வெண்முரசில்
முன்ஜென்மக் கதைகள் வெகு அபூர்வமாகவே வருகின்றன. வெகு நாட்களுக்குப்பிறகு விதுரரின்
பூர்வ ஜென்ம கதை இன்று வந்துள்ளது. அது கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்த ஒன்று
தான். அவர் ஆணிமாண்ட்வ்யரின் சாபத்தால் பூமிக்கு வந்த யம தர்ம ராஜன். எனவே தான்
அவருக்கு மிக இயல்பாக தருமனையும், தருமனுக்கு அவரையும் பிடித்துவிடுகிறது. ஆனால் சற்றும்
எதிர்பாராதது யமனுக்கு சாபம் கொடுத்த ஆணிமாண்டவ்யர் தான் பீஷ்மர் என்பது. பொதுவாக
அறியப்பட்ட பீஷ்மரின் முற்பிறவி என்பது அவர் அஷ்ட வசுக்களில் ஒருவரான பிராபச வசு, வசிஷ்டரின்
குடில் இருந்து காமதேனுவைத் திருடிய குற்றத்திற்காக மண்ணில் பிறந்தவர். இளவயதில் அதைப்
படிக்கையில் தோன்றிய ஒன்று, ஒரு சிறு திருட்டுக்காக இப்படிப்பட்ட ஒரு வாழ்வு
சபிக்கப்படுமா என்பது தான். இன்றைய பகுதியில் யமன் இடும் மறுதீச்சொல் பீஷ்மரின்
மொத்த வாழ்வையுமே வரையறுத்து விட்டது. எப்பேற்பட்ட வார்த்தைகள். ஆம், காலம் முழுவதும் இரு
சரிகளுக்கிடையே முடிவெடுக்கவியலாமல் துலாமுள்ளாக தவித்துக் கொண்டே இருக்கிறார் அல்லவா!! இறுதியில் அம்புப்படுக்கையில்
அவர் படுத்தது மட்டும் தானே நமக்குத் தெரியும், ஆனால் வாணாள் முழுவதிலும் அவர்
தாங்கிய முட்களை எண்ணுகையில் அந்த அம்புப்படுக்கை ஒன்றுமே இல்லை என்றாகி விட்டது.
காவியம் என்பது சமன்வயம் கொண்டதாயிருக்க வேண்டும். பீஷ்மர் மீது ஏற்பட்ட அத்தனை
காழ்ப்பையும் சமன் செய்யும் வகையில் அமைவது இந்த ஒரு சொல் - துலாமுள்ளின் தவிப்பு.
அன்பின் ஜெ, ஆணிமாண்டவ்யர் பீஷ்மரின்
முற்பிறவி என்பது இதற்கு முன்பே உள்ளதா இல்லை அது உங்கள் கண்டடைதலா? உங்கள்
கண்டடைதல் என்றால் அபாரமானது. பிரபாசனின் அம்சமான ஆணிமாண்டவ்யர் என்பது
அனைத்தையுமே இணைப்பது. மேலும் பீஷ்மருக்கும் விதுரருக்குமான உறவும் ஜென்மத்
தொடர்பு என்பதிலும் ஒரு கவித்துவம் இருக்கிறது.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்