Wednesday, January 2, 2019

வரிகள்



ஜெ

வாழ்க்கையை மாற்றியமைக்கும் எந்த முதன்மை அறிதலும் பேருவகையாகவோ பெருந்துயராகவோ நம்மை அடைகிறது. பெருந்துயரென அடைவதே மேலும் சிறந்த மெய்யறிதல்

மேலே சொன்ன வரியை நான் குறித்து வைத்திருந்தேன். அதை ஒரு நண்பரிடம் சொன்னேன். அவர் முக்கியமான இலக்கிய வாசகர். கொஞ்சம் மூத்தவர். அவர் ஒரு நாவலில் இப்படி மேற்கோள்வரிகள் வருமென்றால் அது நல்ல நாவல் அல்ல,. நல்ல நாவலாசிரியர்கள் எழுதியபின் இத்தகைய வரிகளை நீக்கிவிடுவார்கள் என்று சொன்னார்

நான் இதை புரிந்துகொள்ள விரும்பி எழுதுகிறேன்

சிவக்குமார்

அன்புள்ள சிவா

ஒரு இயல்புவாதநாவலில் இந்த வரி வருமென்றால் அழகியல்பிழை

ஒரு யதார்த்தவாத நாவலில் இந்த வரி அதற்குரிய சூழலில். அதற்குரிய கதைமாந்தர் வழியாக குறைவாக வரலாம்

இத்தகைய வரிகளால் மட்டுமேயானது செவ்வியல். செவ்வியலை மாதிரிநகல் செய்யும் பின்ன்நவீனத்துவநாவலுக்கும் இது பொருந்தும்

மகத்தான வரிகளால் ஆனவை பேரிலக்கியங்கள். இத்தகைய பல்லாயிரம் வரிகளை உலகப்பேரிலக்கியங்களான செவ்வியல் நாவல்களில் காணலாம்

மாறா அழகியல் என ஏதும் இலக்கியத்திற்கு இல்லை. உங்கள் நண்பர் ஓர் அரைகுறை வாசிப்பாளர். அவரை முற்றாகவே தவிர்த்து விடுங்கள். வெற்று ஆணவம் கொண்டு இலக்கியத்தை நிராகரிக்கும் இடத்துக்கு அவர் சென்றடைந்திருக்கிறார்


ஜெ