Sunday, March 1, 2015

இரு தம்பியர்






அன்புள்ள ஜெ,

எனக்கு த்ரௌபதி - நகுலன் ; திரௌபதி - சகாதேவன் இவர்களின் இணை (ஜோடி பொருத்தம்) மிகுந்த சுவாரஸ்யமாக படுகிறது.. அர்ஜுனனன் - மிகச்சிறந்த வில்லாளன் / பீமன் - பெருந்தோள் கொண்ட பெரும் வலிமை கொண்ட வீரன், தருமன் - பட்டத்து இளவரசன் என்ற பெரும் தகுதியை கொண்டவன்; அவர்களே த்ரௌபதி என்ற பெரும் ஆளுமை முன்னாள் சிறு குழந்தை என ஆகிறார்கள். அவர்கள் முன்னே எந்த தகுதியும் இல்லாத நகுலனும் சகாதேவனும் எங்கே

இது முற்றிலும் பொருந்தாத இணை / ஜோடிகள்! அவளின் அகத்தில் நகுலனுக்கும் / சகாதேவனுக்கும் எந்த இடம் இருந்திருக்கும்

இப்போதும் நாம் நாட்டில் பார்க்க கூடிய விஷயமாகவே இது இருக்கிறது.. பொருந்தா மனம் .. நான் சொல்வது வயதிலோ / அந்தஸ்திலோ அல்ல .. மனைவியின் ஆளுமை - கணவனின் ஆளுமை என்பதில். சில நேரங்களில் தி.ஜா. இந்த இடத்தினை தொட்டு இருப்பார்.

நீங்கள் மகாபாரதத்தில் வீரர்களை மட்டுமே சொல்லப்போவதில்லை , ஜனநாயக யுகமாகையால் அனைவைரையும் சொல்ல போகிறீர்கள்.

நீங்கள் நகுலன் / சகாதேவன் பார்வையிலும் அதிகம் கூறவேண்டும். தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் அனாதைகளாக , பெரும் ஆளுமை கொண்ட அண்ணன்களின் மத்தியில் , புகழும் இல்லாது வலிமையையும் இல்லாது , தங்களின் ஆளுமைக்கு / திறமைக்கும் ஒவ்வாத மனைவியோடும் (வேறு திருமணங்கள் நடந்ததாக சொல்லபட்டாலும்)அவர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். என்னை பொறுத்தவரை அவர்களின் பார்வை சுவாரஸ்யமான கோணம் ..

கோகுல் சீனிவாசன்

ஐந்து பெண்கள்?



ஜெ

மிகுந்த உற்சாகத்துடன் பால்ஹிகநாட்டு கதையை வாசித்துக்கொண்டிருக்கிறேன். தேவிகையையும் விஜயையும் ஹஸ்திகையையும் பிரேமையையும் வாசிக்கும்போது ஒரு பெரிய பரவசம். அனைவருமே எளிமையான பெண்கள். அழகிகள். ஆனால் வெளிப்படையானவர்கள்

ஒரு திரௌபதியைத்தான் நீங்கள் இப்படி வேறு பெண்களைக்கொண்டு ஈடுகட்டுகிறீர்களோ என்ற எண்ணம் வந்தது. நான்குபேர் வந்துவிட்டார்கள். ஐந்துபேர் வருவார்கள் என்று தோன்றியது,

திரௌபதியை ஒரு உக்கிரநிலைக்குக் கொண்டுசென்றுவிட்டபின் இவர்களைக் கொண்டுவருகிறீர்கள். இவர்கள் திரௌபதியின் மறுபக்கம். இவர்களுடன் ஒப்பிட்டுத்தான் அவளைபுரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன்

சாரங்கன்

மலைமகள்கள்



அன்புள்ள ஜெ

வெண்முகில்நகரத்தில் பூரிச்ரவஸ் சந்திக்கும் பெண்கள் மன்சை கொள்ளை கொள்கிறார்கள். அரண்மனைப்பெண்களுக்குரிய சூட்சுமமும் தந்திரமும் இல்லாதாவ்ர்கள். இல்லத்தில் அடைபட்ட பெண்களுக்கு இருக்கும் நாணமும் இல்லை. வெளிப்படையாக அழகாக இருக்கிறார்கள்

அவர்களை வாசிக்கும்போது தோன்றியது இதுதான். தன் தாபத்தை அசிங்கமாக ஆகாமல் தெரிவிக்கக்கூடிய பெண்ணைப்போல அழகானவள் வேறு இல்லை.

இது ஒரு அனுபவமும்தான். அருமையான சித்தரிப்பு. அதிக விவரணைகள் இல்லாமல் அதை சொல்லிச்செல்லும் விதமும் அற்புதம்

நான் என்ன நினைக்கிறேன் என்றால் உங்களுக்கே இந்த பேலன்ஸ் தேவைப்பட்டிருக்கிறது. இந்தப்பெண்களைக்ச் சித்திரிப்பதன் வழியாக இதுவரை எழுதிய பெண்களைக் கடந்துசெல்கிறீர்கள்

சிவராமன்

வண்ணங்கள்



ஜெ

வெண்முகில்நகரம் தொடங்கியபின்பு தொடர்ச்சியாக தீவிரமே இருந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு பகுதியும் மூன்று அடுக்கு. ஒன்றில் ஆழமான தத்துவக்கேள்விகள். ஒன்றில் உறவுச்சிக்கல்கள். ஒன்றில் தொன்மங்கள். மூன்று அடுக்குகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு வாசிப்பது பெரிய சவாலாக இருந்தது. செறிவான நடை வேறு. அந்தகன் கதைக்கும் அர்ஜுனனுக்கும் என்ன தொடர்பு என்றே ஒருநாள் முழுக்க சிந்தனை செய்தேன்

ஆனால் பிறகு பூரிசிரவஸின் கதை ஆரம்பித்தபோது ஒரு விடுதலை. இனிமையான காதல்கதை போல. அழகான நிலம். இந்த இனிமை முந்தைய தீவிரத்தை அழகாக ஈடுசெய்கிறது.இருண்ட குகைவழியாக வந்து வண்ணங்கள் நிறைந்த நிலத்தில் இறங்கிய விடுதலை

தேவிகையை பூரிசிரவஸ் சந்திக்கும் இடம் அழகு. 

செல்வா

ஆடி




வியாச பாரதத்தில் விசித்திர வீரியனே சில பத்திகள் தான் வருகிறான் என்றால், சித்ராங்கதன் சில வரிகளே வந்திருப்பான். குஹ்யமானசத்தில் தன் ஆடிப் பிம்பம் கண்டு அதை அணைக்கச் சென்று மறைந்ததாகவே வெண்முரசு சொல்கிறது. இளமையில் நான் படித்த பாரதமும் சித்ராங்கதன் அதே பெயர் உள்ள கந்தர்வனால் போரில் கொல்லப்பட்டான் என்றே உள்ளது. அந்தப் போர் மூன்று வருட காலம் நடந்ததாகவும் படித்திருக்கிறேன். எனக்குப் புரிந்த வகையில் சித்ராங்கதன் ஒரு வித மனப் பிறழ்வில் இறந்தான் என்றே தோன்றுகிறது. வெண்முரசு அவ்வாறு ஊகிக்க இடம் அளிக்கிறது.

வெண்முரசில் ஜெ சித்ராங்கதன் என்ற பாத்திரத்தை கிரேக்க தொன்மமான நார்சிசஸ் போல சித்தரித்திருக்கிறார். இந்த நார்சிசஸ் என்பவனிடம் இருந்து தான் நார்சிஸ்ட் என்ற பதம் வந்தது. இந்த நார்சிசஸ் என்பவனை எக்கோ என்ற பெண் விரும்பியதாகவும், அவன் அவளை வெறுத்து ஒதுக்கியதாகவும், அதனால் மனமுடைந்த எக்கோ வெறும் எதிரொலியாகவே மறைந்ததாகவும் ஓர் கிரேக்க தொன்மம் உண்டு. அந்த எக்கோ என்ற பெண்ணின் மீது பரிதாபம் கொண்ட பழி வாங்குதலின் கடவுளான நெமிசிஸ் (இது ஓர் பெண் கடவுள் என்பது உப தகவல்) நார்சிசசை ஓர் தெளிந்த நீர் நிலையில் அவன் பிம்பத்தைப் பார்க்க வைத்தது. தன் பிம்பம் அது என்று அறியாத நார்சிசஸ் அதன் மீது காதல் கொண்டான். அதைத் தழுவ முயன்று அது கைகூடாமல் மூழ்கி இறந்தான். அல்லது தான் கண்ட அந்த அழகானவனை அடையவே முடியாது என்பதை அறிந்து தற்கொலை செய்து கொண்டான்.

இங்கே வெண்முரசில் இன்னும் கொஞ்சம் தெளிவாக்கியிருக்கிறார். சித்ராங்கதன் தன் அழகின் மீதே ஆர்வம் கொண்டவனாகக் காட்டப் படுகிறான். அவன் ஓரினச் சேர்க்கையாளன் என்று கருதவும் இடமிருக்கிறது. ஆனால் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அவன் தன் அணுக்கமானவர்களாக இளைஞர்களை வைத்துக் கொண்டான் என்றும், அவர்களினூடாக அவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான் என்றும் தான் வருகிறது. அவன் தேடியது முழுமையான அழகை அல்லது முழுமையான ஆண்மைத் தனத்தை. அத்தேடல் அவனுக்கு அவனது தாயான சத்தியவதியிடம் இருந்து கருவிலேயே உருவேற்றப்பட்டதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் அவள் தான் யமுனையின் அடிப்பரப்பில் கண்ட அந்த அழகிய கந்தர்வனைத் தான் தன் மகன் என்றே நினைத்திருந்தாள். அதைத் தான் அவன் பிறந்தவுடன் சியாமையிடம் கேட்கிறாள். யமுனையின் அடி என்பது சத்தியவதியின் அக ஆழம் என்று வாசித்தால் அது இன்னும் பொருள் கொள்கிறது. அதனால் தான் அவள் அவனை நானே கொன்று விட்டேனா என்று கேட்கிறாள்.

மேலும் விசித்திர வீரியன் ஓர் நோஞ்சானாக இருக்கப் போய் அவளின் மொத்த எதிர்பார்ப்புகளும் சித்ராங்கதன் மீதே ஏற்றப்பட்டிருக்கலாம். அதைத் தான் அவன் விசித்திர வீரியனிடம் சொல்கிறான், "நன்றாகப்பார்…பட்டுத்துணியை நீவி நீவி ஓவியத்தின் கசங்கலை சரிசெய்வதுபோல உன்னை இதோ சீர்ப்படுத்தியிருக்கிறேன்…" என்று. முழுக்க முழுக்க சத்தியவதியின் எதிர்பார்ப்புகளைத் தன் தோளில் ஏற்று அவன் அந்த முழுமையான அழகனைத் தேடிக்கொண்டே இருந்திருக்கிறான். சித்ராங்கதன் குஹ்யமானசம் வருவதற்கு முன் பல நாட்களாக அந்த கானகத்திலேயே ஓர் மானைத் தேடி அலைந்து கொண்டேஇருக்கிறான். அந்த நாட்கள் அனைத்திலும் அவன் ஆடியை நோக்கவே இல்லை. அவன் வேறு யாரையோ தேடாமல், தானாகவே இருந்திருக்கிறான். பல நாட்கள் கழித்து குஹ்யமானசத்தின் தெளிந்த நீரில் தன் உருவத்தைத் தானே கண்டதும் அவனுக்கு அரண்மனையில் செய்து கொண்டிருந்தவை அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. இனி மீண்டு அரண்மனை சென்றால் தான் தானாகவே இருக்க இயலாது என்றும், மீண்டும் இல்லாத ஒருவனை ஆடியில் தேடத் துவங்குவோம் என்றெல்லாம் மனம் பிறழ்ந்திருக்கலாம். அதன் விளைவாகவே அந்த சுனையில் விழுந்து இறக்கிறான். அதைத் தான் கவித்துவமாக "நீருக்குள் இருந்த சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் அவனை அணைத்து இழுத்துக்கொண்டு ஆழத்துக்குள் புகுந்துகொண்டான்" என்று வெண்முரசு சொல்கிறது. 

அன்புடன்,
மகாராஜன் அருணாச்சலம் 


சொற்பரிதி, சொல்நதி, சொல்வனம்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பத்தொன்பது)




அன்பு ஜெயமோகன்,
          ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து புலர்கின்றன கதிர்களாய் சொற்கள். ஒவ்வொரு கதிரிலும் பறவையின் துடிப்பு. ஒவ்வொரு கதிரிலும் மானின் பாய்ச்சல். புலர்கின்றன கதிர்கள். நடுங்குகிறது இருள். சேர்ந்து சேர்ந்து சொற்கள். நெருங்கி நெருங்கி சொற்கள். அணைத்த சொற்களின் திரள் வெளிச்சம். இருளுக்கு எதிரான பெரும் முழக்கம். கதிர்களின் தொகுப்பில் உருப்பெறுகிறது பரிதியொன்று. காணும் விதிர்ப்பில் கருக்கொள்கிறது சுருதியொன்று.
          ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து புலர்ந்த சொற்பரிதி. கதிர்களின் வெம்மையில் குளிர்காய்கிறேன். அனலின் கதகதப்பில் அலைபாய்கிறேன். இருளைக் கிழித்து சொற்களின் தாவல். இணையாய் விரைகிறது வாழ்வின் பாடல். சொற்களின் பயணத்தில் புதுப்புதுக் காட்சிகள். கண்டுகொள்பவருக்கு கணக்கில்லா மீட்சிகள். கதிர்களின் முதுகேறிப் பயணிக்கிறேன். காலங்கள் பொடியாக பிரமிக்கிறேன்.

ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து அரும்புகின்றன துளிகளாய் சொற்கள். ஒவ்வொரு துளியிலும் வேரின் மூச்சு. ஒவ்வொரு துளியிலும் படைப்பின் வெப்பம். அரும்புகின்றன துளிகள். நோக்குகின்றன விழிகள். நழுவி நழுவிச் சொற்கள். தழுவித் தழுவி சொற்கள். திரண்ட சொற்களின் தேரோட்டம். வடம்பிடிக்கத் துடிக்கும் போராட்டம். உருண்டோடும் சொற்களில் கிளைக்கிறது நதியொன்று. திகைப்பின் தத்தளிப்பில் துவங்குகிறது துதியொன்று.  
          ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து முகிழ்த்த சொல்நதி. நுரைத்தோடும் சொற்களில் கரைந்தோடுகிறேன். இழுவைக்கு இணங்கி விரைந்தோடுகிறேன். வழிகளைக் கிழித்துச் சொற்களின் பயணம். நடுங்கி நிற்கிறது வாழ்க்கையின் மரணம். சொற்களின் பாய்ச்சலில் புதிய திசைகள். விரியும் காட்சிகளில் துடிக்கும் இசைகள். நுரைத்தோடும் சொற்களில் கரைந்தோடுகிறேன். ஒவ்வொரு கணமும் நிறைந்தோடுகிறேன்.

          ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து நிமிர்கின்றன மரங்களாய் சொற்கள். ஒவ்வொரு மரத்திலும் குழந்தையின் பால்வாசம். ஒவ்வொரு மரத்திலும் கன்னியின் முலைவாசம். நடனமாடுகின்றன மரங்கள். தழுவத்துடிக்கின்றன கரங்கள். நகர்ந்து நகர்ந்து சொற்கள். சேர்ந்து சேர்ந்து சொற்கள். குவிந்த சொற்களின் புதுநடனம். விரிந்த காட்டின் பெருமெளனம். சொற்களின் அசைவில் பூக்கிறது மென்காற்று. மயங்கும் மனதிலிருந்து எழுகிறது புதுப்பாட்டு.
          ஒற்றைப்பெருஞ்சொல்லில் இருந்து விளைந்த சொல்வனம். நெருங்கி இருக்கும் மரங்களில் குதித்தேறுகிறேன். கிளைகளைத் தொங்கிக் கொண்டு களைப்பாறுகிறேன். மரங்களுக்குள் சுழன்று சுழன்று புதுநடனம். இலைகளின் தழுவலோடு களிநடனம். காணும் மரங்களில் கணக்கில்லா கனிகள். சொட்டும் சாற்றில் அளவில்லாச் சுவைகள். மரங்களின் தலைகள் மிதித்து முன்செல்கிறேன். துயரங்களின் பிடிதகர்ந்து பின்செல்கிறேன்.  

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.