அன்புள்ள ஜெ
நான் வெண்முரசை உதிரிவரிகளாக நினைவில்
வைத்திருக்கிறேன். இது சரியா என்று எனக்கு எப்போதுமே குழப்பம்தான்.
நவீனப்படைப்புக்களை நாம் அப்படி நினைவில் வைத்திருப்பதில்லையே. நான் ஒருமுறை ஓர்
இலக்கியவாதியிடம் பேசியபோது அது சரியல்ல என்று சொன்னார். ஆனால் பிறகு இணையத்தில்
பார்த்தபோது கிளாஸிக் தன்மைகொண்ட எல்லா நூல்களும் அப்படித்தான் ஞாபகத்திலே
நிற்கின்றன என்று தெரிந்தது. ஒரு உதிரிவரி ஒரு கதாபாத்திரத்தையோ அல்லது ஒரு
சந்தர்ப்பத்தையோ நினைவுக்கு இழுத்துக்கொண்டு வருகிறது
வெண்முரசு போன்ற மாபெரும் படைப்பை அப்படித்தான்
ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். உதாரனமாக செங்கதிர் செல்வ! தீராப்பெருஞ்சினம் கொண்டவர் தன்னையே முனிந்தவர் என்று அறிக என்ற வரி வெய்யோனில் வருகிறது. கர்ணனின் கதாபாத்திரம் ஒட்டுமொத்தமாகவெ இந்தவரியிலிருந்து நினைவில் வருகிறது. மட்டுமல்ல பெருஞ்சினம் கொண்டவர்களாகிய அஸ்வத்தாமன் கிருதவர்மன் போன்ற கதாபாத்திரங்களை நினைவுகூரவும் இந்த வரி உதவுகிறது
கூடுதலாக அன்றாடவாழ்க்கையில் பெரிய வஞ்சம்
கொண்டவர்களைப்ப்பார்க்கையிலெல்லாம் நான் இந்த வரியை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.
அவர்களின் முதல்கோபம் அவர்கள்மேலெயேதான்
ராஜ் மணிவண்ணன்.