Friday, May 6, 2016

களியாடல்:



இரண்டாவது முறையாக வெண்முரசில் வருகிறது இந்த அசைவற்ற நீரில் அகத்தைப் பிரதிபலிக்க வைக்கும் 
தரங்கபிரஸ்னம் என்னும் சோதனை. முதற்கனலில் அக்னிவேசர் சிகண்டி உட்பட தன் மாணாக்கர்களுக்கு வைக்கும் சோதனை. ஒரு மாணவன் கூட, துரோணர் உட்பட, இச்சோதனையில் வெற்றி பெற்றதில்லை. நிலையான நீர்கொண்ட யானத்து நீரில் நீட்டும் விரலில் இருக்கும், நீட்டுபவனின் அகம் கொண்ட துடிப்பு. எவ்வளவு சிறிய துடிப்பும் ஏற்படுத்தக் கூடும் நீரில் ஒரு சலனத்தை.

இன்று பீமனும், ஜராசந்தனும் மற்போருக்கு முன் நெஞ்சில் வஞ்சமோ, சினமோ இல்லை என்று நீர் தொட்டு சான்றுரைக்கிறார்கள். சினமும், வஞ்சமும் இல்லையென்றால் அப்போருக்கு நோக்கமும் இல்லை என்றே பொருள். நோக்கமற்ற ஒன்றிற்காகவா மூவரும் கிளம்பி வந்துள்ளார்கள்? உண்மையில் இது ஒரு பிரபஞ்ச தரிசனம். இப்புடவியும் பிரம்மமும் கொள்ளும் அலகிலா விளையாட்டின் ஒரு பகுதி தான் இப்போர். இங்கே இறப்பதும், வாழ்வதும், தோற்பதும், வெல்வதும் எல்லாம் விளையாட்டே. அவற்றுக்கு எந்த நோக்கமும் இல்லை, எந்த காரணமும் இல்லை. அவை நிகழ்கின்றன ஏனென்றால் அவை அவ்வாறு தான் நிகழ்ந்தாக வேண்டும். புடவியின் நெறி வகுத்த பிரம்மனின் நிகழ்வு நதியில் மற்றொரு துளி. அவ்வளவே.

அதற்காகவே மிகப்பெரிய ஒரு களியாட்டின் பகுதியாக இவ்விளையாட்டு நிகழ்கிறது. இது இவ்வாறு தான் நிகழப் போகிறது என்பதற்கு இம்மூவரும் நகர் நுழைந்த விதமே ஆதாரம். அவர்கள் பெண்களுடன் களியாடி, மேலெங்கும் லேபனங்களுடன் தான் நகர் நுழைகிறார்கள். அவர்கள் நிகழ்த்தும் செயல்கள் அனைத்திலும் விழைவு இல்லாத களியாட்டு மட்டுமே இருக்கிறது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்