Saturday, August 6, 2016

இக்கணம்




இக்கணம் என்பது இதற்கு முந்தைய கணத்தின் காரியம். முந்தைய கணம் அதற்கும் முந்தைய கணத்தின் காரியம். இதையே காரண வரிசையில் யோசித்தால், இக்கணத்தின் காரணம், முந்தைய கணம். முந்தைய கணத்தின் காரணம் அதற்கும் முந்தைய கணம்.

இங்கே ஆக்கியதும்,ஆட்டுவிப்பதும் அழிப்பதும் காரியங்கள். அதை இக்கணத்திற்கு உவமித்துக் கொள்வோம். அப்படி ஒன்று மேற்கூறிய காரியங்களைச் செய்யுமென்றால் அதன் காரணம் (முந்தைய கணம்) என்ன? அப்படி ஒரு காரணம் இருக்குமென்றால் அதை அவ்வாறு இருக்கச்செய்த அதற்கும் முந்தைய காரணம் என்ன? - இதுவே அவ்வரிகள் சுட்டுவன. 

ஆதி காரணம் என்ற ஒன்று இல்லை என்பதே இத்தத்துவத்தின் அடிப்படை. சுழற்சி, எங்கே துவங்கி எங்கே முடியும் என்ற அறுதியில்லா சுழற்சி. ஒவ்வொரு புள்ளியும், கணம் கணமென மாறிக்கொண்டே இருக்கும் சுழற்சி. ஒவ்வொரு கணமும் கண்ணியிலேன கோர்த்து வைக்கப்பட்ட சுழற்சி. ஒவ்வொரு கணமும் ஒரே நேரத்தில் அக்கணத்தின் காரியமாகவும், வரப்போகும் கணத்தின் காரணமாகவும் இருக்கும் சுழற்சி. 

இயற்பியலில் ஹைசன்பர்கின் "நிலையாமை" கொள்கை இதற்கு வெகு அருகில் வரக்கூடியது. ஒரு அணுவின் இருப்பையும், அதன் இயங்கு விசையையும் ஒரே சமயத்தில் துல்லியமாக அளக்க இயலாது என்பது அக்கொள்கை. மற்றொரு வடிவில் குவாண்டம் உலகில் ஒரு அணு துகளாகவும், அலையாகவும் இருக்கக் கூடும். எப்போது துகள், எப்போது அலை என்று துல்லியமாகக் கூற இயலாது.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்