Wednesday, August 26, 2015

புலிக்குருளை பாதை



இறைவன் அடியவர்களை ஆட்கொள்ள வழியில்லாத இடத்திலும், ஒரு வழியை உண்டாக்கி அவர்களை அடைந்துவிடுகின்றான். எந்த வழியில் அவன் வருவான்? நாம் நினைக்கும் வழி நமக்கு கிடைக்குமா? எல்லா வழியிலும் வரும் அவனை எந்த வழியில்நின்று எதிர்க்கொள்ளமுடியும்?. ஒருவருக்கு பயன்பட்ட வழி மற்றவருக்கு பயன்படுமா? அவனே அறிவான் அவர் அவர்களுக்கான வழியை.

சில அடியவர்களை பூவைக்கிள்ளுவதைப்போல கிள்ளியதே தெரியாமல் கிள்ளி எடுத்துவிடுகிறான். கிள்ளுபவனும் புன்னகைக்கிறான், கிள்ளப்பட்டப்பூவும் புன்னகைக்கிறது. 

சில அடியவர்களை பாறை உடைப்பதுபோல உடைத்து எடுக்கிறான், உடைப்பவனும் குருதி சிந்துகிறான், உடைபடும் கல்லிலும் குருதி வழிகிறது.

சில அடியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அபிராமிப் பட்டர்  சொல்லதுபோல அவர்களுக்கு முன் செய்த புண்ணியம் இருக்கின்றது. தடையேதும் இன்றி செல்கின்றார்கள்.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே
-அபிராமி அந்தாதி.

மித்திரைக்கு எல்லாம் தலைகீழாக இருக்கின்றது. நீலன் பெயர்கூட சொல்லமுடியவில்லை எப்படி நீலன் புகழ்பாட முடியும்? அவள் எப்படி நீலனை அடைவாள்?. அவள் செய்த புண்ணியம் அவ்வளவுதான். முன்னம் அவள் நாமம் கேட்டதில்லை, அவள் வண்ணம் கேட்டதில்லை, அவனுடைய ஆரூர் கேட்டதில்லை, அவனுக்காக அவள் பிச்சி ஆனதில்லை, அன்னை, அப்பனை நீக்கும் வல்லமையும் இல்லை, அவள் எப்படி அவன்தாள் பற்றவாள், அவள் வினைவழி அப்படி.

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே-அபிராமி அந்தாதி.

வினைவழியே ஓடும் அவள் நீலன் என்ற பெயரை மட்டும்தான் கண்டுக்கொண்டாள்.  அந்த பெயரைக்கூட ஒலியற்ற வடிவில்தான்  இதுவரைக்கண்டு இருக்கிறாள். அவள் எப்படி நீலனை அடைவாள்?

பக்தியில் இரண்டு வகை இருக்கிறது, ஒன்று மர்க்கட பக்தி மற்றொரு மார்ஜால பக்தி. மர்க்கடப்பக்தி என்பது குரங்குக்குட்டி தனது தாயைப்பற்றிக்கொள்வதுபோல பக்தன் இறைவனைப்பற்றிக்கொள்வது. ஆண்டாள் அரங்கனைப்பற்றிக்கொண்டது.   மார்ஜாலப்பக்தி என்பது பூனை தனது குட்டியை கவ்வி எடுத்துப்போவதுபோல இறைவன் பக்தனை எங்குவேண்டும் என்றாலும் எடுத்து வைத்து தக்க நேரத்தில் வந்து தூக்கிச்செல்வது. மித்திரைகொள்வது மார்ஜாலப்பக்தி. மித்திரை எறும்பினும் சிறிதாகி தனக்குள் தான் நுழைந்து தன்னை  இதழ்ந்து நீலன் என்று இருக்கிறாள். இருளுக்குள் இருள் என்று ஆகி, இருளில் எழும் ஒளிக்கண்டு நீலனை கண்டுக்கொள்கிறாள். நின்றும், கிடந்தும், இருந்தும் அவள் நினைப்பது அவனை மட்டும்தான். எறும்பினும் சிறு எறும்பு என்று ஆகும் நாளில் தன்னால் எதுவும் ஆகாது என்று அவள் ஆணவத்தை விடுவதை நீலன் அறிந்து வந்தானோ? அவள் ஆணவம் விடும் நாளில் நீலன் அவளுக்காக வருவது அழகு, தானே நேரே சென்றால் பயந்தே செத்துவிடுவாள் என்று பெண்ணுக்கு பெண்ணையே குருவென்று துணைவைக்கும் நீலன் ஞானன். .

நீலனிடம் மித்திரையை சேர்க்க சுபத்திரை அவளை எடுத்துச்செல்லும் நாளில் அவளின் மார்ஜாலபக்தி வெல்கிறது. புலியன்னையால் குருளையென கவ்விக்கொண்டு செல்லப்படுவதாக மித்திரவிந்தை உணர்ந்தாள்-இந்திரநீலம்-86.

மார்ஜாலப்பக்தியில் அவள்  நீலன்பெயரோடு கனவில் மட்டும்தான்  நுழைந்தாள்,  கனவு முடியும்முன்னமே நீலனுக்காக அவள் எடுத்துச்செல்லப்படுகிறாள். கனவுகூட நிஜங்களின் பாதி. மார்ஜாலப்பக்தியில் கடவுள் வருகிறான், கடவுளின் கையாளாக குருவருகிறார். பக்தனுக்காக அவர்கள் வாள் ஏந்துகின்றார்கள். காயங்கள் இல்லாமல் இரத்தத்தில் குளித்து பக்தன் கடவுளை அடைகிறான். ஒரே ஒரு தடை, அந்த கணத்தின் தடை. அந்த கணத்தின் தடையை தாண்டுவதுதான் பக்தன் முன் இருக்கும் பெரும் சவால், அந்த சாவலை கண்டு கொண்ட பக்தன் வெல்கின்றான்.  எல்லாவற்றறையும் இழந்தும், அன்னை தந்தை பாசத்தில் வழக்கிவிழுந்து மீண்டும் பிறவிப்பெருங்கடலில் நீந்துபவர்கோடி. அன்னை தந்தையை விடுத்தும், கடவுளின் சார்பாக நம்மை காப்பாற்றவரும் குருவிடம் நம்பிக்கை வைக்கமுடியாமல்போகும் கணம் தடைதாண்ட முடியாத இருளில் தள்ளுகின்றது. அது மீளா இருளெனவே வாழ்நாளெல்லாம் நகர்கிறது. அந்த கணத்தின் இருளை நம்பிக்கை ஒன்றால் மட்டுமே கடக்கமுடியும். அச்சத்தைவிட்டவரே அதை  அடையமுடியும், செல்லும் பாதை குருதி நிறைந்த பெரும்காடு அல்லவா? பாசத்தை விட்டவரே கடக்கமுடியும்.

மனத்தில்பிரியா வங்கண மாக
நினைத்தபடிஎன் நெஞ்சத்திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க் (கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து        ... ... 84

நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்து ஆறு முகமும்
மாறாதிருக்கும் வடிவையும் காட்டி        ... ... 88

கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத்
தனதென வந்து தயவுடன் இரங்கிச்
சங்கொடு சக்கரம் சண்முக தரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னே வந்து-கந்தர் சஷ்டிக்கவசம்-பழநி 

எங்கு நினைத்தாலும், எங்கு இருந்தாலும், மார்ஜால பக்தியில் இறைவனே வந்து பக்தனை ஏற்றுக்கொள்கின்றான் என்றாலும், இறைவன் நாமம் அறிந்திருக்கவேண்டும், அந்த நாமத்தோடு தன்னை சிறு உயிராக்கி கனவில் விழவேண்டும், கனவு கலைந்து நிஜம்வரும் நாளில் துணிவு வரவேண்டும், துணிவு வந்தாலும் பெற்றப்பாசத்தை உதர வைராக்கியம்வேண்டும், வைராக்கியம் வந்தாலும் நம்மை இவர் கரைசேர்ப்பார் என்று குருவிடம் நம்பிக்கை வேண்டும், குருவிடம் நம்பிக்கை வந்தாலும் அந்த கணத்தை விட்டுவிடாமல் இருக்கவேண்டும், இல்லை என்றால் அந்த கணம் வர இனி எத்தனை ஜென்மம் ஆகுமோ? யார் அறிவார்?

மித்திரை அனைத்தையும் செய்துமுடித்தாள், அதன் பயன் என நீலனைக்கண்டாள். அந்த நிலையில்கூட மானிட நெஞ்சம் இந்த மண்மீது கொண்ட தொடர்ப்பாசத்தில் அதை “நஞ்சு” என்றே நினைக்கிறது. சரிதான் அந்த நீல நஞ்சு பிறவியை கொல்லும் நஞ்சுதானே. மீண்டும் பிறக்காமல் செய்யும் நஞ்சு. அதலால் நீலம்  பிறவிக்கு நஞ்சு, உயிருக்கு அமுதம். 

தெரிந்தவர்கள் பயணம் செய்ய ஆயிரம் பாதை இருக்கிறது, தெரியாதவர்கள் பயணிக்க ஒரே ஒரு பாதைதான், அது புலிக்குருளை பாதை.

நனறி ஜெ, மார்ஜார பக்தியை சுபத்திரை எனும் புலியையும், மித்திரவிந்தை என்னும் புலிக்குருளையும் கொண்டு சித்திரம் தீட்டிக் காட்டிவிட்டீர்கள். அற்புத காவியம். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல். 

அன்புள்ள ராமராஜன்

நெருக்கமாக வருகிறீர்கள் என அறிவேன். ஆனால் இன்னும் இரு அத்தியாயங்களுக்குப்பின் வருவதை முன்னரே ஊகித்துஎழுதுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. விரிவாக அதில் உள்ளது

நன்றி

ஜெ

சோனகப்புரவிகள்

சமீபத்தில் அந்தியூர் குதிரைச் சந்தைக்கு சென்றிருந்தேன் , அங்கு ஒரு வட்ட அரங்கு அமைத்து  'பென் ஹர்' பாணியில் குதிரைகளை ஓடவிட்டு பயிற்றுனர்கள் அதன் மீது சவாரி செய்து சொதனையிட்டுக்  கொண்டிருந்தார்கள். கண் முன் "வெண்  முரசு ". குதிரை சவாரியை /போட்டியை பார்ப்பது ஒரு அலாதியான காட்சி. வெண் முரசு அதை இன்னும் மெருகேற்றுகிறது. 

இன்றைய பதிவை படித்தவுடன் யவன குதிரைகளை தேடி சில படங்களை இணைத்துள்ளேன், உய்வுறுக. 

கிருஷ்ணன்          


Tuesday, August 25, 2015

கதைக்குள் நிஜம்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஒரு நாள் சொளதி பாலைவனத்தில் அரபிக்கடலோரம் பணிசெய்யும் நண்பர்களைப்பார்க்க டொயோட்டா பிக்கப்பில் சென்றேன். 25 கிமீ தொலைவுவரை பாலைவனப்பயணம். கிரைடர் வைத்து வாகனப்பயணத்திற்கு மண் வழிக்கப்பட்ட பாதை. திருப்பிவரும்போது 25 அடிதூரத்தில் மாற்றுப்பாதை ஒன்று கண்ணுக்கு தெரிய, அதில் பயணம் செய்தால் மெயின் ரோட்டிற்கு 10 கி.மீ தூரம் குறையும் என்று அப்படியே வண்டியை மண்ணில் திருப்பியபோதுதான் எவ்வளவு பெரிய தவறு செய்துவி்ட்டோம் என்பது புரிந்தது. நான்கு வீலும் பாலை மணலுக்குள் சென்றதுதான் தெரியும். எவ்வளவு வேகம் கொடுக்கின்றோமோ அவ்வளவு  வேகமாக வண்டி மண்ணுக்குள் புதைந்தது. நல்லகாலம் ட்ரைவர் வண்டியில் மண் அள்ளும் ஷவல் ஒன்று வைத்திருந்தான். 3 மணிநேரம் மாத்தி மாத்தி மண்ணை குத்தி தோண்டி வழி உண்டாக்கி பழைய வழிக்கு வண்டியை தள்ளி  வந்து கேம்பிற்கு வந்தோம்.

பாலைவனத்தில் தண்ணீர்போல ஓடும் வாகனங்கள் உள்ளன, 4WD என்னும் வாகனங்கள் உள்ளன. அவற்றின் டயர்கள் கூடுதல் அகலமானவை, மண்ணை பறித்துக்கொண்டு உள்ளே இறங்குவதில்லை, மண்ணை வெட்டி சிறு சிறு அலையாக்கிக்கொண்டு  முன்னேறுகின்றன.

சுபத்திரை கண்ணனோடு பாலைநிலத்தில் பயணம் செய்யப்பயன் படுத்தும் குதிரையின் கால்குளம்பு லாடம் இருமடங்கு பெரிதென்று இருப்பதைப்படித்ததேபாது அந்த நுட்பத்தில் அன்று நின்ற பெரும்பாலையில் நின்றேன். குளம்பின் அடிப்பகுதி நாயின் அண்ணாக்கு என அலை அலையாக இருந்தது என்றபோது பாலையில் ஓடும் வண்டியின் டயர்கள் சுழல்கின்றன.

முதலில் அவள் பார்த்தது அதன் குளம்புகளில் லாடங்கள் இருமடங்கு அகன்று விரிந்திருந்ததைத்தான். அவள் மணம் கிடைத்ததும் சற்றே பொறுமை இழந்து அது முன் கால்களைத்தூக்கியபோது குளம்பின் அடிப்பகுதி நாயின் அண்ணாக்கு என அலை அலையாக வரிகொண்டிருப்பதை கண்டாள். மணல்மேல் புதையாமல் விரைவதற்கான லாடம் அது என்றார் அவளை அனுப்ப வந்திருந்த அமைச்சர் ஸ்ரீதமர். –இந்திரநீலம்-84.


பெண்கள் அழகாக நடக்ககூடியவர்கள்தான் ஆனால் அவர்கள் எதையேனும் சுமந்து நடக்கையில் இருக்கும் நாட்டியம், நளினம், அவர்கள் நடனம் ஆடும்போதுகூட இருப்பதில்லை. இன்றைய காலத்தில் அனைவருமே ஆண்போல நடப்பதுபோல் தோன்றுகின்றது. அல்லது ஆண்போவே நடக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் உறைபோன்ற உடைகள் காரணமா? ஆண்போல நடப்பது அவர்கள் விருப்பம் ஆனால் பலம் உடையவர்களாக இருக்கிறார்களா? 

தாய் மண்ணில் மூன்று தண்ணீர் பாலையோடும், இடும்பில் தனது குழந்தையோடும் வரப்பில் நடக்கும் அன்னையர்கள் பலரைக் கண்டு உள்ளேன். உடம்பால் எந்த ஒரு வீரனுக்கும் குறைந்தவர்கள் அல்ல, அந்த வணங்கா உடலுக்குள் அவர்கள் சுமக்கும் சுமைகள் கொண்டுவரும் நடனம், நளினம் எப்படி சாத்தியம்.  சுபத்திரை இரட்டைவாள் சுழற்றுவதுபோல் அவர்கள் இரண்டு கையிலும் இரண்டு உலக்கையால் கம்பு இடிப்பார்கள். இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க என்ற அவர்கள் தண்ணீர் சுமந்துவரும் அழகு அழகு. 

பாருங்களடி, எப்படி நடக்கிறாள் என்று. நடனம்போன்றிருக்கிறது உடலசைவுகள். நல்ல இடையப்பெண் கலமேந்தி நடந்தால் அவள் உடலின் அசைவுகளில் ஒன்றுகூட வீணாகாது. ஆகவே அவளுக்கு களைப்பே இருக்காது.” சுபத்திரை சிரித்துஎன் இல்லத்தில் நெய் உருகாத நாளே இல்லை ஆய்ச்சிஎன்றாள்.

கதாயுதம் சுழற்றும் சுபத்திரை உடல்  எப்படி இருக்கும்! அதில் கணநேரத்தில் நடனம்வரும் அழகை சொல்லிப்போகும் போதுதான் “புலிக்கு புலி பிறக்கும்” என்பது தெரிகிறது. அந்த மென்நடை நடன ஆச்சிதான் சட்டென்று காவல்வீரனைக்கொன்று, அவளை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குள் ஓடுகின்றாள். உடல், நளினம், வீரம் என்று சுபத்திரை எடுக்கும் இந்த அவதாரம் பார்க்கும்போது நமது இன்றை பெண்களை எண்ணாமல் மனம் இருக்கமுடியவில்லை. 

மென்னையாக இருப்பது பெண்மைல்ல, பலத்தோடு நளினமாக இருப்பது பெண்மை என்று காட்டிப்போகும் சுபத்திரை மீண்டும் மீண்டும் நமது பெண்களை பண்டைய பாரதப் பெண்ணாக உடலாலும் உள்ளத்தாலும் இருங்கள் என்று காட்டுகிறது.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

எளிய மனிதர்களின் ஏக்கம்:


     நான் துரித உணவகத்திற்கு உணவுப்பொட்டலங்களை வாங்கச்செல்வேன். ஒவ்வொரு முறையும் பொட்டலங்களை வாங்கி பணத்தினை தந்துவிட்டு திரும்பும்போது சமைப்பவரிடம், சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு வருவேன். அவருடைய  எப்போதும் இறுகி இருக்கும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றும். அந்த புன்னகைக்காக ஒவ்வொரு முறை அங்கு செல்லும்போதும் அவரிடம்  விடை பெற தவறுவதில்லை. 

     நம்மில் பலர் மனதில் மிக எளியவர்கள்.  நாம் பெரிய நிபுணர்கள் இல்லை.   புதிய புதிய தத்துவங்களை, அறிவியல் கோட்பாடுகளை, கலைகளை, கண்டடையும் திறனில்லாதவர்கள். மக்கள் நலனுக்காக நம் வாழ்வை அர்பணித்துக்கொள்ளும் துணிவற்றவர்கள்.  அதனால்  நம் வாழ்வில் நமக்கென்று பெருமிதங்கள் இல்லை. நாம் உலகின் கவனத்தில் வராத கடை கோடி மனிதர்களாக நம்மை உண்ர்கிறோம். இதற்கான வருத்தம் நம் அக ஆழத்தில் இருந்தபடி இருக்கிறது. இந்த வருத்தம் காரணமாக நம் வாழ்வு மிகவும் சலிப்பானதாக இருக்கிறது. நம்மை புகழ்ச்து நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு சிறப்பை அங்கீகரிக்க யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம் நம்மிடம் எப்போதும்  உள்ளது.   

        யாராவது ஒருவர்  நம் மீது கவனத்தை செலுத்தி நம்மிடம் இருக்கும் எதோ ஒரு சிறப்பை அவர்  அங்கீகரிக்கும்போது, அல்லது புகழும்போது,  அது நமக்கு மிகுந்த மன நிறைவை அப்போதைக்கு அளிக்கிறது.   சலிப்பான வறண்ட வாழ்வில் ஒரு குளிர் தென்றல் வந்து சென்றதைப்போல் நாம் அகம் மகிழ்கிறோம்.  இந்த தென்றலுக்காக காத்தபடி தினமும் இருக்கிறோம். இதில் நாம் அடையும் ஏமாற்றம்  நம்மை மேலும் மேலும் இறுகவைக்கிறது, அக் கடினப்பட்ட மனம் மற்றவரை கவனிக்கவிடுவதில்லை. மற்றவர்களை நம் கடுகடுப்பினால் காயப்படுத்தவும் செய்கிறோம்.  

   நமக்கான  அங்கீகாரத்திற்கும் புகழுக்கும்  ஆசைப்படும் நாம் அதைப்போல்தான் மற்றவரும் எதிர்பார்ப்பார்கள் என்பதை மறந்துவிடுகிறோம். மற்றவர்களுக்கு அந்த அங்கீகரத்தை தருவதில்லை, புகழவேண்டிய தருணங்களில் வாளாவிருந்துவிடுகிறோம்.     உண்மையில் இதை நாம் செய்யும்போது நமக்கு எப்போதும் நன்மையே தவிர எவ்விதத்திலும் கெடுதல் இல்லை. இதற்கு நாம் ஒரு காசு செலவிட வேண்டியதில்லை. பெரிதாக உடல் உழைப்பையோ நேரச்செலவையோ கோராத இந்தச்செயலை செய்ய மிகவும் தயங்குகிறோம். இன்னொருவனை அங்கீகரிப்பதில் நம் அகங்காரம் எவ்விதத்திலோ காயப்படுகிறது. இது ஏனென்று தெரியவில்லை.

      நாம் அங்கீகரிக்கும்போதும் புகழும்போதும்  ஒருவர் தன்  இறுக்கம் தளர்கிறார், மனம்  நெகிழ்கிறார், மகிழ்கிறார்.  நம்மிடம் அவருக்கு ஒரு பிரியமும் நெருக்கமும் உருவாகிறது.  ஒருவருக்கு சாதாரணமாக பிறர் மேல் எப்போதும் இருக்கும் தயக்கமும் சந்தேகமும் நம்மேல் வெகுவாக குறைகிறது.  நாம் சொல்வதை அவர் கவனத்தில் கொள்கிறார். நம்மிடம் அவருகு ஒரு இணக்கம் வருகிறது.

     சுபத்ரை நெய் விற்கும் அந்த இடையர் குல பெண்களை  சரியான விதத்தில் புகழ்கிறாள். வயதான பெண்ணை அவள் கொணரும் நெய்யை புகழ்வதன் மூலம் அவள் கைதிறமையை பராட்டுகிறாள். மற்ற இருவரின் அழகை புகழ்கிறாள். அதன் காரணமாக   அவர்கள் மனம் தம் இயல்பான  தயக்கங்களை விடுத்து அவளை நம்புகின்றனர். அவளை அவர்களில் ஒருத்தியாக கருதி அவள் சொல்படி அவர்களை அறியாமலேயே நடக்க ஆரம்பிக்கிறார்கள். உருவில் பலராமனைக் கொண்டிருந்தாலும் அவள் குணத்தில் அந்த மாயக் கள்ளனை அல்லவா கொண்டிருக்கிறாள். எந்தக்கயிறால் கட்டி எந்த மனிதர்களை ஆட்டுவிக்கலாம் என்பதை அவளுக்கு சொல்லியா தரவேண்டும்.

 தண்டபாணி துரைவேல்

Monday, August 24, 2015

காலமெனும் கரைப்பான்:


    துவாரகை அடையப்போகும் அழிவை சுபத்திரையின் உள்ளுணர்வு அறிவது அருமையாக கூறப்பட்டுள்ளது. அதை அறிந்தவனாகவும் அதை இயல்பாக ஏற்றுக்கொள்பவனாகவும்  கிருஷ்ணன் இருப்பதாக  தெரிகிறது.
 எத்தனை பெரு நகரங்களை மனித குலம் கட்டியமைத்திருக்கிறது.  நம் பழம்பெரும் பாரதத்தின், கிரேக்க ரோம பேரரசுகளின்,  எசிப்திய சுமேரிய நாகரீகங்களின் பெரு நகரங்கள் எல்லாம் இப்போது எங்கே சென்றன.

          விண்ணை நாடி எழுப்பப்பட்ட அந்தனை  நகரங்களும் காலத்தால் அல்லவா விழுங்கப்பட்டன.   காலம்  பெரு நெருப்பென அவற்றை உருக்கியது, காலம் பெரும் வானென திரண்டு அவற்றை சிறுத்துப்போக வைத்தது. காலம் பெரு வெள்ளமென எழுந்து அவற்றை கரைத்தது, காலம் பெருங் காற்றாகி எழுந்து அவற்றை அரித்தெடுத்தது. காலம் பேரொளியாகி அந்நகரங்களை மங்கச்செய்தது.  காலம் பெரும் புவிபரப்பென  விரிந்து அவற்றை தன்னுள் புதைத்துக்கொண்டது.

   ஆனாலும் துவாரகை கிருஷ்ணன் திட்டமிட்டு தன் கூர்மதியால உருவாக்கப்பட்ட நகரமல்லவா? ஆம் துவாரகையின் ஆன்மா கிருஷ்ணன். வேறு விதத்தில் சொன்னால் துவாரகை கிருஷ்ணனின் பருவுடலின் விரிவு. ஆனால் இதுவே துவாரகை அழிவதற்கான காரணம் என நினைக்கிறேன். ஆன்மா பிரிந்த உடல் எப்படி அழிவது இயற்கையோ அப்படியே துவாரகை அழிவதும் இயற்கையானது. கிருஷ்ணனை தலைவனாக கொண்ட ஒரு நகரம் வேறொருவரை தலைவனாக எத்தனை நாட்களுக்கு சகித்துக்கொள்ளும். அந்நகரம் கிருஷ்ணனுக்கு பிறகு அழிந்துபோதல் இயல்பானதுதான் என எனக்கு தோன்றுகிறது.

தண்டபாணி துரைவேல்

கானகவேங்கையின் தின்பண்டம்.

 
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள், குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் இருப்பதற்கு காரணம் அவர்களின் குணமும், கண்களும் ஒன்றாக இருப்பதுதான். 

சுபத்திரை குழந்தைதானா? அவள் பெண்வடிவில் ஒரு பலராமன்,இருகால் கொண்ட பெண்பிடி, சகோதரன் கைபிடித்து நடக்கும் துர்க்கை. அலையாழி அரிதுயிலும் மயனது தங்கையே என்று அபிராமிப்பட்டர் சொல்லும் சொல்லுக்கு உரியவள். வசுதேவர் கனவில்கூட அவளை குழந்தை என்று நினைக்கமுடியாதபடிக்கு இருக்கின்ற அன்னை அவள். காலால் குதிரை ஓட்டுவாள், இருகையாள் வாள் சுழற்றுவாள், எதிரியின் உடல் மட்டும் இல்லை எதிரியை தாங்கும் பூமிகூட அவள் கதையின் அடியின் வலி அறியும். 

பெற்றத்தந்தைக்கு பிடியென,தாயென, சக்தியென தெரியும் சுபத்திரை கண்ணனுக்கு மட்டும் தன் மகளெனவே தெரிகின்றாள். மகளென தெரியும் ரோகிணிக்கும், தேவகிக்கும்கூட அவள் பேச்சு புரிவதில்லை. தங்கையென தெரியும் பலராமனுக்கு அவள் மனமும் கண்ணும் புரியவில்லை. கண்ணன் அவள் கண்ணில் காலத்தைப்பார்க்கிறான், காலவடிவமாகவே இருக்கும் நீலனின் வெள்ளை நிழல் என்று நினைக்கிறான். நிழல் பொருளை தொடாமல் இருக்க முடிவதில்லை என்பதுபோல் அவனை அவளும் தொடமல் இருப்பதில்லை. 

குழந்தைவடிவில் ஒரு அரியாசனி என்று வளர்ந்து வரும் சுபத்திரை, துவாரகைக்கு வரும்நாளில் தன்னை ஐம்புலன்களாலும் தின்பண்டம் திங்கும் குழந்தை என நமை கண்டு களிகொள்ள வைக்கிறாள். 

துவாரகைக்கு முதன்முதலில் வரும் சுபத்திரை அந்த நகரத்திரன் தோரணவாயிலுக்குள் உடலலோடு நுழையமுடியாது, நிழலாகத்தான் நுழையமுடியும் என்ற இடத்தில் அதை வைகுண்டம் என்று ஆக்கிச்செல்கிறாள். அது பலராமன் அறியத ஒன்று. பருப்பொருளில் இருக்கும் நுண்பொருள் காணும் கண்கொண்டு நிற்கின்றாள். இல்லாததைச்சொல்வதுபோல உள்ளதை உள்ளப்படி சொல்லும் குழந்தையின் கண்கள் அவை. 

துவாரைகை மாளிகையை அவள் முதலில் உப்பென்று எண்ணுகின்றாள். ஏன் இதனை உப்பொன்று என்னவேண்டும்? அது அழிந்துவிடும் என்பதால் மட்டும் உப்பென்றாளா? வெண்மையாக இருக்கும் ஒன்றை உப்பென்று, உப்பென்றதாலேயே காலமழையால் அது கரைந்துவிடும் என்றாளா? இல்லை, நீலன் கடலென்றாள் , உப்பு லட்சுமி. நீலன் இருக்கும்வரை துவாரகை இருக்கும், துவாரகை கரைந்து இல்லாமல் போகும், நீலனும் கரைந்துபோவான் ஆனால் கண்ணனும், துவாரகையும் நாவில் சுவையாக இருப்பார்கள். சுபத்திரை துவாரகை காணமல் போகும் என்று அஞ்சுகிறாளா? கண்ணன் காணமல் போவன் என்று அஞ்சுகிறாளா? துவாரகை வழியாக அவள் தன் அண்ணனாகிய கண்ணன் இல்லாமல் ஆகுவானே என்று அஞ்சுகிறாள். இது குழந்தையின் குணம்.  மானிட மனம் விசித்திரமானது, இறவாதவனை, இறப்பான் என்று அஞ்சுகிறது. என்றும் இல்லாமல் இல்லாதவனை இல்லாமல் ஆவான் என்று அஞ்சுகிறது. தன்னை இறவாதவன், என்றும் நிலையானவன் என்று எண்ணுகிறது. இதுதான் பேதை மனம். குழந்தையும் பேதையும் ஒன்று, இரண்டும் சொல்வது புரிவதில்லை ஆனால் உண்மையைதவிர அவைகள் வேறு ஒன்றும் சொல்வதில்லை.  

கண்ணால் பார்க்கும் ஒரு மாளிகையை வாயால் சுவைக்கும் அந்த சிறுகுழவியின் சுவை அழகை என்ன என்பது? நாம் அழகிய ஒன்றை கண்டு அதிசயத்து வாய்பிளக்கும் தருணத்தில் கண்ணால் விழுங்குகின்றோம் என்போம். கண்ணால் விழுங்கும் ஒன்றின் அழகை அறிய முடியும், சுவை அறிய முடியுமா? சுபத்திரை அதன் சுவை அறிகின்றாள். அவள் நாவில் எச்சில் ஊறவைக்கும் அந்த நகரம் உப்பென்று இனித்து, கறித்து, காலமாகிய மழையில் உப்பென கரையும் என்கிறாள். உப்பென கரையும் என்றவள் பின்பு கற்பூரம் என மணக்கும் என்கிறாள். கண்ணால் உண்ட ஒரு அழகிய நகரம் உப்பென சுவையாகி, கற்பூரம் என மணத்து இன்னும் காலத்தின் காற்றில் மிதந்துக்கொண்டுதான் இருக்கிறது. இனியும் இருக்கும். துவாரகை என்றால் நாவில் நீருறும், நாசியில் மணக்கும் ஒரு அழகிய திண்பண்டம் என உருவாகிய நகரமது. குழந்தைக்கே உரிய மனநிலையில் அவள் அதைக்காண்பதும். அழகும், சுவையும் மணமும் நிறம்பிய தின்படம்  என இருப்பதாலேயே அது அழியும் என்ற அவள் உள்ளத்தவிப்பும் எண்ணும்தோறும்  இனிக்கிறது. துவாரகையை அழகிய தெய்வீக நகரம் என்றுதான் இதுவரை சொன்னார்கள். அது அழகிய, தெய்வீக தின்பண்டம் என்று சுபத்திரைக்காட்டுவது அழகு. கண்ணன்கூட ஒரு தெய்வீக தின்பண்டம்தான் எத்தனை காலமாய்  எல்லொரும் அவனை  தின்றுக்கொண்டு இருக்கிறார்கள். சுவையாய் மணமாய் இருந்துக்கொண்டுதான் இருக்கிறான். அவன் இருக்கும் துவாரைக்கூட ஒரு தின்பண்டம்தான் என்று கடவுளுக்கு தங்கையான அந்த வெள்ளைசிறுபுள் எண்ணுவது எத்தனை அழகு.

சுபத்திரை குழந்தையாகும்தோறும் துவாரகை தின்பண்டம் என ஆகின்றது. துவாரகை தின்பண்டம் என ஆகும்தோறும் துபத்திரை குழந்தை என ஆகின்றாள். சுபத்திரை என்னும் மாபெரும் சிற்பத்தை கையின் பொம்மையென காட்டும் இந்த காட்சிகள் அற்புதம். 

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத புதுமையம்மா நீ
பார்வையிலே குமரியம்மா 
பழக்கத்திலே குழந்தையம்மா என்னும் கண்ணதாசன் வரிகள் உயிர்பெற்று வந்து கண்முன்னே சிற்கிறது சுபத்திரை என்று. 

வசுதேவர் சுபத்திரையை எண்ணி அஞ்சுவதில்லை, அவளை யானை என, துர்க்கை என எண்ணி அவளை தன்னம்தனியாக உலவ விடுகிறார்.  நிலவெழுந்த இரவில் யமுனையில் படகோட்டிவரும் போதும் அஞ்சவில்லை. அவளுக்காக தவிக்கவில்லை. ஆனால் அவள் வீராங்கணை என்பதை அறிந்து இருந்தும், ஓடும் குதிரையின் ஓட்டத்தை நிறுத்தாமல் தவி தனது ரதம் ஏறும் அணங்கென்று அறிந்தும் கண்ணன் அவள் துயில் எழுந்து விழிக்கும் முன் அவள் கண்களுக்கு தன்னை தரிசனமாக்கும் இடத்தில் அவளை சிறு குழந்தையெனவே வைக்கிறான். வசுதேவர், வாசுதேவன் இந்த இரண்டு கண்கள் வழியாக சுபத்திரையைப்பார்க்கும்போதுதான் ஜெ சொன்ன இந்த உவமை எத்தனை அழகென்று விளங்குகின்றாது.

கற்பாறையென அடிமரம் பருத்த கானகவேங்கையில் எழும் மலரின் இதழ் எத்தனை மென்மையானதுதேன் எத்துணை இனியது?-இந்திரநீலம்-82

சுபத்திரை என்னும் கானகவேங்கையின் அடிமரத்தை வசுதேவர்ப் பார்க்கிறார். வாசுதேவனாகிய கண்ணன் அதன் மலர் இதழ்களை, அதன் சுவைத்தேனைப்பார்கிறான்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.