திரு
ஜெயமோகன்
நீங்கள்
வெண்முரசு எழுத ஆரமித்தது முதல் இன்றுவரை அதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எழுதப்பட்ட
நாளன்றே படித்து முடித்துவிடுகிறேன். இது விமர்சனமல்ல, எனக்கு இலக்கணத்தில் எந்த தேர்ச்சியுமில்லை,
நான் வெறும் மேலோட்டமான வாசகன் மட்டுமே, சிறந்த வாசகனுமல்ல. இருந்தும் எனது பார்வையை
உங்களுக்கு சொல்லாமல் இருக்கமுடியவில்லை. பொருட்படுத்த தக்கதென்றால் பதில் அனுப்புங்கள்,
புறகணிக்க தக்கதென்றால் அப்படியே செய்க.
இது
மகாபாரத கதை என்பதால் கதை முடிவோ, அதன் பெரிய, முக்கிய நிகழ்வுகளோ மாகாபாரதத்திற்க்கு
மாறாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்ததில்லை. ஆனால் இளைய யாதவன் அவன் இளைய யாதவன்
என்பதாலேயே வெல்லமுடியாடவன், நிகழுமனைத்தும் அவன் ஆடல்களே என திரும்ப திரும்ப வருவதும்.
காரணமே இல்லாமல் திரும்ப திரும்ப திரௌபதிமேல் தெய்வ தன்மையை ஏற்றிவைப்பதும், அர்ஜுனன்
வில்பயின்றதை மிகவிரிவாக எழுதி, கிடைக்கும் வாய்பிலெல்லாம் கல்லையும், புல்லையும் அவன்
அம்பாக்கி பயில்வதை, விளையாடுவதை சிலாகித்து, ஆனால் கர்ணனின் இயாலாமையையும், குறட்டையையும்
அவன் மிகயாக மதுகுடிப்பதாயும் அழுந்த சொல்லி, குலகொடியை சூதில் வைத்த தர்மரை வெறும்
வாய்சொல்லில் திட்டி அரை நாழிகையில் மன்னித்து அறச்செல்வறாக்கிவிட்டு, சூதில் குலகொடியை
வென்று அவமானபடுத்தியவனை 13 ஆண்டுகள் ஆனாலும் மன்னிக்காமல் பலிதீர்க்கும் வஞ்சினமுரைக்கும்
தரப்பை ஞாயவான்களாக்கி. இளைய யாதவனை யாராலும் வெல்லமுடியாதவனாக்கி, அதற்க்கு இணையென்று
நிறுத்தும் கணிகரை விதுரனே கழுவிழேற்ற முடியுமென்று காட்டி, சகுனி அவர்களை தீமையின்
பிம்பமாக வளர்த்து, குந்தியை அப்படி அல்லாமல் விட்டு, தன் ஆணவத்தாலோ, காதலாலோ ஒரு தரப்பை
தனக்கு எதிரியாக வரித்துக்கொண்டு குணகேடடையும் கணவனை பானுமதி வெறுப்பது சரியென்றுகாட்டி,
தன்னை உடமையென்றென்னி பனையம் வைத்து ஆடிய அறச்செல்வரை திரௌபதி அந்த அளவு வெறுக்காமல்
செய்து. இன்னும் நிறைய. (அடைய சாத்தியமான வெறுப்பை(கடுமையான வார்த்தைக்கு மன்னிக்கவும்)
அடைகிறது என் மனம்.)
இந்த
காரணத்தால், இந்த குணகுறையால்(கர்ணனின் மனத்தவிப்போ, துரியோதணனின் உணர்ச்சி கொந்தளிப்போ),
தர்செயாலாலொ, எதாவது நிர்பந்தங்களாலோ மட்டுமே எல்லாம் நிகழ்ந்தது என்றில்லாமல், அவள்
குந்தி, அவன் கண்ணன், அவன் தர்மன், அவன் விஜயன், இவர் கணிகர், இவர் சகுனி, இவர் திருதா,
அவன் விதுரன் என்பதாலேயே எல்லாம் நிகழ்வதாக(சார்புடனும், முன்முடிவுகளுடனும்) கதை போவது
சோர்வடைய செய்கிறது.
இது
எல்லாம் அவன் ஆடல் என்றால் ஒரு வரி போதாதா? இந்த பதினோரு நூலும் எனக்கு பாண்டவர் தரப்பின்
எவர்மீதும் எந்த மதிப்பும் இல்லாமல் செய்துவிட்டது. உங்களுக்கு பாண்டவர் மீது சார்பிருப்பதாக
தெரிகிறது.
பா - சதீஷ்
அன்புள்ள சதீஷ்
நான் பாண்டவர்களை கெட்டவர்களாக்கி துரியோதனாதிகளை தூக்குவதாக சில மின்னஞ்சல்கள் வந்தன. கிருஷ்ணனை மனிதனாக்கிவிட்டதாக ஒரு சாரார் சொன்னார்கள். இது நேர் எதிர்பார்வை
உண்மையில் அந்தந்த தருணங்களில் மானுட இயல்பு என்னென்ன என்பதை மட்டுமே வெண்முரசு நோக்குகிறது. நியாயபப்டுத்தவோ தூக்கவோ குறைக்கவோ செய்யவில்லை. குணச்சித்திரங்கள் அந்தத்தருணங்களின் தொகுப்பாக மட்டுமே வாசகன் மனதில் உருவாகமுடியும்
ஜெ