Sunday, January 6, 2019

கர்ணன்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கர்ணன் மனமுவந்து ஒரு போருக்கு சென்று நிறைய காலம் ஆகிவிட்டது. பிறருக்கு உரியதை நாம் கவர்கிறோமா, எடுத்துகொள்கிறோமா? என்று எப்போதும் அவனிடம் ஒரு தயக்கம் இருக்கும், அதுதான் அவனை தோல்வியில் கொண்டுபோய் சேர்க்கும். ஆனால் கார்கடலின் ஒன்பதாம் அத்தியாயத்தில் சினிமாவில் வரும் கதாநாய அறிமுகம்போல் துர்க்கையையை வணங்கிவிட்டு போருக்கு கிளம்புகிறான். முடிவு தெரிந்ததுதான் என்றாலும் அவன் இப்படி கிளம்புவதே பரவசத்தை அளிக்கிறது.

ஷத்ரியர்களை அழிக்க பாரதவர்ஷத்தை சுற்றிவந்து கோடரியை இடைவிடாது வீசிய பரசுராமனின் கையால் வில்லை வாங்கிகொண்டு கிளம்புகிறான். ஆனால் அந்த வில் சொல்லில் இருந்து உருவாகியது. காவியங்களில் படைப்பும் அழிப்பும் எல்லாம் சொல்லில் இருந்தே தோன்றுகின்றன. எதற்காக காத்திருந்தாலும் அது நிறைவேறுகையில் நிறைவே எழுகிறது என சிவதர் கூறியது கர்ணன் இதற்காகத்தான் காத்திருந்தானா? என ஒரு நிமிடம் அதிர்ச்சியை தந்தாலும் மிக மன எழுச்சியாய் இருந்தது. காளிகர் அவனிடம் வாதாடும் போதும் அவன் மறுத்து வாதாடவில்லை.இப்போது எண்ணும்போது வெண்முரசில் கர்ணன் எங்கேயுமே பெரிதாய் யாரையும் வற்புறுத்தும் பிடிவாத குணம் கொண்டவன் இல்லை என தெரிகிறது. காதலியிடம், நண்பனிடம், மனைவியிடம், ஆசிரியரிடம் என யாரிடமும் பிடிவாதமாய் அவன் இருந்தது இல்லை. கர்ணனும் கொஞ்சம் பிடிவாதக்காரனாக இருந்தால் வரலாறு கொஞ்சம் மாறிதான் போயிருக்கும்.


regards,

ஸ்டீபன் ராஜ்