Friday, January 2, 2015

பிரயாகை-63-மனத்துக்கண் மாசிலன் ஆதல்




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

தவழ்தல், நிமிர்தல், நடத்தல், வளர்த்ல், பறத்தல் என்று வாழ்க்கை கணங்கள் தரும் உவகையை, அதே வாழ்க்கை பூஜிய கணங்களை ஏற்படுத்தி அந்த உவகையை திருப்பி பிடுங்கிக்கொள்கின்றது.

பூஜியத்திலிருந்து முடிவிலுக்கும், முடிவிலியிலிருந்து பூஜியத்திற்கும் வாழ்க்கை போடும் வட்டங்களில் மனிதன் சிக்கித்தவிக்கின்றான். அவன் விரும்பி அந்த வட்டங்களை உருவாக்குகின்றானா? அவன் விரும்பாமலே அந்த வட்டங்கள் உருவாகின்றனவா?
அஸ்தினபுரத்தில் இளவரசனாக இருந்த பாண்டவர்கள் இடும்பவனத்தில் ஏதிலிகளாக இருக்கும் தருணம் அவர்கள் விரும்பி உருவானது இல்லை. இடும்பவனத்தில் நல்ல மனைவி, குழந்தையுடன் இருக்கும் பீமன் நாளையோ அதற்கு மறுநாளே ஏதிலியாக ஆவான் அது அவன் விரும்பி உருவாக்குவது. இந்த இரண்டு ஏதிலி பூஜிய கணம் வடிவத்தால் ஒன்று என்றாலும் உள்ளடக்கத்தால் ஒன்று அல்ல. முன்னால் ஏதிலியாக இருந்தபோது விஷம் நிரம்பிய அகம் இருந்தது. இப்போது ஏதிலியாக இருக்கும்போது அமுதம் நிரம்பிய அகம் இருக்கிறது. காலமோ, இயற்கையோ, இறைவனோ இந்த இரண்டு பூஜிய கணத்தையும் மனிதர்கள் வாழ்வில் ஏற்படுத்தி ரசிக்கிறன. மனிதனை அதன் மூலம் அனுபவங்களால் நிரப்புகின்றன. வாழ்க்கை அந்த பூஜிய கணத்திற்கான பயர்த்தொழில்தானோ?

மனித அகத்தில் வெளியிடமுடியாத விஷம் வெளிப்படுகின்றது அதை வெளித்தள்ளிவிட்டால் மனிதன் நாகமாகமல் மனிதனாக வாழமுடியும். வெளியிடமுடியாவிட்டால் அவன் நாகமாக வாழ்வதில் இருந்து தப்பிக முடியாது என்பதை காட்டும் இன்றைய பிரயாகை-63 அற்புதம்.

கௌரவர்கள் விஷம்கொடுத்து பீமனை கொல்ல நினைத்தார்கள். பீமன் வெற்றிப்பெற்ற மகனை போருக்கு அழைக்க நினைக்கிறான். இரண்டு நிகழ்வின் உள்ளீடும் தன்னைவிட பலம் என்று அறிவதை கொல்ல நினைப்பதுதான். கௌரவர்களுக்கு சகோதரன் என்ற எண்ணம் இல்லை, பீமனுக்கு மகன் என்ற எண்ணம் இல்லை. உறவுகள் என்ற நினைப்பு எல்லாம் பின்னால் வரும் அறவுணர்ச்சிதான்.

தன்னோடு போருக்கு விழையும் தந்தையின் உள்ளத்தை அறிந்த கடோத்கஜன் அதனை தந்தையிடமே சொல்லி தந்தையின் அச்சம் அகற்றும் இடத்தில் இருக்கிறது விலங்கில் இருந்து மனிதன் முன்னேறிய இடம். அரக்கனாக காட்டு மனிதனாக இருந்தாலும் கடோத்கஜன் இடம் உள்ள இந்த அறவுணர்வும், மனித தன்மையும் பீமனிடமோ, கௌரவர்கள் இடமோ இல்லை என்பதை அறிந்து உள்ளான் பீமன்.
//பீமன் முகம் மாறி “இத்தனை நேரம் தந்தையிடம் பேசுவதுபோலஅவனிடம் பேசிக்கொண்டிருந்தேன்” என்றான். “பிறவியிலேயேஅனைத்தையும் அறிந்த முதிர்வுடன் இருக்கிறான்எங்கள்குலத்திற்கே உள்ள சிறுமைகள் இல்லைஉன் மைந்தன் நீலவானம்போன்ற அகம் கொண்டவன்…” //

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற-என்கிறது திருக்குறள். 

கடோத்கஜன் மனதில் மாசு இல்லாதவனாக இருக்கிறான். பீமன் மனதில் மாசு இருக்கிறது. யார் அரக்கன் என்ற வினாவை இங்கு எழுப்புகின்றான் கடோத்கஜன். 


கல்லுக்குள் ஈரம்போல அரக்கர்கள் என்ற வடிவத்திற்குள் உள்ள கருணையை கண்டு உள்ளம் நெகிழ்கின்றது. தெளிந்த நீருக்கு அடியில் உள்ள சகதிபோல மனிதர்கள் மேலே புன்னகையும் உள்ளே காழ்பும் கொண்டு வாழ்கின்றார்கள். பீமன் ஒரு எடுத்துக்காட்டு. 

//கடோத்கஜன் “தந்தையேநீங்கள் மீண்டுவந்ததுமே அந்தஉடன்பிறந்தாரை கொன்றிருக்கவேண்டும்” என்றான். “கொன்றிருந்தால் விடுதலை அடைந்திருப்பீர்கள்அவர்கள்இருப்பதுதான் உங்களை கசப்படையச் செய்கிறது.”// என்ற வரிகளை படிக்கும்போது கடோத்கஜன் என்ற அரக்கனின் அகம் மலையின் சுனைபோல அடியில் சகதி இல்லாமல் உள்ளது.  பாறையின் கடினம்தான் அடியிலும் இருக்கிறது ஆனால் அது சகதியைவிட மேன்மையானது என்பதையே காட்டுகின்றது. ஒருபோதும் மனைச்சுனைகள் கால்களை இழுத்து புதையவிடுவதில்லை. பீமன் தனது தந்தை என்ற எண்ணத்தில் கடோத்கஜன் சொல்லவில்லை. அகத்தின் இயல்பை, இயல்பு இயற்கையாய் இருப்பதை சொல்கின்றான். மேலே புன்னகை கீழே இழுத்து புதைக்கும் அகம் அவன் அகம். மேலும் கீழும் தெளிந்த இயற்கை. பீமனோ, திருதராஷ்டிரனோ, கடோத்கஜனுக்கு ஈடாக முடியாது. எதிரியை கொல், கொன்றதை தின்றுவிடு என்பதும் அவர்கள் அறம்தான். மூதாதையர்களை பிணம் என்று நினைக்காமல் தங்களைவிட்டு நீங்காமல் இருக்க சாப்பிடும் அந்த குணம் நமக்கு கொடுமையாக இருந்தாலும். நாம் பிணம் என்று எரிப்பதும் புதைப்பதும் அவர்களுக்கு கொடுமையாக இருக்கும். இன்னும் பல பழங்குடி மக்களிடம் அந்த பழக்கம் இருப்பது முதிரா மனம் என்று நினைக்கும்போதே அந்த அறுபடாத பாசத்தை என்ன என்பது?

வாழ்க்கையில் எற்படும் ஒவ்வாரு கணமும் அபூர்வமானதுதான் என்றாலும் அந்த அபூர்வ கணம் வாழ்க்கையில் மீண்டும் தோன்றாத என்று ஏங்கும் பல கணங்கள் வாழ்வில் தோன்றாமலே சென்றுவிடும். காரணம் அந்த கணங்களில் அந்த மனிதர்கள் சேர்ந்து இருக்க முடியாமல் போய்விடும். அப்படி ஒரு கணம் தோன்றி வாழ்க்கை இன்று பீமனுடையது.  ஏன் என்று கேட்க முடியாது? எந்த பதிலும் அப்போது சொல்லவும் முடியாது. அந்த கணமே அறியும் அந்த வாழ்வின் தருணத்தை.

//பீமன் “செல்வோம்” என்றான்கடோத்கஜன் பெருமூச்சுவிட்டான்.மெல்லிய ஒலி கேட்டு திரும்பி நோக்கிய பீமன் இடும்பி அழுவதைக்கண்டான்ஏன் என்று கேட்காமல் அவள் இடையை வளைத்து தன்உடலுடன் சேர்த்துக்கொண்டான்// காதல் என்ன என்பதை காட்ட ஒரு ஜென்மம் முழுவதும் வாழ்ந்துக்காட்டத்தான் வேண்டுமா? கடோத்கஜனின் பெருமூச்சும். இடும்பியின் கண்ணீரும். பீமனின் மௌனமும் சொல்லாத ஒரு காதல்வாழ்க்கையை வேறு எது காட்டிவிடும். 

ஒவ்வொரு பிரிவும் இந்த தருணத்தின் விதைதான். சிலருக்கு செடியாக பலருக்கு காடாக.  ஒவ்வொரு விடுமுறையும் முடிந்து  மீண்டும் விமானம் ஏற குடும்பத்தை பிரியும்  நாளை அந்த கணத்தை நினைத்துக்கொள்கின்றேன். நானும் பீமன்போல பேருடல் கொண்டாலும் சுமக்க முடியாத கனம் அந்த கணம். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.