Thursday, October 31, 2019

பகுதி 2. வெண்முரசு - குருஷேத்திரப் போர் - தர்மனும் அறமும்.


தருமனுக்கு உரித்தானதா அஸ்தினாபுரம்
     
விசித்திர வீரியனின் முதல் மகன் திருதராஷ்டிரன், அவனுடைய முதல் மகன் துரியோதனன் அவனுக்குத்தான் அரியணைக்கான உரிமை இருப்பதாகத் தோன்றுகிறது. அரச குடும்பத்தினரில் மூத்தவர் அரசன் என இருக்க வேண்டும் என்பது வழக்கம் இல்லை. ஆகவே தருமன் துரியோதனனனிவிட மூத்தவன் என்பதால் தருமனுக்கு அரச உரிமை வந்துவிடாது.  
       
விசித்திரவீரியனுக்குப்பிறகு திருதராஷ்டிரனுக்கு மணிமுடி வந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு அது மறுக்கப்படுகிறது.  குலத் தலைவர்கள் அவனைத் தவிர்த்து பாண்டுவிற்கு முடி சூட்டுகிறார்கள். பார்வை இழப்பு அதற்கு காரணமாகக் கூறப்பட்டு அது அரசவையில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  அவன் மேல் பாசம் கொண்ட பீஷ்மர். மற்றும்  பேரரசி சத்தியவதியால் கூட அதை தவிர்க்கமுடியவில்லை. ஆகவே  திருதராஷ்டிரன் பின்னர் பேரரசர் என்று அழைக்கப்பட்டாலும் அவர் உண்மையில் அஸ்தினாபுரத்தின் அதிகாரபூர்வமான அரசர் என எப்போதும் இருந்ததில்லை. பாண்டு இல்லாத போது ஒரு பொறுப்பு (in charge)  அரசர் என இருந்தவர்தான் அவர்.  காந்தாரி  பட்டத்து ராணியென்று அரசவை சடங்குகளின்படி முடி சூடப்பட்டவள் இல்லை. ஆகவே அவர்கள்  மகன் துரியோதனன் அவ்வகையில் பட்டத்துக்கு உரியவன் இல்லை.  அதே நேரம் பீஷ்மர் சகுனிக்கு திருதராஷ்டிரனின் மகனுக்கு முடிசூட்டப்படும் என வாக்களித்திருந்தார். ஆனால் அது வெறும் அரச குடும்பத்தின் முடிவே தவிர அரசவையின் அதிகாரபூர்வமான முடிவல்ல.  அவர் அவ்வாறு வாக்களிக்க காரணம்பாண்டுவிற்கு அவன் உடல் நலமின்மை காரணமாக வாரிசுகள் உருவாகாது என்று  அவர் கொண்டிருந்த உறுதி. 

     
ஆக விசித்திர வீரியனுக்கு பின் அஸ்தினாபுரத்தின் மன்னனென ஆனவர்  பாண்டு. அடுத்து மன்னனாக இயல்பான தகுதியைக் கொண்டவர் அவருடைய மூத்த மகன் தருமர் ஆவார். முன்னர் யயாதி தன் மூத்த மகனான யதுவுக்கு  அரசை அளிக்காமல் தன் இளைய மகனான புருவுக்கு அளிக்கிறார். பின்னர் இயல்பான வாரிசாக ஆவது புருவின் மைந்தனே தவிர யதுவின் மைந்தனல்ல. ஆகவே தருமருக்கு உரியதே அஸ்தினாபுரத்தின் மணிமுடி. தருமன் அவனுக்கான அகவை வந்த பிறகு திருதராஷ்டிரர் இயல்பாக தான் காத்து வந்த மணிமுடியை தருமனுக்கு அளித்திருக்க வேண்டும்.  அதை குந்தி வாதாடித்தான் பெற்றுத்தர வேண்டியிருந்தது. அவள் வாதத்தை அன்று அரசவை எவ்வித எதிர்ச்சொல்லும் இல்லாமல் ஏற்றுக்கொண்டதற்கு காரணம் வெறும் குந்தியின் வாதத் திறமை மட்டுமல்லஅதன் பின்னால் இருந்த மணிமுடிக்கான உரிமை பற்றிய அரச நெறியே ஆகும்.
     

 5.   தருமனை பாண்டுவின் வாரிசு என ஏற்றுக்கொள்வதற்கு நெறியிருக்கிறதா 
      துரியோதனன் அரசவையில்  இந்த ஐயத்தை
எழுப்பிபாண்டவர்கள்  ஷத்திரியரே  அல்ல என கூறியிருக்கிறான்.  ஆம்தருமன் பாண்டுவின் குருதி மகனல்ல என்பது உண்மைதான்.    துரியோதனனோ திருதராஷ்டிரனின் நேரடிக்  குருதி. குருதியே மணிமுடியின் உரிமையை தீர்மாணிக்கும்போது தருமனுக்கு எப்படி மணிமுடி உரிமையானது  என ஆகும்?   குருதி என்பது உடலிலிருந்து உடலுக்கு தொடர்வது மட்டுமல்லாமல்  உள்ளத்திலிருந்து உள்ளத்திற்கு தொடர்வதும்தான். சில சமயம் இவன் என் மைந்தன் என ஒருவனுக்கு உலகம் கற்பிப்பதே குருதிஉறவென ஆகிறது. திருதராஷ்டிரனோ அல்லது பாண்டுவோ விசித்திர வீரியனின்  நேரடி மைந்தர்கள் இல்லை. விசித்திர வீரியனின் மறைவுக்குப்பிறகே அவர்கள் பிறக்கிறார்கள். அதாவது விசித்திவீரியன் தம் பிள்ளைகள் என இவர்களைக் கருத்தில்கூட கொண்டது இல்லை. ஆனாலும்  அவர்கள் அவனுடைய பிள்ளைகள்தான் எனக் கூறப்படுவதையும் அதன் காரணமாக அவர்கள் அரசுரிமைக்கு தகுதியானவர்களாக ஆவதையும்  வெண்முரசு விளக்கியிருக்கிறது. 

    பாண்டு தன் பிள்ளைகளென பாண்டவர் ஐவரையும் மனமொப்பி  ஏற்றுக்கொண்டவன். தன் ஆன்மாவின் குருதியை  தருமனுக்கு செலுத்தியவன். பாண்டுவின் உடல் மேல்  தவழ்ந்து வளர்ந்தவர்கள் இவர்கள்.   வேத நெறிப்படி முனிவர்களின் ஆசிகளுடன் தம் குழந்தைகள் என ஏற்று அவர்களுக்கு பெயர் சூட்டும் சடங்குகள் போன்றவற்றை பாண்டு செய்திருக்கிறான். இது அவ்வப்போது அஸ்தினாபுரத்திற்கு தூதுச் செய்திகளாகவும் ஒற்றுச் செய்திகளாகவும் தெரியப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதனால்தான் பாண்டுவின் இறப்புக்குப் பிறகு பாண்டவர்கள் அஸ்தினாபுரம் நகர் நுழைகையில் சிறு முணுமுணுப்புகூட அரண்மனையிலோ, அரசவையிலோ அல்லது மக்கள் நிரல்களிலோ எழவில்லை.  தருமனுக்கு இப்படி அஸ்தினாபுர அரியணையின் மேல் இருக்கும்  முழு உரிமையை அறிந்த சகுனி பாண்டவ குழவிகளை வனத்திலேயே கொல்லும் எண்ணம் கொள்கிறான். ஆனால் அது விதுரரின் மதி சூழ்கையால் தடுக்கப்படுகிறது.

     வாரணாவத எரிப்புக்கு பின் பாண்டவர்கள் திரும்பி வரும்போது திருதராஷ்டிரர் அரச நெறிகளின் படி தருமனுக்கு அரசாட்சியை அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் துரியோதனனுக்கு அஸ்தினாபுரத்தையும் பாண்டவர்களுக்கு வெற்று நிலமான இந்திரப் பிரஸ்தத்தையும் பகிர்ந்தளிக்கிறார்.  பாண்டவர்கள் அந்த வெற்று நிலத்தையும்  ஒரு அரசென தம்முடைய உழைப்பால், திறனால் துவாரகையின் துணைகொண்டு உருவாக்குகிறார்கள். அஸ்வமேத யாகம் செய்து தருமன் தன்னை ஒரு பேரரசன் என நிறுவிக்கொள்கிறான். அதற்கு பாரத வர்ஷத்தின் அனைத்து அரசர்களின் ஒப்புதல் கிடைக்கிறது. அவன் பாண்டுவின் மைந்தன் என்றும்  ஷத்திரியன் என்றும் பாரத வர்ஷம் முழுதும் ஐயமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


 6.   சூதில் தோற்ற நாட்டை திரும்ப கோருதல் சரியானதா?
     
இதைப்போன்ற நிகழ்வு  நளன் வரலாற்றில் நடைபெற்றிருக்கிறது.  சூது ஒரு போர் எனக்  கொள்ளப்பட்டு அதன் வெற்றி போர் வெற்றிக்கு நிகராக கருதப்படுவதற்கு உதாரணம் அக்கதையில்  முன்னரே நடைபெற்றிருக்கிறது. தருமன் சூதில் தோற்று விடுகிறான் என்பது உண்மைதான்.  ஆனால் சூதுப்போர் எப்போது நடைபெறவேண்டும்? இரு அரசர்கள் நாட்டின் உரிமைக்காக போர் தொடுக்க எண்ணம் கொண்டபின் போரைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக சூது பயன்படுத்தப்படலாம்.  ஆனால் இங்கு துரியோதனனுக்கும் தருமனுக்கும் இடையே போர் அறிவிக்கப்படவில்லை.  போர் அறிவித்து இருவரும் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் மட்டுமே சூதின் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவேண்டும்.  துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை வெல்ல நினைப்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.   ஒரு விளையாட்டெனவே சூது துவங்கப்படுகிறது. இதன் வெற்றியின் மூலம் நாடு கவரப்பட்டு தருமன் நாட்டை இழப்பது நளன் நாட்டை சூதில் இழந்ததைவிட நெறி தவறியது என்று நாம் கூறலாம். மேலும் இச்சூதில் கள்ளம் நிகழ்ந்திருக்கிறது. (சகுனி கள்ளப்பகடையை பயன்படுத்தியது அவன் கொல்லப்படுவதற்கு முன்தான் நமக்கே தெரியவருக்கிறது).    

     பின்னர் சூதினால் நாடு  கவரப்பட்டதை நியாயப்படுத்த முடியாமல்  திருதராஷ்டிரரின் வாக்குப்படி பதிநான்கு  ஆண்டுகள் கழித்து வந்து தருமன்  நாட்டைக்கோரும்போதும் கொடுக்கப்படும் என்று முடிவாகிறது.  அதனால் தருமன் நாட்டைத் திரும்பக் கோருவதற்கான உரிமை முழுமையாக இருக்கிறது என்பதே உண்மையாகும். 


7.  தருமர் போரைத் தவிர்த்திருக்க முடியாதா?   நாட்டை மீட்க மேற்கொண்ட போரின்
பேரழிவுக்கு அவரின் நாட்டின் மீதான விழைவும் காரணம் அல்லவா?

  தருமர் தன்னுடைய தன்னறமாகக் கொண்டது நாடாள்வதையே.  அவர் நாடாள்வதற்கான உரிமை அவர் பாண்டுவின் மைந்தன் என்பதால் வருவது. அவருக்கு அஸ்தினாபுரத்திற்கான உரிமை அரச நெறிகளின் படியும் குந்தியின் எச்சரிக்கையோடு எடுத்த நடவடிக்கைகளின்படியும் கிடைத்தது. அதற்காக அவர்  யாரையுயும் தீயிட்டோ நஞ்சிட்டோ கொன்றொழிக்க முயன்றவர் இல்லை. கள்ளச்சூதினால் வென்று  பின்னர் பல ஆண்டுகள் கழித்து  திரும்ப அளிக்கிறேன் என்று கூறி வாக்கு தவறி நாட்டை அபகரித்தவர் இல்லை.  உண்மையில் அவர் நாட்டை அவர் அடைவதற்கு போர் ஒன்றே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர். 

   தருமர் துரியோதனனிடம்  போர் செய்வதற்கான காரணங்கள் பல முன்னரே வந்திருக்கின்றன. அப்போது அவர் போர் புரிந்திருந்தால் அவர் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். திரௌபதியை மணமுடித்து வரும் வழியில்  துரியோதனன் பாண்டவர்கள் மேல் போர்தொடுத்து  வந்து தோல்வியுற்று தன் எதிரே தலைகுனிந்து நின்றபோது அவனை ஊறு செய்யாமல், ஏளனப்படுத்தாமல் திருப்பி அனுப்பியவர் அவர்.  துரியோதனன் சூதுக்கு தருமரை அழைத்த சமயம் அவர் பல மன்னர்களின் நட்புறவுகொண்டவராகதோல்வியே காணாத பலம் பெற்ற போர்ப் படையினைக் கொண்டிருந்தவராக இருந்தார்.   அப்போதே அவர் போரைத் தேர்ந்தெடுப்பதற்கான அத்தனை காரணங்கள் இருந்தும் அவர் சூதைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் போரின் பேரழிவை அவர் முன்கண்டதே ஆகும்.  சூதில் அடைந்த அனைத்து தோல்விகளுக்கும் தான் ஒருவராக பொறுப்பேற்றுக்கொண்டு  அவர் வனம் சென்றதின் வழியாக பல்லாயிரம் வீரகளுக்கு அவர் பதிநான்காண்டுகள் ஆயுள் நீட்டிப்பு தந்தார், பல்லாயிரம் பெண்களுக்கு மனைமங்கலத்தை அருளினார், பல்லாயிரம் குழந்தைகள் தம் தந்தையரின் அரவணைப்பில் வளர உதவினார் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.  வனவாசம் முடித்து திரும்ப நாடு கேட்க தூது அனுப்பியபோது போரைத் தவிர்க்க கண்ணனுக்கு முழு அதிகாரம் கொடுத்து அனுப்புகிறார். கண்ணன் ஐந்து ஊர்கள் அல்லது ஐந்து வீடுகளாவது கொடுங்கள் என்று வைத்த கோரிக்கைகூட நிராகரிக்கப்படுகிறது.  இடையில் திருதராஷ்டிரர் தருமருக்கு போரைத் தவிர்த்து மீண்டும் வனத்திற்கு செல்லுங்கள் என அளித்த ஆணையை மறுசொல் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்.  ஆனால் திருதராஷ்டிரர் அவர் சொல்லை திரும்பப் பெற்றுக்கொள்கிறார். அதன் மூலம் தருமரின் மேல்  குருஷேத்திரப்போர் திணிக்கப்படுகிறது.   அமைதிக்கான அத்தனை தூதுக்களும் தோல்வியில் முடிந்தன. அதன் பின்னரே அவர் போருக்கு ஒப்புதல் கொடுக்கிறார். 

தண்டபாணி துரைவேல்