Friday, May 6, 2016

தந்தையும் தலைவனும்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

தந்தையும் தலைவனும் தண்டிக்கையில் மேலும் அன்பை பெறுகிறார்கள்’ இந்த மாதிரி சில வரிகள் 'வெண்முரசு' அத்தியாயங்களில் 'மின்னித்  தெறிக்கும்' பொழுது,மனம் கொள்ளும் உவகையை எழுத்தில் தெரிவிக்க இயலவில்லை!.சகதேவனுக்கும்,ஜராசந்தனுக்கும் நடக்கும் உரையாடல் "அற்புதம்"
 “நீங்கள் எனக்கு அரசைமட்டும் அளித்துச்செல்லவில்லை தந்தையே. நீங்கள் ஈட்டிய பகைகள் அனைத்தையும் அளித்துச்செல்கிறீர்கள்…” அவன் உடனே தளர்ந்து பெருமூச்சுவிட்டான். “பெரும்பழிகளை எனக்கென விட்டுச்செல்கிறீர்கள். ஆனால் அதை நான் பெற்றுக்கொள்வதே முறை. ஏனென்றால் நான் உங்கள் குருதியிலிருந்து முளைத்தவன்.” “நான் அனைத்துக்கும் ஈடுசெய்கிறேன். நீங்கள் தோற்காத களங்களில் எல்லாம் நான் தோற்கிறேன். உங்களுக்காக குருதியும் கண்ணீரும் கொடுக்கிறேன். மைந்தன் என உங்களுக்குப் புகழும் பெருமிதமும்ஈட்டியளிக்க இயலாதவன்.உங்களுக்கென இதைமட்டும் நான் அளிக்க இயலும்.

“உன் சொற்கள் அனைத்தும் உண்மைதான் மைந்தா. வல்லமை வாய்ந்த தந்தையர் எளிய மைந்தரையே விட்டுச்செல்கிறார்கள்” என்றான். “முளைஎழும் செடிமேல் பாறை என உன்மேல் படிந்திருந்தேன் போலும். நீ என் பிழைகளில் முதன்மையானது போலும்…”

"முலையூற முற்படும் கணமே ஆணுக்கு மண்ணில் பேரின்பம் அமைகிறது. உன் மைந்தனை கையிலெடுக்கையில் அதை அறிவாய்.”

ஆனால் என்னதான் அரக்கனாய் இருந்து கொடுஞ்செயல்கள் பல செய்தாலும் மகன் மேல் காட்டும் பாசத்திற்குமட்டும்  அளவேயில்லை.தன் உயிர் போகப்போவதை முன்கூட்டியே அறிந்து,மகனைக் காப்பாற்ற இளைய யாதவரிடமும்,பீமனிடமும் மற்றும் விஜயனிடமும் நற்சொற்கள் பெற்று 'பெரும் அரணையே' அல்லவா அமைத்துவிட்டான்!.
அன்புடன்,
அ .சேஷகிரி.