Tuesday, January 8, 2019

பொற்தேர்




அன்பிற்கினிய ஜெயமோகனுக்கு வணக்கம் நலம்தானே?
ஒரு சந்தேகம்.

இன்றைய பகுதியில்பொற்தேர்என்னும் சொல்லைப் படித்தேன். அது சரியா?

பொன்தேர் அல்லது பொற்றேர் என்பதுதான் சரி என எண்ணுகிறேன்
யோசியுங்கள்

நன்றி

வளவதுரையன்

அன்புள்ள வளவதுரையன்

நான் அதை எண்ணாமல்தான் எழுதினேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும்போது இந்தப்புணர்ச்சிவிதிகள் பற்றி ஏற்கனவே எழுதியவற்றுடன் சேர்த்து சில சொல்லலாம் என நினைக்கிறேன்

நமது சொற்புணர்ச்சிநெறிகள் அனைத்துமே செய்யுளுக்காக, அதன் ஓசை ஒழுக்குக்காக உருவாக்கப்பட்டவை. நம் ஒற்றுநெறிகளும் அவ்வாறே. உரைநடை எழுதத் தொடங்கியதுமே நாம் அதிலிருந்து பெரிதும் விலகி வந்துவிட்டோம். இன்றுநாம் எழுதும் உரைநடை ஏற்கனவே 90 விழுக்காடு பழைய புணர்ச்சிநெறிகளில் இருந்து விலகியிருக்கும் ஒன்று.

இன்று நாம் சொற்களைப் பிரித்துப்பிரித்து எழுதுகிறோம். அதற்கு நமக்கு இலக்கண ஒப்புதல் கிடையாது. [காட்டு, மேலே சொன்ன வரியில் புணர்ச்சிநெறிகளில் இருந்து என இருக்கக்கூடாது. புணர்ச்சிநெறிகளிலிருந்து என்றே இருக்கவேண்டும். அந்தச் சொற்பகுப்பு புணர்ச்சி நெறிகளில்- இருந்து  என வேறொரு பொருள் தரக்கூடும். ஆனால் நாம் இப்படி வாசிக்கப் பழகிவிட்டோம். இது சரியான பொருள் சுட்டவும் தொடங்கிவிட்டிருக்கிறது.

[சரியான பொருள் என்பது பிழை. இலக்கணப்படி சரியானப்பொருள் என எழுதவேண்டும். நாம் எழுதுவதில்லை]

மொழி செவிச்சார்பு கொண்டது. செவி முடுவெடுக்கவேண்டும் மொழியை. சம்ஸ்கிருதம் பேசப்படுவதில்லை. ஆகவே செவி அம்மொழியை தீர்மானிப்பது ஆயிரமாண்டுகளாக இல்லாமலாகியது. விளைவாக இறுக்கமான இலக்கணநெறிகள் கொண்டதாக மாறி அம்மொழி பயன்படுத்த இயலாததாக மாறியது. அது தமிழுக்கு நிகழலாகாது. இலக்கணநெறி பேசுபவர்களிடம் நான் சொல்வது இதையே. இயந்திரத்தனமான இலக்கணநெறி மொழியை அழிக்கும். செவியைத் துணைகொள்க.

ஆகவே நான் கூடுமான வரை ஒற்றுக்களை தவிர்க்கிறேன். ஒற்று இல்லையேல் செவிக்கே தெரியும் என்றால் மட்டும் போடுகிறேன்.

பொன்தேர் என்றால் ஒற்றைச் சொல்லாக ஆவதில்லை. பொற்றேர் என்றால் அயலாக ஒலிக்கிறது. அது செய்யுளுக்கே உரியது. பொற்தேர் என்றால் நடுவே ஒலிசார்ந்து ஓர் இடைவெளி செவிக்குத் தென்படுகிறது. கேட்கையில் தெளிவாகவும் உள்ளது. உரைநடைக்கு பொற்தேர் என்பதே மேலும் பொருத்தம்.
நம் மரபு இரண்டு நெறிகளால் ஆளப்படுவது. ஒன்று இலக்கியம் கண்டதற்கே இலக்கணம். இன்னொன்று செந்தமிழும் நாப்பழக்கம்


ஜெ