Thursday, January 1, 2015

வினைச்சி



ஜெ

திரௌபதியை மீண்டும் கண்ணில் காட்டும்போது வளர்ந்த பெண்ணாக மட்டுமல்லாமல் ஒரு காளியாகவே காட்டுவது பயங்கரமான ஒரு அழகனுபவமாக இருந்தது. முந்தைய காட்சியில் [பிரயாகை 73] நாம் பார்த்த காளியாகவே அவளைப் பார்க்கமுடிந்தது. அவளுடைய கரிய நிறமும் தீப்பந்த ஒளியில் அவள் வரும் காட்சியும்  காளியையே கண்ணிலே காட்டின

கர்ணன் காதல் வயப்படுவது காளியைக் கண்டுதான். பாரதி காதல் கொண்டதுபோல


பின்னோர் இராவினிலே- கரும்
                 பெண்மை அழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே-களி
                கண்டு சற்றேயருகில் சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா!-இவள்
               ஆதி பராசக்தி தேவி யடா!-இவள்
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
              யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா!
செல்வங்கள் பொங்கிவரும்;-நல்ல
             தெள்ளறிவு எய்தி நலம் பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை
             அத்தனை கோடிப் பொருளின் உள்ளே நின்று
விலலை அசைப்பவளை-இந்த
             வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை-நித்தம்
               தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!


என்ற பாரதி வரிகளில் வரும் வினைச்சி என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தமானது. மகாபாரதத்தில் இவளும் வினையெல்லாம் செய்யும் வினைச்சிதானே

சாரதி

போரின் அன்னை



ஜெ

வண்ணக்கடலில் அகோரிகள் சூலத்தில் விழுந்து சாவதைப்பற்றிய அத்தியாயத்தை வாசித்து திக்பிரமை அடைந்தேன். அதே போன்ற அத்தியாயம் பிரயாகை 72.  இருண்ட பெரிய அனுபவம் என்று சொல்லவேண்டும். இன்றைக்குள்ள நம்முடைய வாழ்க்கையில் இதை வைத்துப்புரிந்துகொள்ளமுடியாது. அன்றாடம் தற்கொலைப்போர்களும் மதவெறித்தாக்குதல்களும் நடக்கும் ஆப்கானிஸ்தானில் இதைப்புரிந்துகொள்வார்கள்

அன்றையசமூகம் போர்ச்சமூகம். போர்வீரர்கள் செத்தே ஆகவேண்டும் . மரணபயம் இருக்கக்கூடாது. அதற்காகவே அந்த மனநிலையை உருவாக்குகிறார்கள். ’இட்டெண்ணித் தலை கொடுக்கும் எயினர்’ பற்றி சிலப்பதிகாரம் சொல்கிறது. இதே காட்சிதான். இதேபோல ஊன் கலந்த சோறை நாலுபக்கமும் வீசும் காட்சியும் சிலம்பிலே வருகிறது. அது முத்ரா ராட்சசம் நாடகத்திலும் வருகிறது என்று ஞாபகம்.

பலி என்பது அன்றைக்கு நடந்துகொண்டே இருந்தது. போர்க்களத்தில் தன் மைந்தர்களைப் பலிகொடுத்துக்கொண்டுதான் அச்சமூகமே வாழமுடிந்தது. அதிலிருந்துதான் கொற்றவை உக்ரசாமுண்டி போன்ற போர்த்தெய்வங்கள் உருவாகி வந்திருக்கவெண்டும். அன்றைக்கு பயத்தை ஜெயிப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கக்கூடும்

ஆனால் அந்தக்காட்சியை இத்தனை துல்லியமான தகவல்களுடன் நேரில் பார்ப்பதுபோல பார்ப்பது பயங்கரமான அனுபவமாக இருந்தது. அதிலும் ஒருவன் பலியாகவே வருகிறான். அந்த உக்கிரக்காட்சியில் இன்னொருவனும் பலியாகிறான். அந்த இடம் புனைவு எந்த எல்லைக்குப் போகும் என்பதற்கான ஆதாரம். மூளைக்குள் ஒரு நரம்பு வீணைத்தந்தி போல அறுந்ததை உணரமுடிந்தது

சண்முகம்

நிலங்கள்




அன்பள்ள ஜெ அவர்களுக்கு,


        வெண்முரசைத் தொடர்ந்து ஓராண்டாக வாசித்துள்ளேன் என்பதே எனக்கு பிரம்மிப்பளிக்கிறது.இதை எழுதும் தங்களின் பெருமையை எண்ணிப்பார்க்கிறேன்.

           வெண்முரசு என் வாழ்வில் எனக்கு கிடைத்த உன்னத வாசிப்பனுபவம்.முதற்கனலில் அன்னையர் ஒவ்வொருவரின் கண்ணீரையும் உணர்ந்தேன்.மழைப்பாடல்,வண்ணக்கடல் என்று நான் முழுவதுமாக நாவலினூடே வாழ்ந்தேன்.நீலம் சற்றே உணர்வுப்பூர்வமானதாய் இருந்தது.நீலத்தின் வாசக மறுவினைகள் அதன் வீச்சினை தெரிவித்தன.நானும் அப்படியான மன நிலையிலேயே அதனை வாசித்தேன்.ராதையின் பிரேமையை உணர்ந்தவளே நான்.அப்பொழுதெல்லாம் உங்களுக்கு எழுதத் தோன்றவில்லை.ஆனால் நீலம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பகுதியாகிவிட்டது.அதன் கவி மொழி என்னை பரவசப்படுத்துகிறது.

     அந்த மன நிலையிலிருந்து மீண்டு எப்படி பிரயாகையை வாசிப்பேன் என்று எண்ணியிருந்தேன்.ஆனால் மிக இயல்பான பிரயாகையின் ஓட்டம் என்னை இழுத்துக் கொண்டது.

    நன்றிஜெ சார்.மிக அற்புதமான வாசிப்பனுபவம்.நான் ஏற்கனவே எழுதியது போலவே எங்கள் குடும்ப திராவிட இயக்கப் பிண்ணனியினால் புராணங்கள் பற்றிய என் அறிவு குறைவானதே.கோவில்களுக்கே என் இளவயதில் சென்றதில்லை.

      என் தந்தையின் இலக்கிய ஆர்வத்தினால் வாசிக்க ஆரம்பித்தவள் நான்.பதின் வயதுகளிலேயே தமிழின் புகழ்பெற்ற எழுத்துகளை,வணிக எழுத்துகளைத் தாண்டிவிட்டேன்.கல்லூரி காலங்களில் தீவிர இலக்கிய வாசிப்பை அறிந்தேன்.ஆனாலும் நமது பாரம்பரிய இலக்கியங்களை ஒதுக்கியே வந்தேன்.அது என் மனதில் உருவாக்கப்பட்ட கருத்தென்று இப்பொழுது உணர்கிறேன்.நான் ஆங்கில இலக்கியத்தில் எம்.பில் வரை படித்தவள்.மேற்கத்திய இலக்கியங்களை அறிந்த எனக்கு கம்ப இராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றிய சரியான அறிமுகம் உங்கள் தளத்தின் மூலமே கிடைத்தது.தங்களின் தளத்தை வாசிக்கத் தொடங்கிய பின்னரே கம்ப இராமாயணத்தையும்,சங்க இலக்கியங்களையும் தேடித்தேடி வாசித்தேன்.என் நன்றியை எப்படி வெளிப்படுத்துவதென்று தெரியவில்லை.

   கடந்த ஓராண்டாக வெண்முரசு எனக்கு தரும் அனுபவ எல்லைகள் மிகப் பெரியவை.மகாபாரதம் பற்றி ஓரளவே அறிந்திருந்த எனக்கு இக்கதையாடல்கள அளிக்கும் உவகை மிகப் பெரியது.உங்களின் விஷ்ணுபுரம் உள்ளிட்ட எல்லா படைப்புகளையும் வாசித்த எனக்கு மிகவும் பிடித்தது வெண்முரசுதான்.உங்கள் படைப்புகளிலேயே மிகச்சிறந்ததாக எனக்குத் தோன்றுவது இது தான்.ஒரு நாளும் விடுபடாமல் இதனை வாசித்து வந்துள்ளேன்.அதுவே எனக்கு நல்ல அனுபவம்.

      நான் அதிகம் வாசிப்பவள்.தங்களின் இணைய பக்கங்கள் முழுவதையுமே வாசித்துள்ளேன்.ஜெ சார்  என்னால் இலக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்ள இயலாத ஏக்கத்தை போக்குபவை தங்களின் பதிவுகளே.முக்கிய இலக்கிய ஆளுமைகள் பற்றி உங்கள் எழுத்துகள் மூலமே நான் அறிந்துள்ளேன்.

         எனக்கு இன்னும் மகிழ்வளிப்பவை தங்களின் பயண அனுபவங்கள்.வசதிகள் இருந்தும் பெண்ணாக என்னால் பார்க்கவே இயலாத இடங்களையும்,தகவல்களையும் உங்கள் பதிவுகள் மூலமே அறிந்து கொள்கிறேன்.இமயம்முதல் ஆஸ்திரேலியா வரை உங்கள் அனைத்து கட்டுரைகளையும் வாசிப்பதே என் வேலை.


மோனிக்கா மாறன்

கொடுங்கனவு



இனிய ஜெயம்,

ஒரு கொடுங் கனவில் சில  ஆண்டுகள் வாழ்ந்தது போல ஆயாசம் அளித்தது அன்னை விழி முதல் இரண்டு அத்யாயங்கள்.

பாற்கடல் கடைந்தபின் எழும் நஞ்சும் அமுதும் போல சுய பலிகளுக்குப் பின் 'பிரசன்னம்' ஆகிறாள் திரௌபதி.

சுடுக்காட்டு வாயிலில் பிணங்களுக்காக காத்திருக்கிறான் ஜிவ்ஹன்னுடன் 'பெயரற்ற' சுடுக்காட்டு சித்தன்.

இப்போது யோசிக்கையில்  ஏன் முது கணியன்  அழுது தளர்கிறார்? ஏன் முதல் சுய பலியாளன்  கஞ்சா மயக்கத்தில் வைக்கப் படுகிறானோ அதில் இருக்கக் கூடும் காரணம்.  ஆக உண்மையான சுயபலி இரண்டாவது நிகழ்வதே. அதற்க்கான ஊக்கியாக உருவாக்கப் படுபவனே முதல் பலி.

திரௌபதி ஆலயம் நுழைகையில் ஏனோ என் மனதிற்குள்  எங்கள் ஊர் பக்கம் நிகழ்த்தும் திரௌபதி மயானக் கொள்ளை  நிகழ்வு நினைவில் எழுந்தது.

திரௌபதியின் நிமிர்வைக் கண்டு  கர்ணன் தன்னை உணர்ந்து மீசையை நீவிக் கொள்வது அழகு. ஆட்கள் அற்ற வீட்டின் வெற்று சாளரம் போன்ற பார்வை துரியனை கடந்து செல்கிறது.
பெண்கள் என்ன துரியன் போல ஆண்களே ரசிக்கும் பேரழகன் கர்ணன். துரியன் அங்கு கர்ணன் மீது கொள்ளும் பொறாமையும், கிருஷ்ணன் பெயர் அங்கு அளிக்கும் பதட்டமும், அழகு அழகு.

திரௌபதி மனதில் முதலில் கற்பனையாக பதிந்த  கர்ணனை [திரௌபதி முதலில் கதை கேட்டு முடித்ததும் விசாரிப்பது கர்ணன் குறித்து தான்] திரௌபதி  ஸ்தூலமாக காணும் இடம் 
ஆலயப் பெண்கள் கர்ணனைக் கண்டு உடல் விம்மித் தணியும் இடம், துரியனின் நோக்கில் திரௌபதி அழகின் வர்ணிப்பு  என மீண்டும் மீண்டும் நினைவில் மீட்ட வேண்டிய சித்திரங்கள் அடங்கிய அத்யாயம்.    

சீனு

சொல் எனும் ஆயுதம்





[வாக்தேவி]


ஆம், என்று படைக்கலத் திறனுக்கு சொல்திறன் மாற்றாகிறதோ அன்றுதான் மானுடம் பண்படுகிறது என்பேன்” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் ‘படைக்கலங்களுக்கு ஒற்றை இலக்கும் ஒரேபொருளும் அல்லவா?’ என்று எண்ணிக்கொண்டான்.

படைகலன்கள் எதிர் தரப்பை அழித்தொழிப்பது. அதுவே அதன் ஒரே இலக்கு. அழித்தொழிப்பதன் மூலம் அது வென்றவனின் எண்ணங்களை அங்கு நிலைநாட்டுகிறது.

ஆனால் சொல் திறன் எதை அழிக்கிறது? அது எதையும் அழிப்பதில்லை அது மாற்றி அமைக்கிறது அல்லது கட்டுபடுத்துகிறது. சொல்லின் இலக்கு எது? சொல்லின் இலக்கு பொருளா? எனக்கு அப்படி தோன்றவில்லை. பொருளில் இருந்து உருவாவதே சொல். பொருளை சுமந்து செல்லும் ஒரு ஊடகமே சொல். அந்த வகையில் சொல் என்பது ஒரு அம்பு.

சொல்லும் இலக்கை அடைகிறது. ஆனால் அது எதை இலக்காக்குகிறது? தர்மன் விதுரரிடம் சொல் திறனை கற்றால் அது எதிராளியின் சொல் திறனை இலக்காக்கும் சொல்லை தான் கற்ப்பான். அங்கு எதிராளியின் சொல் திறன் எனும் வில்லை உடைப்பதே இலக்காகும். அவர்கள் மேற்கொண்டு சொல் தொடுக்க முடியாமல் செய்வதே அங்கு வெற்றியாகும்.

இன்னொன்று எதிராளியின் மனசாட்சியை இலக்காக்குவது. அறத்தை சொல்லில் ஏற்றி எதிராளியின் மனசாட்சியை நோக்கி எய்வதே பன்பட்ட சொல் திறன். அதுவே உன்மையான வெற்றியை தேடி தரும் அதுவே மனித குலத்தை பன்படுத்தும். ஆனால் அது ஒரு இலட்சிய கனவு. இந்த சொல் திறனை கற்பானா தருமன்? யாரிடமிருந்து?



ஹரீஷ்

பிரயாகை-62-தந்தையின் தருணம்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஒரு பெண் எப்போது நூறு மதிப்பெண்கள் பெறுகின்றாள்?

இயக்குனர் கே.பாக்கியராஜ் சுந்தரகாண்டம் படத்தில் சொல்வதுபோல்  ஒரு பெண் தாயாகும்போது நூறு மதிப்பெண்கள் பெற்று முழுமையாகிறாள் என்று சொல்லலாம்.  ஆனால்,அம்மா ஆனபின்புதான் ஒரு பெண் முதல் மதிப்பெண்ணே பெறுகின்றாள் என்பதுபோல் உள்ளது வாழ்க்கை. அம்மாவிற்கு முன்பு ஒரு சுற்று முடிந்து, அம்மாவானபின்பு ஆரம்பத்திலிருந்து ஒரு முழு சுற்று தொடங்குகின்றது பெண்ணின் வாழ்வில்.

பெரும் கற்பனையின் வழியாக  ஆதிமனிதர்களின் வாழ்க்கையை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி ஆதி காலத்திற்குள் நம்மை கதை இழுத்துக்கொண்டாலும் அதில் உள்ள உணர்ச்சிகள் மெய் சிலர்க்க வைத்தது.

கடோத்கஜன் ஒரு கலப்பு திருமணத்தின் சாட்சியாக நிற்கின்றான் ஆனால் அவன் யாராக வாழ்வது? அரக்கனாகவா? மனிதனாகவா? அரக்கனாக வாழவேண்டும் என்றால் பறக்கவேண்டும், மனிதனாக வாழவேண்டும் என்றால் சராசரி உடம்போடு இருக்கவேண்டும். கடோத்கஜன் அரக்கர்களின் அரக்கன். அன்னையும் தந்தையும் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் அகம்படும் பாடு கனமான வலி நிரம்பியதாகும்.

உங்களைப்போல எனக்கு ஒரு குழந்தைவேண்டும் என்று நினைத்த இடும்பி, கடோத்கஜன் பிறந்தபின்பு முற்றும் புதிய வட்டத்தின் ஆரம்பத்தில் வந்து பூஜியத்தில் நிற்கிறாள்.

மகன் குறைந்தப்பட்சம் பறந்தால் போதும் என்று இடும்பி நினைத்திருக்கையில் அவன் குலத்தின முதல் இடும்பனாக ஆகிவிடும்போது அவள் அன்னையாகவும், குழந்தையாகவும் மாறிமாறி தத்தளிக்கிறாள். அன்னைகளின்  அன்னையாக நூறுமதிப்பெண்கள் பெற்றுவிடுகின்றாள். ஒவ்வொரு அன்னையும் தன் குழந்தையை மையமாக வைத்து அந்த மதிப்பெண்ணுக்கு காத்திருக்கிறார்கள்.

ஜனமேஜயன் செய்த சர்பயாகவேள்வியை ஆஸ்திகர் நிறுத்திவிட்டு திரும்பி வந்தபோது மானஸாதேவி அந்த மதிப்பெண்ணை பெருகின்றாள்.
கண்ணில்லாத மகனைப்பெற்று அவன் எப்படி வாழ்வான் என்று ஏங்கித்தவிக்கும் அம்பாலிகை, திருதராஸ்டிரன் காந்தாரியை வென்று மணந்துவரும் நாளில் அந்த மதிப்பெண்ணைப்பெருகின்றாள்.
பாண்டவர்கள் முதல் படையெடுப்பில் வென்று கொண்டுவந்த மணிமகுடத்தை தன்பாதத்தில் வைத்தபோது குந்தி அந்த மதிப்பெண்ணை அடைகின்றாள்.

கண்ணன் கோவர்த்தனகிரியை தூக்கியபோது யசோதை அந்த மதிப்பெண்ணைப்பெறுகிறாள். கம்சனை வென்றபோது தேவகி அந்த மதிப்பெண்ணைப்பெறுகிறாள்.

இதோ இன்று இடும்பி அந்த மதிப்பெண்ணை பெறுகின்றாள். அந்த மதிப்பெண்ணை பெறும் கணத்தில் அன்னைகள் அனைவரும் குழந்தைகள் ஆகிவிடுகின்றாள்.

//பின்னர் துள்ளலுடன் பீமனிடம் ஓடிவந்து “இந்தக்குடியிலேயே மிகவிரைவாக வேட்டையாடி வந்தவன் இவன்தான்என் மூத்தவர் கூடமூன்று குவளை நேரம் எடுத்துக்கொண்டார்” என்றாள்அவளுடையபெரிய கரிய உடல் உவகையின் துள்ளலில் சிறுகுழந்தைபோலத்தெரியும் விந்தையை பீமன் எண்ணிக்கொண்டு புன்னகைத்தான்.இடும்பி ”அதுவும் எருமைக்கன்றுஎடைமிக்கது!” என்று கூவினாள்.அவன் மறுமொழி பேசுமுன் அவனைக் கட்டிப்பிடித்து அவன் மார்பில்தன் தலையால் மோதியபின் சிரித்தபடியே திரும்பி ஓடி தன் குலத்துப்பெண்களுடன் சேர்ந்துகொண்டாள்அவளால் ஓரிடத்தில் நிற்கமுடியவில்லைஅங்குமிங்கும் அலைக்கழிந்தாள்மீண்டும்மைந்தனை நோக்கி வந்தாள்அவன் தலையை தன் தலையால் முட்டிசிரித்தாள்//

அன்னைகள்போல தந்தைகள் அடைவது என்ன? தந்தைகள் அப்போது என்ன ஆகின்றார்கள்.பெண்கள்போல ஆண்கள் மதிப்பெண்கள் பெறமுடிவதில்லை. ஆண் பிறந்த நாளில் இருந்தே நூறுமதிப்பெண்ணில் இருப்பதாக அவன் அகங்காரம் சொல்கின்றது. அவன் அகங்காரம் உடைந்து சிதற சிதற  அவனின் விழுக்காடு குறைந்துக்கொண்டே வந்து மகன் முன்னால் பூஜியமாகிவிடுகின்றான்.

தன் மகன் பறக்கவேண்டும், பெரியவனாக வேண்டும் ஹனுமான்போல ஆகவேண்டும் என்று நினைக்கும் பீமன்தான் கடோத்கஜனை போருக்கு அழைக்கவேண்டும் என்று நினைக்கின்றான். முழுவதும் வளர்ந்த பின்பு திருதராஷ்டிரனைவிட பெரியவனாக இருப்பான் என்று எண்ணும்போது அந்த எண்ணம் வருகின்றது அவனுக்கு. பீமனின் அகங்காரம் அலைகழிக்கும் நேரம். மகன் வளரவளர தனது இடம் இல்லாமல் ஆகும் என்று உணரும் தருணம்.

மகனின் வெற்றிக்கு முன் அன்னையை வளர வைக்கும் தெய்வம், தந்தையை தேயவைப்பது முரண் இணைப்பு.
வாழ்க்கையில் எப்போதும் தனக்கு இரண்டாம் இடம்தான் என்று உணர்ந்து இருந்த பீமன் இன்று மகனால் முதல்இடம் பெறுகின்றான். தெய்வம் பெரியது. மகனை நூறாக்கி தந்தையை பூஜியமாக்கும் இறைவன் அந்த பூஜியம் ஒன்று முன்னால் விழும் பூஜியம் என்று காட்டுவது கவிதை. ஒன்று என்பது பத்துமடங்கு, நூறுமடங்கு, ஆயிரம் மங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு என்று அந்த பூஜியம் தன்னை பெரிதாக்கிக்கொண்டே செல்கிறது.

மகன் ஒன்றாகும்போது தந்தை பூஜியம் ஆவது இயற்கை என்றாலும் அந்த பூஜியம் பூஜியம் இல்லை.
//ஊனும் மதுவுமாக அவன் விலகி நின்ற பீமனை அணுகி “தந்தையே,தங்களுக்கு” என்றான்பீமன் திடுக்கிட்டு குலமூத்தாரை நோக்கினான்.கண்கள் சுருங்க அவர்கள் அவனை நோக்கிக் கொண்டிருந்தனர். “அவர்களுக்குக் கொடு!” என்றான் பீமன். “தாங்கள்தான் முதலில்என்றான் கடோத்கஜன்பீமன் திரும்பி இடும்பியை நோக்க அவள்நகைத்தபடி “இனிமேல் அவன்தான் முதல்இடும்பன்அவனை எவரும்மறுக்க முடியாது” என்றாள்பீமன் திரும்பி தன் மைந்தனின் பெரியவிழிகளையும் இனிய சிரிப்பையும் ஏறிட்டுப் பார்த்தான்அவன் அகம்பொங்கி கண்களில் நீர் பரவியது//

அன்னைத்தந்தைகளின் அகம் வழியாக இந்த உணர்வுகளை நான் பகிர்ந்துக்கொண்டாலும், இன்றைய தருணம் பீமன் அடைந்தது வாழ்க்கையின் பெறுதற்கரிய பெரும்பேற்றுத்தருணம். மலையையே வைத்தாலும் சாப்பிட்டுவிடக்கூடியவன் ஒரு துண்டு மாமிசத்தை திங்கமுடியாமல் தவித்த அந்த தருணம் இனி வாழ்வில் எது கிடைத்தாலும் அது இதற்கு ஈடில்லை என்று காட்டும் அற்புத தருணம்.  தவமாய் தவமிருந்தும் பெறமுடியாத தவப்பயன் தருணம். அஸ்தினபுரிக்கே அரசனானாலும் இனி இதற்கு ஈடாகாது என்று சொல்லாமல் சொல்லும்  தந்தையின் ஆனந்த கண்ணீர் தருணம்.

மகன் வெல்லும்போது அம்மா சிரிக்கிறாள் அப்பா அழுகின்றார் அது தன்னைத்தானே வென்று முதலிடம் பெற்று சுகம்காணும் தந்தையின் தருணம். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.