Monday, December 29, 2014

விஸ்வரூபப் புன்னகை



அன்புள்ள ஜெ

விதுரர் நெடுமூச்சுடன் மீண்டும் கிருஷ்ணனை எண்ணிக்கொண்டார். மக்களைப்பற்றி இத்தனை அறிந்த ஒருவன் வேறில்லை. ஆனால் அவன் மக்களை விரும்புகிறான். அவர்களுக்காக தன் வாழ்க்கையை அளிக்கிறான். ஒவ்வொரு கணமும் முழுமையாக மன்னித்துக்கொண்டே இருந்தாலொழிய அது இயல்வதல்ல. இந்நிலையில் அவன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான். இவர்கள் அவனை கல்லால் அடித்துக் கொன்றிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பான்? அப்போதும் அவன் இதழ்களில் அந்தப் புன்னகை இருந்திருக்கும்.

இன்றைய உங்கள் ஆக்கம் பெரிதினும் பெரிது.
நீங்கள் எழுதியிருப்பது தெய்வங்களுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல.
சாதாரண மனிதர்களுக்கும் பொருந்தும்.
ராமனின் தியாகத்தைப் போற்றுபவர்கள் குறைவு. சீதைக்கு அநீதி;இழைத்து விட்டார் என்பார்கள், அவரும் தனிமையில் எவ்வளவு நொந்திருப்பார். ராஜாவாக இருந்ததால் ராஜ பரிபாலனம் என்ற பாறாங்கல் வேறே தலை மேலே. பாவம் அவர். தனியாகவே இருந்தவருக்கு கர்பகிரஹததில் மட்டும் கூட்டம்.
கிருழ்ணன் எல்லோருக்கும் பண்ணி பணணி கடைசிவரை போராட்டம் தான்.
நீங்கள் எழுதிய புன்னகை என்னையும் அதிர வைத்தது விதுரரைப் போல.
இது நான் இது வரை உணராமல் இருந்த உணர்வு.
ஏற்கெனவே கிருஷ்ண பித்தான எனக்கு இன்று அந்த புன்னகை இன்னும் என்னை அவன் பால் மேலும் ஈர்த்தது மட்டுமில்லாமல் என்னை பலப் படுத்திக் கொள்ளவும் உதவியது.
கிருஷ்ணன் எப்பவும் உங்களுடன் இருக்கட்டும். அப்போதுதான் என்னால் அவனை உணர்ந்து கொண்டு இருக்க முடியும்.

அன்புடன்

மாலா.

பிரேமையின் உடல்



ஜெ

நீலத்தை இப்போதுதான் வாசித்து முடித்தேன். இந்த நாநூறுபக்க நூலை நான் இரண்டு மாதமாக தினமும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதைப்போல முழுமையான பித்து நிறைந்த ஒரு ‘பித்தகத்தை’ நான் இதுவரைக்கும் வாசித்ததில்லை. கட்டுப்பாடில்லாமல் செல்லும் கற்பனையை ஒரு வடிவத்திர்குள் கொண்டுவந்ததனால்தான் இதை வாசிக்கவே முடிகிறது.

ராதை இங்கே பிரேமையாக இருக்கிறாள். இந்தப்பிரேமைதான் கிருஷ்ணனை உருவாக்கி எடுத்திருக்கிறது. ராதை என்ற பிரேமை ஏன் மனித மனதிலே உருவாகியது. அது செயற்கையானது அல்ல. அது பிரகிருதியிலே இருக்கிற ஒரு பாவம் . ஆனால் நிரந்தரமானது இல்லை. கொஞ்சநாள் கொஞ்சநேரம் மட்டுமே இருந்து மறைகிறது

அந்த பிரேமபாவத்தை நிரந்தரமான ஒரு நிலையாக ஆக்கிவிடமுடியுமா என்று பார்க்கிறார்கள் மனிதர்கள். அந்த முயற்சியில் இருந்துதான் இந்த ராதா பாவம் உருவாகி வருகிறது

ராதை என்றாள் ஆராதிப்பவள் என்ற அர்த்தம் எனக்கு ரொம்ப புதிசு. நினைக்க நினைக்க நெஞ்சை உருவக வைக்கும் நிலை அது. ராதாபாவத்தை அடைய மனசு நெகிழ வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு இது. எனது குரு சொல்வார். பெண் என்பதே பக்தனின் நிலை. அதுதான் தனக்குள் இன்னொன்றை உள்ளே விடுகிறது. தனக்குள் இன்னொன்று உருவாகவும் சம்மதிக்கிறது. அந்த இயல்பு ஆணுக்கு இல்லை என்று

அந்த மனநிலையே ராதையாக ஆகிவிடுகிறது என்று நினைக்கிறேன். இதை இன்னொருமுறை வாய்விட்டு வாசித்தாகவேண்டும்

மணவாளன்

துரியோதனனை விரும்புதல்...

ஜெ



துரியோதனனை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுகிறோம் என்பதுதான் வெண்முரசின் பெரிய வெற்றி. அவன் ஒரு டிராஜிக் ஹீரோ என்று தோன்றுகிறது. பீமன் உயிருடன் இருக்கிறான் என்று தெரிந்ததும் அவன் ஆயுதப்பயிற்சி எடுக்க ஆரம்பிக்கும் இடம் அவனைப்பார்க்க பரிதாபாகவே இருக்கிறது

அவனுடைய குணச்சித்திரம் அதிக நுட்பமான அறிவில்லாத அகங்காரம் கொண்டவனாகவே இருக்கிறது. எதையும் நுணுகி ஆராய முடியவில்ல  ஆகவே மாமனின் கையில் பாவையாகவே இருக்கிறான். அவன் தீமை நிறைந்தவன் ஆனால் சகுனியை தீமையின் வடிவமாகக் காட்டியதும் அவன் நமக்கு பிரியமானவனாக ஆகிவிடுகிறான். வியாசரின் நோக்கமே அதுதானோ என்னமோ

சத்யநாராயணன்


கேரளத்தின் துரியோதனன் கோயில்



ஜெ,

துரியோதனன் கோயில் பற்றி ஒரு கடிதம் பார்த்தேன். கேரளத்தில் கொல்லம் அருகே  மலநடா என்ற ஊரில் ஒரு துரியோதனன் கோயில் உள்ளது. அங்கே துரியோதனனை சாமியாக கும்பிடுகிறார்கள். எல்லாவகையான பூசைகளும் உள்ளன. துரியோதனன் ஆண்மை, பெருந்தன்மை ஆகியவை கொண்ட தெய்வ வடிவமாக வழிபடப்படுகிறார்

துரியோதனன் நாடு காண்பதற்காக இங்கே வந்தபோது இங்கே வாழ்ந்த குறவர் குடும்பம் ஒன்றில் தண்ணீர் வாங்கி அருந்தியதாகவும் அந்த நன்றிக்காக அவர்களுடன் தங்கி சிவபூசை செய்ததாகவும் தொன்மம். அவர்கள் கட்டிய கோயில் இது.


இந்தியா முழுக்க இந்த வழிபாடு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில்கூட துரியோதனன் படுகளம் என்ற கூத்து நிகழ்ச்சி உள்ளது. ராஜஸ்தானில் ஜோத்பூரில் ராவணனை கடவுளாக வழிபடுகிறார்கள்.

சிவராம்

http://keralapilgrimcenters.com/duryodhana-temple-malanada-kollam-hindu-pilgrim-festival-kerala/

பிரயாகை-58-துருவ தரிசனம்.




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இரவு தனிமையில் படுக்கையை  தலைகவிழ்ந்து பார்த்துக்கொண்டு இருட்டில் அமர்ந்திருந்த விதுரர் காலையில் மனைவி சுருதையை பின்னால் அனைத்து பின் கழுத்தில் முத்தமிடுகின்றார். வாழ்க்கை அவ்வளவுதான் என்பதா? ஆண் அவ்வளவுதான் என்பதா? அவ்வளவுதான் ஆண் என்றால் அதுதான் வாழ்க்கை. அப்படி ஆண் இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை.

நிழலின் அருமை வெயிலில் என்பார்கள். நிழலே கிடைக்காத வெயில் வரும் என்றால் அந்த நிழலின் அருமையை யார் தரமுடியும். மனம் மட்டும் அல்லவா அறியமுடியும். சுருதை என்னும் நிழலின் பதிலின் வழிவரும் அருமை. வாழ்வின் மெல்லிய சுவர்களில் அறைந்து அதிரச்செய்கிறது. //சினமா?” என்று சுருதைகேட்டாள். “ஆம்” என்றார் விதுரர். “இதற்கு நான் என்ன சொல்வது?நான் இறந்தபின்னர்தான் அதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்என்று அவள் இடறியகுரலில் சொன்னாள்//

நிழல் கிடைக்கும் வெயிலே தம்பதியரின் வாழ்க்கையில் இருக்கட்டும். இதைத்தான் வள்ளுவன் ஊடலுக்கு பின் கூடல் என்கின்றான்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்,
கூடி முயங்கப் பெறின்-திருக்குறள்.

துறவிக்கும் சம்சாரிக்கும் இடையில் எவ்வளவு தூரம் என்று நினைத்துப்பார்த்தேன், மனைவியின் வாசம் இருக்கும் தூரம்.

விடிஞ்சா விதுரன் துறவியாகிவிடுவான் என்று நினைத்தேன். காரணம் பெண் ஆணுக்கு துறவின் எல்லையை காட்டிக்காட்டி தாண்டிப்போகமலும் கட்டிவைக்கிறாள். இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்றும் நம்ப வைக்கிறாள். நான் செத்தா தெரியும் என்று பயமுறித்தியும் வைக்கிறாள்.

ஒரு அம்மா காட்டில் உண்மையை கதை கதையாய்  சொல்கிறாள். ஒரு மனைவி வீட்டில் கதையை உண்மையை உண்மையாய் செய்கிறாள். அம்மாவிற்கும் மனைவிக்கும் இடையில் மாட்டிக்கொண்ட மத்தென்னும் ஆண் வாழ்க!

ருசியில் விழிந்து கொந்தளிக்கும் விதுரன் துருவ தரிசனத்திற்குபின் நீதியின் வழியில் திரும்பி வரும் படைப்பு அற்புதம் ஜெ.

//(துருவனை)அவனை மையமாக்கியே வானமும் பூமியும்இயங்குகின்றனஒளிமிகுந்த பால்வழியில் விஷ்ணுவின் பாதங்களில்அமர்ந்திருக்கிறான்யோகியர் ஒவ்வொரு மாதமும் துருவனைபார்த்தாகவேண்டும்கற்புள்ள மங்கையர் ஒவ்வொரு வாரமும்அவனைப் பார்க்கவேண்டும்படைக்கலமேந்திய வீரன்ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்கவேண்டும்.”-பிரயாகை-5//

இந்த வரிகளை இன்று நினைத்துக்கொள்ளும்போது பேரானந்தம் ஏற்படுகின்றது. அசைந்துக்கொண்டே இருக்கும் மனம் ஏதோ ஒரு அசைவின்மையையில் தன்னை கட்டிக்கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை, ஈர்ப்பு விசையைவிட்டு விடுபட்ட கோல்போல அண்டவெளியில் வழிதப்பி சென்றுவிடும்.

பெரும் மனசஞ்சலத்திற்கு பிறகு துருவனை கண்ட விதுரன் அதை நீலவிண்மீனாக கண்டதும் ஆழ்மனத்தில் இருக்கும் சுருதை அதைக்கண்டு விலகிவிடுங்கள், வந்துவிடுங்கள் என்றபோது விதுரன் சுருதையை உணர்ந்து இருப்பான். காலையில் எழுந்தபோது அவளை அனைத்துக்கொள்ளவேண்டும் என்றும், என்றும் தன்னை குழந்தையாக உணரவேண்டும் என்றும் அறிந்து இருப்பான். அதுதான் சரியான உண்மையும் கூட. நடமுறை வாழ்க்கைக்கு அதுதான் வழியாகவும் இருக்கும்.

//விதுரர் அவள் கழுத்தில் முகம் சேர்த்து “அன்னையாகவே இருசுருதைசிலசமயம்…” என்றார். “ம்?” என்றாள் சுருதை. “சிறுமையும்கீழ்மையும் கொண்ட ஒருவனாகவே என்னை நீ அறிய நேரும்.அப்போதும் அன்னையாகவே இரு!” அவள் மெல்ல சிரித்து அவர்தலையை வருடி “என்ன பேச்சு இது?” என்றாள்சிலகணங்கள்இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தபடி இருந்தனர்//-மானிட வாழ்க்கை மாறா பாவனையும், இளகா கட்டமைப்பும் கொண்டது இல்லை. அப்படி இருந்தால் அது ஜடமாகவிடும் என்பதை காட்டும் இடங்களால் இந்த பகுதி அழகு பெருகின்றது. மீண்டும் வாழ்க்கை சுவையும், அர்த்தமும் கொண்டதாவது அதன் மாறும் தருணங்களால்தான். நதியின் ஓட்டமும், கடலின் அலைகளும்தான் அழகு.  

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களில் விழுந்து எழுந்து சென்றாலும் எனக்கு அச்சமில்லை, இது எனக்கு பிடித்தமானதே என்பதில் இருக்கும் அந்த அழுத்தம்தான் விதுரன் கண்ணனோடு கொண்டுள்ள பிணைப்பின் மூலத்தையும் அவனின் முழுமையின் அசைவின்மையையும் காட்டுகின்றது. துருவனை நீலமாக தரிசித்த விதுரனுக்கு வணக்கம். 

ஆடும் கங்கையும், அசையா துருவனும் படிமமாகி விதுரனில் இணையும் பிரயாகை-58.

நன்றி
வாழ்க வளமுடன்
ராமராஜன் மாணிக்கவேல். . 

Sunday, December 28, 2014

வெள்ளம் வடிந்தபின்



அன்புள்ள ஜெமோ

பிரயாகை அழகிய சிறிய சித்திரங்களுடன் சென்றுகொண்டிருகிறது. கொஞ்சநாள் வாசிக்க விட்டுவிட்டு ஒரே மூச்சிலே வாசித்து முடித்தேன். சண்முகவேலின் ஓவியங்கள் அதே தரத்திலே இருப்பதை கண்டு வியந்தேன்

நாவலின் பெரிய அழகே பலமனிதர்களை தொட்டுத்தொட்டுச் செல்வதுதான். சிவையை ஒரு உற்சாகமான வேலைக்காரியாகப் பார்த்தது ஞாபகத்திலே இருக்கிறது. அவள் அரசியாகி கிறுக்காகி செத்துப்போய் அந்த பால்கனியில் விதுரர் வந்து உடகார்வதைப்பார்க்கையில் மனம் பதைத்தது. வாழ்க்கை எவ்வளவு சீக்கிரமாக ஓடிப்போய்விடுகிறது

வெள்ளம் வந்து வடிந்தபிறகு காவேரியிலே நின்றால் ஒரு தனிமை வரும். அங்கே அவ்வளவு வெள்ளம் வந்தது ஞாபகமே வராது. நினைத்தே பார்க்கமுடியாது. ஒருவருஷம்தான் ஆகியிருக்கிறது அதற்குள் இப்படி கதை வளர்ந்துவிட்டது

அதைவிட பிரயாகையை வாசித்தபின் நீலம் வாசித்தது போன ஜென்ம ஞாபகம் மாதிரி ஆகிவிட்டது. இந்த முழு வாழ்க்கை அனுபவம்தான் வெண்முரசின் பங்களிப்பு

சாரங்கன்