அன்புள்ள ஜெ,
தங்கள் வெண்முரசு தொடரைக் கடந்த ஏப்ரல்
மாதத்தில் இருந்து தினமும் வாசித்து வருகிறேன். பன்னிரு படைக்கலத்தில் தொடங்கி இன்று
வரை தொடர்கின்றேன். வியாசனின் பாதங்களில் என்ற அறிமுகப்பதிவில் தாங்கள் எழுதியிருந்த
“ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை
திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான
ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும்” என்பது என் அனுபவத்தில் சரியாக உள்ளது. நான் இலக்கிய வாசகன் அல்ல. ஆனாலும்
வெண்முரசு என்னை ஈர்க்கிறது. ஏதேனும் ஒரு நாள் படிக்க முடியாவிட்டால் மனதில் ஒரு மகிழ்ச்சி, அடுத்த நாள் படிக்க இரண்டு அத்தியாயங்கள் கிடைக்குமே என்று; இலையில் இனிப்பை ஓரமாக வைத்திருந்து இறுதியில் ரசித்து உண்பது போல.
2014ல் ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒரு அத்யாயமாக
எழுதிவருகிறீர்கள். கதை மட்டுமில்லாமல், ஆன்மீகத்தத்துவங்கள், மானிட சமூக உளவியல், அரசியல், வாழ்க்கை முறை, நகர வடிவமைப்பு, சடங்குகள் என்று பல்வேறு விவரங்களை நுட்பமாக விவரித்து வருகிறீர்கள்.
“எப்படி ஸார் இப்படி முடிகிறது..” என்று ஆரம்பித்தால் அடித்துத் துரத்திவிடுவீர்கள்
என்றாலும் என் மலைப்பைத் தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. “என்கொலோ முடிகின்றதிவட்கே”
என்று நம்மாழ்வாரைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறேன்.
வெண்முரசு தொடரை
நீங்கள் நிறைவு செய்யும்போது அது உலகின் மிகப்பெரிய நாவல் என்ற சாதனை படைக்கும் என்பது
நிச்சயம்.
வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தற்போது எவை பெரிய நாவல்களாக உலக அளவில்
கொள்ளப்படுகின்றன என்று தேடிப்பார்த்தேன். http://www.shortlist.com/ என்ற தளம் Artamène ou le Grand Cyrus என்ற 17ஆம் நூற்றாண்டு ஃபிரன்ச் நாவலை முதலாவதாகவும் (21 லட்சம் வார்த்தைகள்)
பொன்னியின் செல்வன் நாவலை 10 ஆவதாகவும் (9 லட்சம் வார்த்தைகள்) வரிசைப்படுத்துகிறது.
விக்கிபீடியாவிலும் 19.5 லட்சம் வார்த்தைகளுடன் Artamène ou le Grand Cyrus முதலிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் பொன்னியின் செல்வன் விடுபட்டுள்ளது.
சரி நாம் வெண்முரசு
வார்த்தைகளை எண்ணிப்பார்ப்போம் என்று முயற்சித்தேன். ஒவ்வொரு பக்கமாகத் திறந்து, MS Word ல் copy/paste செய்து கொஞ்சம் சுத்தம் செய்தால் வார்த்தைகளின்
எண்ணிக்கை கிடைக்கும். நான்கு அத்தியாயங்களை எண்ணி முடித்த உடனே இது முடியாது என்று
தோன்றிவிட்டது; இன்னும் 700க்கும் மேல் அத்தியாயங்கள் பாக்கி இருக்கின்றனவே! சில இணைய தளங்கள்
இதை ஒரு சேவையாகக் கொடுக்கின்றன; அதில் ஒன்றை முயற்சி செய்து அது வேலை செய்யாததால், வேறு ஏதேனும் வழி கண்டுபிடித்தபின் தொடர்வோம் என்று இதை நிறுத்திவிட்டேன். சரி, இப்போதைக்கு எளிதாகச்செய்யக்கூடியது எதேனும் உண்டா என்று பார்த்தபோது, கீழ்கண்ட தகவல்களைத் திரட்டமுடிந்தது:
வெண்முரசு தொடர் ஆரம்பித்து இன்றோடு
949 நாட்கள் ஆகின்றன. தினம் ஒரு அத்தியாயமாக 786 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன (ஒரே
ஒரு நாள் மட்டும் இரண்டு அத்தியாயங்கள்: 5-Feb-2016 அன்று வெய்யோன்
48, 49ஆம் அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன). முதல் மூன்று
நாவல்களைத் தவிர்த்துவிட்டால், ஒரு நாவல்
முடிந்து சராசரியாக 3 வாரங்களுக்குப் பிறகு அடுத்ததைத் தொடங்கியுள்ளீர்கள். நாவல்வாரியான
தகவல்களை இணைப்பில் கொடுத்துள்ளேன்.
சராசரியாக ஒரு அத்தியாயத்திற்கு 1500 வார்தைகள் என்று கொண்டால்
12 லட்சம் வார்த்தைகளை நெருங்குகிறது! துல்லியமாகக் கணக்கிட ஒரு வழி கண்ட பிறகு திரும்பவும்
முயற்சிக்கிறேன்.
ஷண்முகவேலின் ஓவியங்கள் அருமை. ஒவ்வொரு நாளும் உங்கள் எழுத்தை
ரசிக்கும் அளவுக்கு அவரது ஓவியங்களையும் ரசிக்கிறேன்.
தங்கள் இணைய தளத்தை வடிவமைத்து நிர்வகிப்பவர்களுக்கு என்
வாழ்த்தும் நன்றியும். தளம் எளிமையாகவும் அழகாகவும் உள்ளது.
அன்புடன்,
S பாலகிருஷ்ணன்
சென்னை