Sunday, August 30, 2015

ஆடையை தளர்த்திக்கொள்ளுதல்:


     ஒரு விழாவுக்கு போகும்போது ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கே அதிக நேரம் செலவழிக்கிறோம். பின்னர் அதை நேர்த்தியாக அணிந்துகொள்வதில் அதிக கவனம்கொள்கிறோம். போகும்வழியிலும், அவ்விழாவில் கலந்துகொள்ளும்போதும் ஆடையின் நேர்த்தி கலையாமல் இருக்கிறதா என சரிபார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் விழா முடிந்து வீடு வந்தவுடன் முதல் காரியமாக அந்த ஆடைகளை களைந்து தளர்வான வீட்டு ஆடைகளை அணிந்துகொள்கிறோம்.  வெளியில் இருப்பவர்கள் நம் ஆடைகளின் ஊடாகத்தான் நம்மை பார்க்கிறார்கள். அந்த ஆடையின்மூலம் நம்மை உலகிற்கு வெளிக்காட்டிக்கொள்கிறோம். வெளியில் செல்லும்போது அணியும் ஆடைகள் உடலின் வடிவத்திற்கு மிகப்பொருத்தமாக தேவையான இறுக்கத்துடன் இருக்கும். கடும் வெய்யிலிலும்,  முழுதும் மூடும் காலணி அணிந்துகொள்கிறோம்.  வறண்ட காற்று வீசும்போது கழுத்துசுருக்கு துண்டை இறுக்கமாக அணிந்துகொள்கிறோம்.  அந்த ஆடைகள் மற்றவர்களுக்காக அணிவது. ஆனால் நமக்கே நமக்காக நாம் வீட்டில் அணியும் ஆடைகள் இறுக்கமின்றி தளர்வானது.

   வெளிமனிதர்களிடம் பழகும்போது, நம்மை அவர்கள் மதிக்கும் வண்ணம்,    நம் பேச்சு செயல் போன்ற நடவடிக்கைகள்    பொருத்தமானதாக சரியானதாக இருப்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கிறோம். நாம் பேசும் வார்த்தைகளில்,  நாம் நடப்பது, அமர்வது, பேசுவது, சிரிப்பது, போன்ற தோரணைகளில்,  உண்பது குடிப்பது போன்ற செயல்களில்  மிக நேர்த்தியாக இருக்கும்படி நடந்துகொள்கிறோம். இவ்வாறு நடப்பது என்னதான் நல்ல விளைவுகளை கொடுத்தாலும்  நமக்கு மன இறுக்கத்தை கூடவே தரச் செய்கின்றன. வீட்டிற்கு வந்ததும் ஆடைகளை தளர்த்திக்கொள்வதைப்போல நம் மனதை அவ்வளவு எளிதாக தளர்த்திக்கொள்ள பலரால் முடிவதில்லை.  பெரும்பாலும் கலைகளை அனுபவிப்பதன்மூலம் நாம் நம் மனதை தளர்வாக்கிக்கொள்ளலாம். அது ஓரளவிற்கு பலனளிக்கும்.

  மது அருந்துவதில் பல தீமைகள் இருக்கின்றன.  இருந்தாலும் ஒருவன் மது அருந்துவது அவன் மன இறுக்கத்தை வெகுவாக தளர்த்துகிறது. அப்போது மனம் தன் இறுக்கமெல்லாம் அவிழ்ந்து  இதமாகிறது. மது அருந்தியிருப்பவனை கவனித்தோமானால் அவன் தன் பேச்சு தோரணைகளில் இருந்த நேர்த்தி மறைந்துவிடுவதை பார்க்கலாம். அவன் மனம் கட்டுகளில் இருந்து விடுபட்டு பறக்க ஆரம்பிக்கிறது. அவன் ஒரு விடுதலையுணர்வை அனுபவிக்கிறான். அவன் அகத்தை  மூடியிருந்த ஆடைகள் தளர்ந்து நெகிழ்ந்து அவன் அகத்தின் மறைக்கப்பட்டிருந்த பகுதிகள் வெளியில் தென்பட ஆரம்பிக்கின்றன. தோற்றத்தில் சிறிதாக தெரிந்த, ஒருவன் மேல் வைத்திருந்த நட்பு அல்லது விரோதம், ஒரு பெண்ணின் மேல் கொண்டிருந்த காதல் அல்லது காமம், ஒரு நபரின் மேல் கொண்டிருந்த கோபம் அல்லது  இரக்கம், போன்றவை  அந்த நேரத்தில் வெளிப்பட்டு பெரிதாக தெரிகின்றன.   தன் குடிபோதை தெளிய தெளிய அவன் மீண்டும் தன் அக அடைகளை எடுத்து அணிந்து கொள்கிறான்.


  கிருஷ்ணனிடம் சாத்யகி  என்னதான்  அருகாமையில் இருந்தாலும் அவன் மன்னனாக  இருப்பதால் இவன் சேவகன் என இருக்கவேண்டியுள்ளது. அதற்கான தோரணைகளான மரியாதை பயம் பணிவு போன்றவை வெளிப்படும்வண்ணம் அவன் நடவடிக்கைகள் அமைவேண்டியுள்ளது. கிருஷ்ணனுக்கு இது தேவையில்லயென்றாலும்  மற்றவர்களுக்காக இது சாத்யகி அன்றாடம் அணியவேண்டிய ஆடை. ஆனால் அவன் கிருஷ்ணனை தூரத்தில் வைத்து வணங்கும் பக்தன் அல்ல. அவனுடன் கலந்து ஒன்றாகிவிடத் துடிக்கும் ஆன்மாவை கொண்டிருப்பவன். அவனை கிருஷ்ணனிடமிருந்து முதலில் அவனுடைய உடல் தள்ளி வைக்கிறது. (ஒரு வேளை சாத்யகி பெண்ணாக இருந்திருந்தால் அந்தக் காமுகனிடம் இன்னும் சற்று நெருக்கத்தில்  இருக்கலாம்.)  கிருஷ்ணன் மன்னன் என இருப்பது அவனை இன்னும் தூரத்தில் தள்ளி வைக்கிறது. கிருஷ்ண்னைபோன்ற ஒருவனிடமிருந்து தள்ளி நிற்பது சாத்யகிக்கு துன்பத்தை தருகிறது. அவன் மது அருந்திய நிலையில் அவன் அணிந்திருந்த சேவகன் என்ற ஆடை அவிழ்ந்து விழ கண்ணனுக்கு மிகவும்  நெருங்கிய தோழனாக இருக்க வேண்டும் என்ற அவன் வேட்கை வெளிப்படுகிறது. 

தன் பெற்றோரின் கவனத்தை கவர ஒரு குழந்தை சேட்டைகள் செய்வதைப்போலதான் சாத்யகி சியமந்தகமணியை கவர்ந்து சென்றிருப்பான் என நினைக்கிறேன்.      தொலைந்து போன ஆட்டுக்குட்டியை அல்லவா மேய்ப்பன் தேடிப் பிடித்து தோளில் சுமக்கிறான். ஒருவேளை அந்த ஆடு அதற்காகக்கூட  தொலைந்து போயிருக்கலாம்.

தண்டபாணி துரைவேல்