Tuesday, September 3, 2019

பெருந்தந்தை-4




அன்புள்ள ஜெ,

துரியோதனன் ஏன் வெண்முரசிலே இப்படி காட்டப்பட்டிருக்கிறான் என்ற விவாதத்தைப் பார்த்தேன். மகாபாரதத்தை பிரிமிடிவ் கிளாஸிக் என்றுதான் சொல்லவேண்டும். மனிதகுலம் உருவானபோதே உருவான கிளாஸிக். ஆகவே அதில் ஒரு ஃபோக் அம்சம் உண்டு. கதாபாத்திரங்கள் எல்லாம் மிகப்பெரியவையாகவும் கடுமையான குணச்சித்திரமும் ஒற்றைப்படைத்தன்மைகொண்டதாகவும் இருக்கும்.

அதன்பின் அதில் பலவகையான கதைகள் சேர்ந்துகொண்டே இருந்தன. அதிலுள்ள எல்லாக் கதாபாத்திரங்களும் குழப்பமானவையாகவே இருக்கும். எனென்றால் ஒவ்வொருவரைப்பற்றியும் வெவ்வேறு கோணங்களில் நிகழ்ச்சிகளும் விவரிப்புக்களும் சொல்லப்பட்டிருக்கும். எந்த ஒரு கதாபாத்திரத்தை எடுத்தாலும் நல்லதும் கெட்டதும் மாறிமாறி வரும். சரியாக வகைபாடு செய்துகொள்ள முடியாது.

பின்னர் வந்த கிளாஸிக்குகளில் நாம் ஆகமொத்தமான ஒரு யூனிட்டியை காண்கிறோம். வெண்முரசு அப்படி ஒரு யூனிட்டியை உருவாக்க முயல்கிறது. ஆகவே அது கம்பராமாயணத்தின் அழகியலையே பின்தொடர்கிறது. கம்பனின் ராவணனுக்கும் வான்மீகியின் ராவணனுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத்தான் நாம் வெண்முரசில் காண்கிறோம். இதற்குத்தேவையான விஷயங்களை மகாபாரதத்திலேயே வியாசன் துரியோதனனைப்பற்றிச் சொல்வதில் இருந்தும் ஃபோக் மரபிலிருந்தும் எடுத்துக்கொண்டு இந்தச் சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது

ராமச்சந்திரன்