அன்புடன் ஆசிரியருக்கு
வெண்முரசின் பாத்திரங்களில் மிக மிக சிக்கலானவர் திருதராஷ்டிரரே என்று எண்ணுகிறேன். அவர் உள்ளத்தின் அலைகழிவுகளை மிக நெருக்கமாக பின் தொடர முடிகிறது. திருதராஷ்டிரர் உள்ளுக்குள் வஞ்சம் கொண்டவர் ஆனால் அவர் வெளியே வேடம் போடுகிறார் என்ற முடிவை சென்றடையும் படியான தருணங்கள் நாவலில் உள்ளன. இரும்புப்பாவையை அவர் நொறுக்கி வீசியதும் அத்தகையதே. ஆனால் அவர் அத்தகைய முன்முடிவுகளுக்கு அப்பாற்பட்ட சிக்கலான ஆளுமை.
பாண்டுவிடம் அரியணையை அளிப்பதற்கு முன் தனக்கான உடைகளை பார்த்துப் பார்த்து தேர்வு செய்தவர், சௌவீரர்களை பாண்டவர்கள் வென்று மீளும் போது தன்னை நோக்கி வருவார்கள் என்று எண்ணியிருந்தபோது குந்தியை நோக்கி அவர்கள் செல்வதை பார்த்து நின்றவர், தன் மைந்தனை இரண்டு முறை உடைத்து நொறுக்கி சாவின் விளிம்புக்கு கொண்டு சென்றவர் என்று திருதராஷ்டிரர் குறித்த சித்திரம் இன்றைய அத்தியாயத்தை வாசித்ததும் அலையலையாக எழுந்து கொண்டே இருந்தது. அவருடைய விழியின்மையின் வழியாகவே அவரை விளங்கிக் கொள்ள இயலும் என்று நினைக்கிறேன். பீமனைக் கொல்ல எண்ணியவரும் அடுத்த கணமே பீமனை அணைத்துக் கொண்டவரும் ஒரே ஆளுமை தான். அந்த தத்தளிப்புதான் அவரை வழிநடத்துகிறது. அவர் வழியாகவே காந்தாரியும் அவரைப் போலவே மாறிவிட்டிருக்கிறார்.
இரும்புப்பாவையை நொறுக்கிய திருதராஷ்டிரர் வஞ்சம் ஒழிந்தார் என்றெண்ணி பாண்டவர்கள் விடுதலை கொள்கின்றனர். ஆனால் அவராலோ காந்தாரியாலோ வஞ்சத்தை கைவிடவே முடியாது என்ற உண்மையில் தான் இந்த அத்தியாயம் முடிகிறது. நகுலன் அதைத் தேடியே அங்கு வருகிறான். பாண்டவர்கள் இன்னும் குந்தியையும் திரௌபதியையும் பிற அரசியரையும் எதிர்கொள்ளவே இல்லை. ஒருவகையில் கணவனின் ஒரு பகுதியாக தன்னை மாற்றிக் கொண்ட காந்தாரியை எதிர்கொள்வதை விட பாண்டவ அரசிகளை எதிர்கொள்வது இன்னமும் சிக்கலானது.
இரும்புப்பாவையை மடியில் கிடத்தி கொஞ்சுவதன் வழியாக கௌவர பெற்றோரின் எல்லை உணர்த்தப்படுகிறது. பாண்டவ மகளிரின் எல்லைகளும் வெளிப்படும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்