Saturday, September 2, 2017

வண்ணக்கடல் - கர்ணன்


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

                வண்ணக்கடல் தொகுப்பின் 70 வது அத்தியாயம் . கர்ணன் அரசு பெறும் நிகழ்வு. இதோ இதற்காகவே காத்து நிற்பது போல், மனம் முழுதும் அதிர படிக்கிறேன். என் இடம் மறந்து , அஸ்தினபுரியின் களமுற்றத்தில் மக்கள் திரளுள் நானும் நிற்கிறேன். தருமன் போல் கண்ணீர் உடல் வழிய நின்று கொண்டிருக்கிறேன். மனமெல்லாம் அறம் அறம் என அதிர கர்ணனை நோக்கி கொண்டே இருக்கிறேன். பாரதம் பேரரத்தின் மைந்தனாக கர்ணனை கொண்டாடி கொண்டே இருக்கும் உண்மையை எண்ணி பேரின்பம் கொள்கிறேன். 

                     துமி அளவும் அறம் வழுவா கொடை மகன் இவனல்லவோ. இவனே மீண்டும் மீண்டும் அறத்தானாக தேசம் முழுதும் பிறந்து பெருமை அடைகிறான். நிர்கதியாய் ஏதுமில்லா தருணத்திலும் அறம்  வழுவா ஒருவனை தெய்வம் , குரு , மன்னன் , மூத்தோர் ,  குடி என அனைவரும் வாழ்த்தி வணங்கி பேறடைவர் என்பதை பாரதம் கர்ணன் கொண்டு உரைக்கிறது. இத்தேசம் தன் எல்லா காலத்திலும் கர்ணனை பெற்றே பெருமை அடைகிறது.  மகா காவியத்தின் மூத்த மகன் இவனே, இவனே தேசத்தின் சிம்மாசனத்தில் என்றும் வீற்றிருக்கிறான். 

 கொடை கொடை என உள்ளம் அதிர பார்த்துக்கொண்டிருக்கிறேன், சுயோதனன் கர்ணனிடம்  அடிபணியும் ஒரு கணத்தில் அவன் மொத்த வாழ்வையும்  முழுதும் வாழ்கிறான். கர்ணனின் பெரும் கொடையின் எல்லா தர்மமும் இதோ இங்கு தொடங்குகிறது. இந்த ஒரு கனத்துக்காகவே உன்னை வணங்குகிறேன் சுயோதனா. 

மண் உடல் தொட அதிரதன் பாதம் பணியும் கொடை மகனை எல்லா குடிகளும் கண்ணீர் வழிய நோக்குகின்றன. இதோ அவர்கள் மீள மீள சொல்லி இன்புற ஒரு வரலாறு நிகழ்கிறது. இக்கணத்தில் தேசத்தின் எல்லா மைந்தர்களும் அவனுள் நிறைந்து தந்தை தாழ் பணிவதை பார்க்கிறேன். இந்த அறத்தானை முலையூட்டி வளர்த்த ராதையை ,தேசத்தின் பேரன்னையாக கை  கூப்பி வணங்குகிறேன்.

என்றும் வாசிப்புடன் 
சரவணன்