Sunday, August 9, 2020

அஸ்தினபுரி

இனிய ஜெயம் 

முதல் ஓவியத்தின் பொழுது அந்தி. இந்த இரண்டாவது ஓவியத்தின் பொழுது உதயம். வெண்முரசு நாவலில் வரும் ஹஸ்தினாபுரியின் முதல் தரிசனம். களிற்றுயானை நிறை வரை வித விதமாக  வடிவம்கொண்டு வளர்ந்து தேய்ந்து புத்துயிர் கொண்டு எழுந்து என பல்வேறு தோற்றம் காட்டும் ஹஸ்தினாபுரியின் முதல் சித்தரிப்பு.

அந்தக் குன்றின்மேல், ஆஸ்திகனின் பின்னால் நாமும் நின்று, ஹஸ்தினாபுரியின் பெருமத்தில் வளைவின் மையத்திலிருக்கும் கோட்டை வாயிலை பார்க்கிறோம். வர்ணிப்பில் இருபது ஆள் உயரம் கொண்ட கதவு தூரத்தில் தெரிகிறது. பறவைகள் மிதக்கும் அழகில் தொலைவும் உயரமும் தெரிகிறது. உதய வானின் மஞ்சள்பின்புலத்தில், ஹஸ்தினாபுரி மாளிகைகள் நிழல் வெட்டு தோற்றங்களாக தெரிகிறது. ஒளி ஊடுருவ செம்மை கொண்டு பறக்கிறது கொடிகள். பொன்னென ஒளிரும் வாயில் மணி. குன்றின் சரிவிறங்கி வளைந்து சென்று வாயில் வழியில் முடியும் பாதை. 

ஆஸ்திகனின் உடல் விளிம்பை உதய ஒளி கோடிட்டுக் காட்டுகிறது. ஒளியம் நிழலும் கொண்டு இந்த தொடர் ஓவிய வரிசை நிகழ்த்தும் மாயத்தின் முதல் ஓவியம். 

கடலூர் சீனு