அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலின் முதலாம் அத்தியாத்தில் "படைப்பு , வரம்" என்ற இரு விஷயங்கள் கூறபட்டிருக்கிறது.
முதற்கனலின் முதல் அத்தியாயத்தின் தொடக்கம் போல அல்லது வெண்முரசின் தொடக்கம் போல கார்கடல் ஆரம்பிக்கிறது. அதில் ஆஸ்திகனுக்கு கதை சொல்லும் மானசாதேவி இதில் கதை கேட்கும் சிறுமி.
மானசாதேவி உலகு அல்லது உயிரினங்கள் படைக்கபட்டவிதத்தை தனது குலத்தோடு, தனது வாழ்க்கையோடு, தனது ஆசைகளோடு சம்பந்தபடுத்தி ஒரு கதையை கூறுகிறாள்.நித்யை உலகு அல்லது உயிரினங்கள் படைக்கபட்டவிதத்தை தனது குலத்தோடும், தனது ஆசைகளோடும் வேரோரு வடிவில் கதையை கூறுகிறாள். இதில் இருந்து வெண்முரசு இரண்டாக பகுக்கப்படுகிறது என நினைக்கிறேன்.
கார்கடலில் நித்யை கூறும் சொல்லாக வரும் உயிரினங்களின் பிறப்பை வாசிக்கும்போது கடவுள் உலகை உயிரினங்களை படைத்தாரோ இல்லையோ ஆனால் ஒரு எழுத்தாளன்தான் உலகை படைக்கிறான் என ஆணித்தரமாக நம்ப ஆரம்பித்தேன். அதாவது காற்றில் பொருளில்லாமல் நின்றிருக்கும் ஓசைகளை, நுண்ணிய சப்தங்களை பொருளாக்கும் எழுத்தாளனின் மனம்.
சாக்ரடிஸ், வியாசன்,வால்மீகி,ஹோமர், காரல்மார்க்ஸ், காந்தி, அயோத்திதாசபண்டிதர் என எழுதி குவித்தவர்கள் படைக்கும் உலகு. தங்கள் இனத்தையும், மூதாதையர்களையும் பண்பாடுகளையும் பெருமிதத்தையும் கொண்டு உருவாக்கும் உலகின் பிறப்பு. அதை கொண்டுதான் பிறகு சண்டையும் நடக்கிறது என்பதுதான் முடிவு. அதாவது எழுத்தாளன் கூறியதை மறந்துவிட்டு தங்களின் அறியாமையையும் அகங்காரத்தையும் அரசியலையும் அதனுள் ஏற்றி அதற்காக சண்டை போட்டு தங்களை அழிப்பது. ஆனால் எழுத்தாளன் அழிவதே இல்லை, அவன் பத்து தலைமுறை தாண்டியாவது வேறொரு ரூபத்தில் முளைக்கிறான்.அது வேறு கதை.
வெண்முரசில் நிறைய இடங்களில் கடவுள் அல்லது முனிவர்கள் பெண்களிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கிறார்கள். யாருமே பொன்னோ பொருளோ கேட்கவில்லை, தாங்கள் படைக்கும் தங்கள் கர்ப்பத்தின் படைப்பு வீரியமாய் இருக்கவேண்டும் காலகாலமாய் அது இங்கு அது நிலைபெற்று இருக்கவேண்டும் என்றே கேட்கிறார்கள். படைக்கிறவனுக்கு தெரியும் போல படைப்பின் வலி அறிந்தவர்களிடம் தான் வரம் வேணுமா? என்று கேட்க வேண்டும் என.
இதை சிந்திக்கும் போது தோன்றிய ஒரு கேள்வி, இன்றைய பெண்களிடம் கடவுள் தோன்றி ஒரு வரம் வேணுமா? என்று கேட்டால் பெண்கள் என்ன கேட்பார்கள்?
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்