்வுணர்வு நமக்குத் தரும் ஆற்றல் அபரிமிதமானது. அக்கணங்களுக்குப் பிறகு வருவது ஓர் ஏக்கம்!!! இனிய ஏக்கம்!! ‘முழு மகிழ்ச்சி என்பது உடனே எழும் நினைவுகளுடன் இணையாத அழகிய காட்சியால் ஆனதுதானா?’. இக்கேள்வியிலேயே பதிலும் உள்ளது. நினைவுகளைத் துரத்தி அழகை அனுபவிக்க இயலுமா? தித்திப்பு என்ற சொல்லை உணர்ந்த தருணத்திலேயே இணைத்து அவன் சித்ராங்கதையை நினைவு கூறுகிறான். மனம் பொங்கி வழியும் போது அதைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணையைத் தேடும். பெரும்பாலும் அத்துணை மீண்டும் வரச் சாத்தியமில்லாத இறந்த காலத்திலேயே இருப்பது மனதின் மந்தணம். இழப்பின் ஏக்கம் என்பது மனதின் சிவமூலி. 

இவ்வரிகளைப் படிக்கும் போதே மனதில் வந்த மற்றொரு தருணம், மழைப்பாடலில் தேவயானியின் மணிமுடி வழங்கப்பட்ட குந்தியின் மகிழ்ச்சி!! முடிசூடிய மறுநாள் காலை கங்கைக்கு ஓர் சடங்குமுறைக்காகச் செல்லும் குந்தி உணரும் மகிழ்ச்சியைப் பற்றிய பின்வரும் வரிகள். 

“மகிழ்ச்சி என்பது இப்படித்தான் இருக்கும்போலும். சிந்தனைகள்   இல்லாமல். உணர்ச்சிகளும் இல்லாமல்.கழுவிய   பளிங்குப்பரப்பு போல துல்லியமாக. இருக்கிறோமென்ற உணர்வு  மட்டுமே இருப்பாக.ஒவ்வொன்றும் துல்லியம் கொண்டிருக்கின்றன. ஒலிகள், காட்சிகள், வாசனைகள், நினைவுகள்.அனைத்தும்   பிசிறின்றி இணைந்து முழுமையடைந்து ஒன்றென நின்றிருக்க   காலம் அதன்முன்அமைதியான ஓடை என வழிந்தோடுகிறது. ஆம், இதுதான் மகிழ்ச்சி. இதுதான்.
மகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன? கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோலநிகழவேண்டும். எப்படி இது   நிகழ்ந்தது என்ற வியப்பையும் அனைத்தும் இப்படித்தானே என்ற  அறிதலையும்இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல்அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின்மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம்போல. இந்தக்  காலைநேரம் போல.” 
.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
Posted by ஜெயமோகன் at Monday, October 26, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

குளிர்ந்தவனும் கொதிப்பவளும்.



பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே-என்னும் கணியன் பூங்குன்றனார் வரிகளை சொல்வது என்பது மிகஎளிது. இந்த வரிகளை வெறும் வரிகளாக சொல்லிச்செல்பவனை அகங்காரம் பிடிப்பதுபோல் வேறு ஒருவரை அகங்காரம் பிடிக்காது. அகங்காரம் இருக்கும்வரை இந்தவரிகளை தனக்கான வரிகளாகக்கொள்ளமுடியாது. அகங்காரம் அழிந்தவனுக்கானது இந்த வரிகள்.

பெரியோர் சிறியோர் இடையில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு பறவையின் இருசிறகுப்போன்றவர்கள் கண்ணனும் அர்ஜுனனும், கண்ணனோடு அர்ஜுனன் எப்படி இருப்பனோ அப்படியே கதனோடும் இருக்கிறான். உடல், உள்ளம், சிந்தனை என்று அனைத்திலும் பயிற்சியை கொண்டு அதனதனிலிருந்து உள்ளத்தை பிரித்துவைத்திருக்கும் அர்ஜுனன், பிரபாரசத்தீர்த்தத்திற்கு கதனை அழைத்துச்செல்கிறேன் என்பதும், அங்கு செல்லும் வணிகளில் ஒருவனாகவே தன்னை ஆக்கிக்கொள்வதிலிருந்தும் தான் ஒரு மீமானிடம் இல்லை என்பதை நிறுவிச்செல்கிறான். அங்காரம் இன்மையின் வடிவமாக ஒழுகிச்செல்கிறான்.  நான் ஒரு எளிய யாதவன் என்ற கதனின் அகத்திற்குள் நுழைந்த அர்ஜுனன் கதன் தனிமையை அகற்றுவதை நினைத்துப்பார்க்கையில் வந்து கணியன் பூங்கன்றன் சிரிக்கிறார்.

காட்டில் கன்றுகள் மேய்க்கும் கதன் போன்ற எளியவர்கள், தனிமைப்படுத்தப்படும்போது அவர்கள் அஞ்சி அஞ்சி மீண்டும் காட்டின் ஆழத்திற்கே கன்றுகளுடன் செல்வார்கள். அந்த சிற்றுயிரையும் எங்கும் நிறைந்த நீலன் வரலாற்றில் கால்பதிக்க வைத்துவிடுகிறான். தான் எதுவும் அல்ல என்ற தனிமையில் தவித்து துயிலும்போது அவனுக்கும் ஒரு படகுவந்து வழிக்காட்டி கரை சேர்க்க உதவுகிறது. பிரபாசதீர்த்தத்தில் பாவம் போக்க வழி செய்கிறது.

பிரபாசத்தீர்த்தத்தில் அர்ஜுனன் பாவம்போக்கும் நீராடலை இத்தனை கூர்மையாக ஆழமாக விளக்குவீர்கள் என்று நினைக்கவில்லை. பிரபாசத்தீர்த்தம் குளிரும் சுடும் என்று இரண்டாகக்காட்டி, அர்ஜுனனுக்கு தலையில் குளிர்ந்தது, தோளில் சுட்டது என்பதைப்படித்து உறைந்துப்போனேன்.

தருமனை கதன் சந்திக்கும்போது, பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்திப்போல அல்ல எளிய குடும்பத்தலைவன்போல் இருந்தான் என்று சொன்ன இடத்தில் சென்று நின்று இன்று அவனைப்பார்க்கிறேன். மனம் விம்புகிறது ஜெ. அர்ஜுனன் ஒராண்டு தீர்த்தப்பிரயாணம் செய்யவேண்டும், அந்த ஓராண்டு, அர்ஜுனனுக்கு உரியது, திரௌபதி தருமனுக்கு என்றாகும்போது இதழில் புன்னகைக்காட்டும் தருமனை இன்று நினைக்கையில் எண்ணங்களின் எடை ஏறி உள்ளம் கனக்கிறது. புருவின் உடலோடு அசுருபிந்துமதியுடன் வாழும் யயாதியின் உள்ளம் புருவின் உள்ளமாக மாறிவிட முடியுமா? மகனின் உடலோடு தந்தையின் உள்ளத்தோடு வாழும் கொடுமை எத்தனை பெரும் கொடுமை. அர்ஜுனன் இந்திரபிரதஸ்தத்தைவிட்டு கிளம்பிய நாள்முதல் தருமன் ஒரு யயாதி அல்லவா? பிரபாசதீர்த்தத்தின் நீர் அர்ஜுனன் தலையில் குளிரென விழுந்தது என்றபோது அது எனக்கு நீராக தெரியவில்லை. தருமனே தந்தையாகி,நீராகி அவன் தலையில் வழிந்ததுபோல் உள்ளது.

முடிந்தது பாவம் என்று பெரும்மூச்சோடு திரும்பும்போது பிரபாசதீர்த்தத்தின் கொதிநீர் அலை  அவன்தோள்களில் அறைந்தது என்றபோது முன்னமே மூர்ச்சை ஆகி விழுந்த வாசகனை தண்ணீர்தெளித்து எழுப்பி தெளியவைத்து அடித்தது மயங்கவைத்தபோல் உள்ளது. உண்மையில் பிரபாசத்தில் அர்ஜுனன் கழுவவேண்டிய பாவம் அன்று திரௌபதியை கொதிக்க வைத்த பாவத்தை அல்லவா?. திரௌபதி அகத்தை கொதிக்க வைத்த பாவத்தை கழுவவது என்ற அறம் செயல்படும்போதே, அண்ணன் தந்தையாகிவிடும் அற்புதமும் நிகழ்கின்றது வாழ்வில். இந்த வாழ்க்கை கிளைக்காத இடம்தான் என்ன? நாட்டைவிட்டு வெளியேறும் தம்பியின் முகில் புன்னகைவைத்த கண்ணகள். அவன் தலையில் தந்தையின் கண்ணீராய் வழிவது எப்படி?   எண்ணங்கள், எண்ணங்களில் இருந்து உணர்வுகள். உணர்வின் நீராழத்தில் மானிட உயிர்கள். நீந்துகின்றன, துள்ளுகின்றன, மறைகின்றன. மீண்டும் மீண்டும் வெளிவந்து அலையாகி வான் பூமியை கண்டுக்கொள்கின்றன. எத்தனை விரிந்து வாழ்க்கை.

தண்ணீரும் வெந்நீரும் பார்வைக்கு ஒன்றுபோல்தான் உள்ளது. தண்ணீருக்குள் வாழும் அனைத்து ஜீவனும் உயிரோடு இருக்கிறது. வெந்நீரில் உள்ள நுண்ணுயிர்கூட செத்துவிடுகிறது. பாவம் பார்வைக்கு தண்ணீரா வெந்நீரா என்பது தெரியவில்லை. சுடும்போதுதான் வெந்நீரின் கொதிநிலை அறியமுடிகிறது. பாவத்தின் தாக்கமும் சுடும்போதுதான் அறியமுடிகிறது. கொதிநீர் அலை அறையும்போது அர்ஜுனன் பக்கத்தில் உள்ளவன் அலறிவிழுகிறான், அர்ஜுனன் அசையாமல் நிற்கிறான். அர்ஜுனன் திரௌபதியை எத்தனை ஆழமாக புரிந்து ஏற்றுக்கொள்கிறான்.

தருமன் எளிய குடும்பத்தலைவன் போல் நிற்பது எளிய சொற்றொடர் என்றாலும் எத்தனை பெரிய ஆழம் மிகுந்தது. இந்த பிரபாச தீர்த்தத்தில் மூழ்கிய பின்பே மூத்தவர் முகத்தை ஏறிட்டு நோக்கமுடியும் என்று அர்ஜுனன் சொல்வது எத்தனை அர்த்தம் நிறைந்தது. பெண்பிழைக்காக அர்ஜுனன் நீராட சென்றாலும், இது தந்தைபிழை என்பதும் எத்தனை பொருந்தும்.

//“நானும் நீராடியாகவேண்டும்” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாதது கண்டு ”இது தந்தைப்பிழை “ என்றான். அர்ஜுனன் “அதில்லாத மானுடர் எவர்?” என்றான்//-காண்டீபம்-40.

கோக்க மறந்த முத்து -1

பெரிதாகிய புவனத்தைப்படைக்கும் பிரமன் அதைவிட பெரியது இல்லை என்று இறுமாந்து புன்னகைக்க அன்னை வாணி தன்கை விழிமணிமாலையின் ஒரு மணியில் இருந்தே இப்புவியை எழுமுறை சுற்றிவைத்துவிடும் புனைவெனும் ஒளியாடை நெய்கிறாள் என்பது எத்தனை பெரிய உண்மை. ருத்ராட்சமாலையை விழிமணிமாலை என்றது எண்ணி எண்ணி இன்புற வைக்கிறது.   
//இப்புடவி சமைத்த பிரம்மன் தன் துணைவியை நோக்கி புன்னகைத்து இதைவிட பெரிதொன்றை உன்னால் ஆக்கமுடியுமா என்றார். முடியும் என்று அவள் தன் கையிலிருந்த விழிமணிமாலையின் ஒரு மணியை எடுத்து புனைவெனும் ஒளியாடையை உருவாக்கி புடவியை அதில் ஏழுமுறை சுற்றி அவன் முன் வைத்தாள் என்று கதைகள் சொல்கின்றன. அதன் பின் தன் படைப்பை தான் அறிவதற்கு பிரம்மன் வெண்கலைச் செல்வியின் ஏடுகளை நாடுகிறான் என்கிறார்கள்//-காண்டீபம்-37

கோக்க மறந்த முத்து -2

அவர்போல இருக்கிறார் அவர்போல இருக்கிறார் என்று எண்ணவைத்த தருமன் அவர்போல நடக்கிறான். அவர்போல உட்காருகிறான்.
 கால்களை நீட்டி நீட்டி வைத்து கைகளை குறைவாக வீசி நடந்தார். அவர் தன் அரியணையில் அமர்ந்ததும்கூட தளர்வுகொண்டவர்களுக்குரிய எடை தாழ்த்தி இளைப்பாறும் பாவனைகள் கொண்டதாக இருந்தது. அவரது உடலின் தளர்வல்ல அது, உள்ளத்தின் தளர்வும் அல்ல. எண்ணங்களின் எடை அது என உணர்ந்தேன்.-காண்டீபம்-39

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 
Posted by ஜெயமோகன் at Monday, October 26, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile

Blog Archive

  • ►  2020 (318)
    • ►  December (15)
    • ►  October (3)
    • ►  September (21)
    • ►  August (156)
    • ►  July (119)
    • ►  March (1)
    • ►  January (3)
  • ►  2019 (663)
    • ►  December (9)
    • ►  November (18)
    • ►  October (10)
    • ►  September (41)
    • ►  August (117)
    • ►  July (1)
    • ►  June (69)
    • ►  May (24)
    • ►  April (50)
    • ►  March (95)
    • ►  February (96)
    • ►  January (133)
  • ►  2018 (1465)
    • ►  December (88)
    • ►  November (148)
    • ►  October (124)
    • ►  September (112)
    • ►  August (107)
    • ►  July (140)
    • ►  June (136)
    • ►  May (124)
    • ►  April (148)
    • ►  March (74)
    • ►  February (129)
    • ►  January (135)
  • ►  2017 (1049)
    • ►  December (114)
    • ►  November (118)
    • ►  October (49)
    • ►  September (50)
    • ►  August (117)
    • ►  July (64)
    • ►  June (66)
    • ►  May (85)
    • ►  April (52)
    • ►  March (109)
    • ►  February (112)
    • ►  January (113)
  • ►  2016 (1269)
    • ►  December (77)
    • ►  November (146)
    • ►  October (52)
    • ►  September (109)
    • ►  August (160)
    • ►  July (151)
    • ►  June (14)
    • ►  May (26)
    • ►  April (137)
    • ►  March (104)
    • ►  February (144)
    • ►  January (149)
  • ▼  2015 (1446)
    • ►  December (127)
    • ►  November (105)
    • ▼  October (83)
      • அழகின் எதிர் நிகர்
      • மலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...
      • ஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)
      • வில்லும் அகிம்சையும்
      • தொன்மங்களின் இணைவு
      • வெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்
      • அதிலும் அப்பாலும் நிற்பவள்.
      • யானைகள்
      • போரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)
      • பிழைகள்
      • தேரோட்டி.-3
      • சாட்டையடி (காண்டீபம் 40)
      • உணர்வெழுத்து
      • குளிர்ந்தவனும் கொதிப்பவளும்.
      • மகிழ்வும் சோர்வும்:
      • பீஷ்மரின் அறம்
      • பகடை
      • ஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)
      • ஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்
      • அடுக்குகள்
      • வெண்முரசில் யோகசக்கரங்கள்
      • ஐந்துமுகத்தழல்
      • இருத்தல் எனும் இன்பம்
      • நெளிவு
      • அபிஷேக நெய் பாத்திரம்
      • மகன்
      • தேரோட்டி.-3
      • ஐந்து
      • மாயை
      • என்றும் முடியா நெடும் பயணம்
      • கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள்
      • அன்னை
      • பப்ருவாகனன்-பெயர் விளக்கம்:
      • மழைநாக்கு
      • முலைக்கண்
      • மகாவாக்கியம்
      • பொன்னில் மயங்கும் பெண்
      • ஐந்து
      • பிறவிப்பெருங்கடல்
      • நிருதன்
      • பொன்நாக விருட்சம்
      • அர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்?
      • அர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்?
      • அறிவு சிந்தனை செயலாக்கம்
      • ஞானபீடச்சக்கரம்
      • ஆசிரியரும் குருவும்
      • மாறுதல்
      • மிதந்தலைபவனின் தேடல்
      • கவசங்கள்
      • ஆசிரியன்
      • அன்பின் மொழி
      • விடுபடல்கள்
      • மிதப்பவை
      • மிதந்தலையும் தீவுகள்:
      • அழகின் அழகியல்
      • வெண்முகில்நகரம்
      • முதல்நடம் 7
      • பித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:
      • Kandeepam
      • போர்
      • பாலையின் பால்
      • கணங்களின் மாலை
      • போரில் சாதுரியம்:
      • புற்று
      • முன்னோடிகள்
      • பிரிவைத் துரத்தல்:
      • முகம் தெரியாதவர்கள்:
      • முகம்
      • அர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:
      • அசையும் உடலும் அசையா அகமும்
      • கூரிய திருப்பங்களும் வளைவுகளும்
      • எண்ணங்களை கடத்தல்
      • கதையின் தேவதை
      • அரவான்
      • காமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:
      • நெளிதல்
      • தன்னையறிதல்
      • பலிக்கொடை:
      • காதலர்களுக்கு மட்டும்
      • அடைதலும் இழத்தலும்:
      • அர்ஜுனனின் பயணம்
      • உலகு சமைத்தல்
      • புராணங்களின் ஈரேழு உலகங்கள்
    • ►  September (70)
    • ►  August (79)
    • ►  July (69)
    • ►  June (84)
    • ►  May (131)
    • ►  April (178)
    • ►  March (167)
    • ►  February (152)
    • ►  January (201)
  • ►  2014 (808)
    • ►  December (188)
    • ►  November (153)
    • ►  October (166)
    • ►  September (133)
    • ►  August (43)
    • ►  July (124)
    • ►  January (1)
Simple theme. Powered by Blogger.