Thursday, August 6, 2020

அறம்


அன்புள்ள ஜெ

என் மகனுக்கு வெண்முரசை வாசித்துக் காண்பிக்கிறேன். அதாவது நேரடியாக அல்ல. ஒரு அத்தியாயத்தை வாசித்துவிட்டு கதையாகச் சுருக்கிச் சொல்வேன். அவனுக்கு பித்துப்பிடித்ததுபோல கேட்டுக்கொண்டிருப்பான். 11 வயதுதான். ஆனால் இந்தியப் பண்பாடு, இந்திய வரலாறு, இந்திய சமூக அமைப்பு, இந்துமத நம்பிக்கைகள், ஆசாரங்கள் எல்லாமே இந்த ஒரு நூலில் இருந்தே கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்

ஆனால் அவனை குதூகலப்படுத்துவது இதில் பீமனுக்கும் குரங்குகளுக்குமான உறவுதான். குரங்குகளுடன் பீமன் அற்புதமான உறவைக்கொண்டிருக்கிறான். காட்டுக்குப் போகும்போது குரங்கு பீமனிடம் நீ எப்படி இவ்வளவுபெரியவனாக ஆனாய் என்று கேட்கிறது

குரங்குக்கு பீமன் தண்ணீர் அள்ளிக் கொடுக்கிறான். தன் குடி முழுக்க குடித்தபின்னரே அது குடிக்கிறது. அதன்பின் அதை அவன் யுத்ஷ்டிரருக்கு கொடுக்கிறான் பீமன் நீரை தொன்னையில் கொண்டுசென்று தருமனுக்குஅளித்தான். “பெருங்குரங்கு இன்னமும் அருந்தவில்லை” என்றார் தருமன். “குடி அருந்தியபின்னரே அது அருந்தும்” என்றான் பீமன். “அவன் அருந்தட்டும். இக்காட்டின் அரசன் அவன்.அவன் மண்ணுக்கு நாம் விருந்தினர். முறைமைகள் மீறப்படவேண்டியதில்லை” என்றார் தருமன்.

என்கிறார் அவர். அதை நான் சொன்னபோது என் மகன் அடைந்த கொண்டாட்டத்தை நினைக்க நினைக்க ஆச்சரியமாகவே இருக்கிறது. ஒரு நல்ல சினிமாவில் அற்புதமாக இந்தக்காட்சியை காட்டிவிடமுடியும். அறம் என்றால் என்ன என்று இதைவிடச் சிறப்பாக சொல்லிவிட முடியாது என்று எனக்குப்படுகிறது

ஆர்.அருண்