Thursday, June 2, 2016

அந்தச் சாளரம்:



சுருதை அன்னையின் மறைவு மிக முக்கியமான ஒரு நிகழ்வு. விதுரர் என்னும் மனிதர் வெறும் அமைச்சராக மட்டுமே எஞ்சப் போகும் நிகழ்வுக்கான அச்சாணி. இன்று விதுரர் தன் தாய் சிவை உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்த சாளரத்தைத் திறக்கிறார். எதிலிருந்து அவர் விலகி ஓடிக் கொண்டிருந்தாரோ, எதில் சென்று அவர் விழுந்து விடக் கூடாது என சுருதையன்னை இத்தனை காலமும் தடுத்துக் கொண்டிருந்தாரோ அதில் சென்று தானாகவே விழுகிறார். வாழ்வின் வெறுமை!! எத்தனை கொடிது!! ஆனால் எத்தனை இனியதும் கூட அல்லவா? அந்த சாளரம் ஒரு வாசல். அதன் ஒரு புறம் உலகம் என்று ஆக்கி, நம்மால் உணர்ந்து நடிக்கப்படும் நிகழ்காலம்; மறுபுறம் காலமென்றே ஒன்று பொருளாகாத, இன்றும், நேற்றும், நாளையும், இருக்கும் அனைத்தும் ஒரு குமிழியாக உருவாகி, வெடித்து சென்று கொண்டிருக்கும் ஒரு பேரொழுக்கு. அப்பேரொழுக்கில் எதற்குத் தான் பொருள் உண்டு... பொருள் என்பதே நிலைத்த ஏதோ ஒன்றைச் சார்ந்து விளக்கப்படுவது தானே!! சார்ந்திருக்க ஒன்றுமே இல்லாத ஒழுக்கு அல்லவா அங்கு இருக்கிறது. அந்த ஒழுக்கைத் தானே விதுரரின் அன்னை சிவை கண்டுகொண்டே இருந்தார். சம்படை அன்னையும் அதையே தான் கண்டு கொண்டிருந்தார் அல்லவா!! கிருஷ்ணன் கூட சம்படை அன்னையிடம் பேசிய பிறகு அவ்வொழுக்கைத் தானும் முற்றறிந்திருக்கக் கூடும். 

அங்கு சென்று அமர்ந்து இவ்வுலகத்தவர் அனைவரையும் கடந்து நின்று பார்ப்பது என்பது மனதை அழிப்பதே!! மனம் அழிவதையே, எண்ணம் என்ற ஒன்று இல்லாமல் ஆவதே சிறந்த தவம் அல்லவா. அதுவே பேரின்பம்!! அதுவே அச்சாளரத்தில் ஒரு முறை அமர்ந்தவரை மீண்டும் மீண்டும் அங்கே வர வைக்கிறது, இறப்பின் இறுதிக் கணம் வரை! விதுரருக்கு அவ்வெண்ணம் வந்து விட்டது என்பதை மைந்தர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். எனவே தான் அவரை இனி இல்லத்திற்கே வர வேண்டாம் என்று கூறுகிறார்கள். காலமெல்லாம் வேலை, அலுவல்கள் என்று ஓடினாலும், இறுதியில் மனமெல்லாம் எது இருந்தது, எது எஞ்சுகிறது என்பது என்றைக்குமே ஆண்களுக்கு புதிர் தான் போல!!! விதுரருக்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையின் ஆத்மா நிச்சயம் மாமங்கலைகளின் உலகில் ஒரு பெரிய அரியணையில் அமர்ந்திருக்கும் என்றே நம்புகிறேன்!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்