அன்புள்ள ஜெ
வெண்முரசின் இறுதியில்
ஐவருமே சொர்க்ககங்களை அடைகிறார்கள். நான் யுதிஷ்டிரன் மட்டுமே சொற்கத்துக்குச் சென்றான்
என்ற கதைவடிவையே வாசித்திருக்கிறேன். அவன் சொர்க்கம் போனபிறகு அவன் சொல்லி மற்றவர்கள்
சொர்க்கம் செல்கிறார்கள் என்று வாசித்தேன்.
இன்னொரு வடிவம்
அவன் வானம் போன பிறகுகூட முதலில் நரகத்துக்குச் சென்றான் என்றும் ஆனால் துரியோதனாதியர்
சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டு மனம்குமுறி யமனிடம் கேட்டபோது அவர்கள் வீரசொர்க்கம்
அடைந்தனர். ஆனால் நீ சாதாரணமாகச் செத்தாய், ஆகவே நீ கர்மபலன்களை அனுபவிக்கவேண்டும்
என்றார் யமன்.
இந்தக்கதைகள் பிற்சேர்க்கை
என்றுதான் சொல்லவேண்டும். இந்து ஞானத்தில் சொர்க்கம் நரகம் இல்லை. மறுபிறப்புதான் உண்டு.
புவர் லோகம் முதலிய ஏழு நுண்ணுலகங்கள் உண்டு. சொர்க்கம் நரகம் என்பதே ஜரதுஷ்டிர கருத்து.
அது இந்துமதத்தில் வந்து சேர்ந்திருக்கலாம்.
அந்த கதைகளில்
பின்னாளில் உருவான மதிப்பீடுகள் உள்ளன. அதாவது ஒருவன் போரில் செத்தால் நேரே சொர்க்கம்,
அவனுடைய தீமைகளுக்கெல்லாம் எந்த தண்டனையும் இல்லை என்பது. ஆனால் வெண்முரசு அதை மாற்றிவிட்டது.
அதை இந்துமதத்தின் மையமான வேதாந்தக்கருத்துக்கு உட்பட்ட ஒரு தத்துவ உருவகமாக ஆக்கிவிட்டது.
அந்தக் கற்பனை
மிகமுக்கியமான ஓர் உச்சம் என்று நான் நினைக்கிறேன். வெண்முரசில் யுதிஷ்டிரன் அடைவது
ஒரு யோகவிடுதலை. அதையே மலையுச்சி கூர்மையில் நிற்பது என்று நாவல் சொல்கிறது. அங்கே
அவன் தனக்கான சொர்க்கத்தை தானே உருவாக்கிக்கொள்கிறான்
ஆ.முத்துமாணிக்கம்