Tuesday, May 29, 2018

இறைப்பாடல்




அன்புநிறை ஜெ,
 இமைக்கணம் 47 தலைப்பு இறைப்பாடல் என்றதுமே சிகரத்தின் உச்சியில் பொன் சுடர் ஏற்றும் தருணம் எனப் புரிந்தது.
 இமைக்கணம் காலத்தை சுழியென வளைத்து முன்பின்னற்ற வடிவில் ஒவ்வொருவராய் வந்து தத்தமது அறக்குழப்பங்களை கடக்க வாய்ப்பளித்துக் கொண்டிருந்தது. அவ்வரிசையில் பார்த்தன் கனவின் வழி விஷாத யோகத்தில் நுழைந்து, கிருஷ்ணார்ஜுன இணை கனவொன்றின் வழி ரதத்தை குருஷேத்திரத்தில் நிறுத்தி கீதை துவக்கிய கணம் -
ஒவ்வொரு சடங்காய் முடிந்து, திரை விலகி, இறைமுன் லட்ச தீபம் காட்டும் நிமிடம் போல.  பெரு அரங்கில் ஒவ்வொரு  திரையாய் விலகி, துணை பாத்திரங்கள் களம் அமைக்க, உரிய தருணத்தில் இசை முழங்கி நிற்க, திரை மாறி எழும் உச்சதருணத்துக் கதைத் தலைவன் போல ஒரு நுழைவு பகவத் கீதையெனும் இறைப்பாடலுக்கு. கீதைக்குரிய சொல்லாட்சி, வேறெந்த சொற்களாலும் சொல்லிவிட இயலாதெனும் வண்ணம் வந்து அமைந்து கொள்ளும் வாசகங்கள், உங்கள் வாயிலாக எங்களை வந்தடைகிறது. இன்றைய இமைக்கணத்தில் வரும் ஞான-விஞ்ஞான யோகம்,  "ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச" -"Existential, Hypostatic and sacrificial aspects "என்று குரு நித்யாவின் உரையில் நேற்று வாசித்தேன்.
புடவிமெய்மை, தெய்வமெய்மை, வேள்விமெய்மை என்றெழுதி விட்டீர்கள். வார்த்தைகள் இறைப்பாடலுக்கென வந்தமர்கின்றன.சத்வ, ரஜோ, தமோ நிலைகளுக்கு நன்னிலை, வெல்நிலை, உறைநிலை; நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்புக்கு இன்னுமொரு செறிவான மாற்று.
 மிக்க அன்புடன்,
சுபா இதே தருணத்தில் குரு வியாச பிரசாத் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒலிப்பதிவுகள் மற்றும் குறிப்புகளின் துணையோடு குரு நித்ய சைதன்ய யதியின் கீதையை வாசிக்கக் கிடைத்திருப்பது பெரும் பேறு.
 

உரையாடல்




ஜெ

சம்பாபுரியில் அவையில் அவர்களும் உறங்குகிறார்கள். ஆணைகள் முடிந்து அலுவல்நிறைவை அறிவிக்கும் அமைச்சரிடம் கர்ணன்  “மலைப்பாறைக் கூட்டங்கள் நடுவே காற்று செல்வது போல் உள்ளது இவ்வுரையாடல் அமைச்சரே” என்கிறான். அவர் பதிலுக்கு “ஆம். ஆனால் மலைப்பாறைகளைப் போல் காலத்தில் மாறாத சான்றுநிலைகள் பிறிதில்லை” என்றார். கர்ணன் அதற்கு “ஆகவேதான் நமது தெய்வங்களை பாறைகளிலிருந்து செதுக்குகிறார்கள் போலும்” என்றான். அமைச்சர் உடனே  அவையை நோக்கி ”இன்னும் வெளிப்படாத தெய்வங்கள் உறங்கும் கற்பாறைகளுக்கு வணக்கம்” என்றார்.

கர்ணன் எப்படி சம்பாபுரியின் அமைச்சர்களையும் குடிகளையும் கவர்ந்தான் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டுசெல்லும் அத்தியாயத்தில் இந்த நகைச்சுவை உரையாடல் வருகிறது. மென்மையான நகைச்சுவை. கவனித்தால் மட்டுமே புன்னகை வருவது. நான் ரேண்டமாக வெய்யோனை எடுத்துப்புராட்டியபோது இந்த வரிகளை வாசித்தேன். அத்தனைபேரும் தூங்கும் சபையில் இரண்டுபேர் மட்டும் இப்படி ஒருவருக்கொருவர் மெல்லிய புன்னகையுடன் சீண்டிப்பேசிக்கொள்வது பிடித்திருந்தது

ஜெயராமன்

எளியவர்களின் சுழி




 ஜெ

மாமலரில் வரும் இந்த வரிகளை வெட்டி ஒட்டியிருந்தேன். அதை இன்றைக்கு வாசித்தேன். புரூரவஸின் நாடுகடத்தலில் ஊர்மக்கள் பேசுவது. பெரும்பாலும் முதியவர்கள்


“எண்ணுகையில் எளியோனாக வாழ்ந்து எளியோனாக இறப்பதே உகந்ததென்று தோன்றுகிறது”

“யானைக்கு புண் வந்து சீழ் கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? படிகக் கோடரியால் வெட்டி முழங்கைவரை உள்ளேவிட்டு மருந்திடுவார்கள். பெருவலி கொண்டு அக்கரிய உடல் துடிப்பதை நெடுந்தொலைவிலேயே நின்று பார்க்கமுடியும்.”

“எறும்புக்கும் யானைக்கும் இறப்பு ஒன்றேதான் போலும்”

”ஆற்றல்மிக்க விலங்குகள் நொந்து நாட்பட்டு சாகின்றன. எறும்புகள் நொடியில் பல்லாயிரமென மறைகின்றன. ஊழுக்கும் கருணையுண்டு”

“எவர் துயரும் அதற்கு ஒரு பொருட்டல்ல. எல்லாமே குமிழிகள்தான் நதிக்கு. அதில் பெரிதென்ன சிறிதென்ன?”  

இந்த வரிகள் வழியாக அவர்கள் புரூரவஸின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முயல்கிறார்கள். எவருக்கும் கொஞ்சம்கூட கருணையோ அனுதாபமோ இல்லை. மிகப்பெரிய மனிதர்களின் வாழ்க்கையை மக்கள் ஒருமாதிரியான கசப்புடன் பார்க்கிறார்கள். அவர்கள் வீழ்ச்சி அடையும்போது நிறைவடைகிறார்கள். நாமெல்லாம் சாமானியர்களாக இருப்பதே மிகப்பெரிய விஷயம் என நினைக்கிறார்கள். அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள். அதைக்கொண்டு மனதை ஆறுதலடையச்செய்கிறார்கள். அந்த பரிதாபத்தையே இவ்வாறு தத்துவமாக ஆக்கிக்கொள்கிறார்கள்

ஆனால் அதில் கடைசியாகப்பேசுபவர் பெரிதுக்கும் அப்பாலுள்ள பெரிய ஒன்றை உணர்ந்தவர் என நினைத்தேன்

சங்கரநாராயணன்

அதிகாரம்




ஜெ


பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனின் கதாபாத்திரத்தை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் ஏற்கனவே எழுதிய இரண்டு கடிதங்களுக்கும் உங்களிடமிருந்து பதில் இல்லை. இருந்தாலும் இதை எழுதவேண்டுமென்று தோன்றியது. நான் இருபத்தாறு ஆண்டுகள் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைபொறுப்பில் இருந்த ஒருவரிடம் பீஏ ஆக வேலைபார்த்து ஓய்வுபெற்றவன். அவருடைய குணாதிசயத்தை நான் கடைசிவரை சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. அவர் கொடுமையானவர் . இரக்கமே கிடையாது. வெற்றி லாபம் ரெண்டும்தான் வாழ்க்கையில் முக்கியம். 


ஆனால் அதேசமயம் மிகவும் கருணையுடனும் அவ்வப்போது இருப்பார். பல விஷயங்களில் அள்ளி அள்ளி விடுவார். நான் அது ஒரு உத்தி என நினைக்கிறேன் . அவர் கொடுமைசெய்யும்போது அவரை மக்கள் வெறுக்கிறார்கள். அவர் ஒரு சின்ன நன்மையாவது செய்யக்கூடாதா என ஏங்குகிறார்கள். ஏனென்றால் அவர் அப்படி ஒரு நன்மை செய்தால்தான் மனிதர்களைப்பற்றிய இவர்களின் தியரி சரியாகிறது அவர் நன்மைசெய்ததும் அவர்கள் இவரை புகழ்ந்து கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள்.  அந்த நன்மையை எண்ணி மிகையாக கண்ணீர் விடுகிறார்கள். என்ன இருந்தாலும் அவரு ஆளு ஜெண்டில்மேனுப்பா என்கிறார்கள். 


ஜராசந்தனை வாசிக்கையில் அவரும் இப்படியே இருக்க்கிறார். ஜராசந்தன் மாத்திரமல்ல அனேகமாக அதிகாரத்தில் உள்ள எல்லாருமே இரண்டாகப்பிரிந்தவர்கள்தான்

கிருஷ்ணசாமி

செந்நா வேங்கை




அன்புள்ள ஜெ

எதிர்பார்த்திருந்த போர் தொடங்கவிருக்கிறது. தலைப்பே பதற்றமான மன எழுச்சியையும் அதேசமயம் ஓர் அழகுணர்வையும் உண்டுபண்ணுவதாக உள்ளது. நாங்கள் ஒருமுறை காசிரங்கா காட்டுக்குள் வேட்டையாடி தின்றுகொண்டிருந்த ஒரு புலியைப்பார்த்தோம். அந்த விலங்கு என்ன என்று அந்தப்பதற்றத்தில் சரியாகக் கவனிக்கவில்லை. அதிகநேரம் பார்க்கவுமில்லை. ஆனால் அந்த சிறிய நேரத்திலேயே புலியின் வாய் ரத்தத்தால் சிவந்திருப்பதையும் மீசைமுடிகளில் ரத்தம் இருப்பதையும் பார்த்தேன்  நீண்டநாள் என்னால் அந்தக்காட்சியை மறக்கமுடியாமல் இரவில் கனவுகண்டேன். செந்நா வேங்கை என குருக்ஷேத்திரத்தைச் சொல்லியிருப்பது அழகான ஆனால் குரூரமான கற்பனை என நினைக்கிறேன்

மீனாக்ஷி ராமநாதன்

Monday, May 28, 2018

நாடோடி



ஜெ

வெண்முரசில் பெயரில்லாத, முகமில்லாத சிலர் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் சிலர் சூதர்கள். சிலர் நாடோடிகள். அவர்கள் சொல்லும் ஒற்றைவரி நக்கல்கள் வெண்முரசின் கிளாஸிக் தன்மையின் இன்னொரு முகம். போகிறபோக்கில் அவை வருகின்றன. முதற்கனலில் பீஷ்மரை நக்கலடிக்கும் சூதர் முதல் ஏராளமானவர்கள் வருகிறார்கள். இன்று வாசித்தபோது ஒரு வரி. காண்டீபத்தில் வணிகன் பாரதவர்ஷத்தை இணைப்பது எது என கேட்கிறான். வணிகம்தான் என்று சொல்லவருவது அவன் நோக்கம் ஆனால் நாடோடி வேறு ஒன்று சொல்கிறான். [“நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன? சொல்!” என்றார் முதுவணிகர். நாடோடி “நானறிந்தவரை பசியாலும் போராலும்” ]என்றான்அந்தப்பதிலுக்கு அங்கே இடமே இல்லை. அதை பொருட்படுத்தாமல் வணிகன் மேலே பேசுகிறான். அந்த இடம்பொருள் அறியாத வரி வரலாற்றின்மேல் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் அன்னியனின் கசப்பு நிறைந்த விமர்சனம் என நினைக்கிறேன்

ராஜ்மோகன்