Wednesday, January 28, 2015

வெண்முரசு சொற்கள்

ஜெ,

வெண்முரசில் எனக்கு தெரியாத ஒரு சொல்லை கண்டால் விக்சனரி (http://ta.wiktionary.org), தமிழ் அகராதி (http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/), Google என்ற வரிசையில் தேடுவேன். பெரும்பாலும் பொருள் கிட்டிவிடும். பொருள் கண்டுபிடிக்க முடியாதவைகளுக்கு அவை வரும் சூழலை வைத்து யூகிக்க முயல்வேன். அவற்றை பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என்று முதற்கனலிலிருந்தே யோசனை. ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு இன்றுதான் முடிந்தது.

நேரமிருக்கும்பொழுது இச்சொற்களுக்கான பொருளை கூறமுடியுமா?

அரசுசூழ்தல் -

அறிவாணவம் - அறிவு+ஆணவம் என்று பிரிப்பது சரியா?

ஆமாடப்பெட்டி -

ஊண்கொடை - அன்னதானம்?

ஏவல்மைந்தர் - பணியாட்கள்?

கருநோக்கு மருத்துவம் - மகப்பேறியல்?

கறங்குபுள் -

குடைமறை - குடை?

கொடித்தோன்றல் -

கோட்டல் -

சரப்பொளி -

சூழ்மொழி -

சொல்மீட்சி - சாபவிமோசனம் (?)

தற்சமன் - 

நிகழ்விலி -

மதனிகை -

மதிவினை - mindgame?

மதிசூழ்கை -

மதிசூழறை -

முனம்பு -

வரிப்பாணர் -

வயற்றாட்டி -

விழிமயக்கு - தோற்றமயக்கம்? 

நன்றி

கார்த்திகேயன்



அன்புள்ள கார்த்திகேயன்,


அரசுசூழ்தல் - ராஜந்தந்திர நடவடிக்கை

அறிவாணவம் - அறிவின் ஆணவம், 

ஆமாடப்பெட்டி - ஆமையோட்டை மூடியாகக் கொண்ட சின்ன பெட்டி

ஊண்கொடை - அன்னதானம்

ஏவல்மைந்தர் - பணியாட்கள்.

கருநோக்கு மருத்துவம் - மகப்பேறியல்

கறங்குபுள் - ஒலிக்கும் சிறிய பறவை

குடைமறை -  தலையில் கூடாரம்போல போட்டுக்கொள்ளும் ஒருவகை குடை. 

கொடித்தோன்றல் - ரத்த உறவில் தோன்றியவன்

கோட்டல் - கொள்ளுதல். வளைத்த்துக்கொள்ளுதல்

சரப்பொளி - சிறிய பதக்கங்களை அடுக்கிச் செய்த மாலை. காசுமாலை மாதிரி

சூழ்மொழி - ராஜதந்திர பேச்சு

சொல்மீட்சி - சாபவிமோசனம் 

தற்சமன் -  சுய சமநிலை

நிகழ்விலி - எதுவும் நிகழாத சூனியம்


மதனிகை - கோபுரம் போன்றவற்றைத் தாங்கும் குட்டையான உடலுள்ள தேவதைகள்.

மதிவினை -  சதி,சூழ்ச்சி

மதிசூழ்கை - அரசியல் தந்திரச்செயல்பாடு

மதிசூழறை - மந்திராலோசனை அறை

முனம்பு - இயற்கையாக உருக்கொண்ட முனை, நிலம் போன்றவற்றின்

வரிப்பாணர் - வரிப்பாடல்கள் பாடும் பாணர். [கானல்வரி வேட்டுவ வரி போன்று]

வயற்றாட்டி - பிரசவத்தாதி

விழிமயக்கு - தோற்றமயக்கம்.பிரமை

ஜெ