Saturday, August 8, 2015

உறவுகளுக்கிடையிலான அரசியல்

 உறவினர்களைவிட  நண்பர்கள்தான் சிறந்தவர்கள் என்பது மக்களின் வாய் மொழியாக இருகிறது. ஆனால் உறவினருக்கிடையில் இருக்கும் உரிமையும் எதிர்பார்ப்பும் நண்பர்களுக்கிடையில் கிடையாது. நண்பன் தானாக வந்து உதவலாம். ஆனால் அவன் வந்து உதவ வேண்டும் என்ற பொறுப்பு அவனுக்கில்லை. நீ உதவ வேண்டும் எனக் கோரும் உரிமை நண்பர்களுக்கிடையில் கிடையாது. இந்த பொறுப்பும் உரிமையும் இல்லாமலேயே நண்பர்களுக்கிடையில் உதவி பரிமாறல்கள் நடைபெறுகின்றன என்பது உண்மை. அது  அந்த தனிப்பட்ட நட்பின் சிறப்பை காண்பிக்கிறது. ஆனால் உறவினர்களை உதவுமாறு கோரும் உரிமை, உறவினர்களுக்கு உதவ வேண்டிய கடமை எப்போதும் இருக்கிறது. உதவிதேவைப்படும் ஒரு உறவினருக்கு உதவாமல் இருக்கையில் நமக்கு குற்ற உணர்வு  எழுகிறது. நாம் கேட்ட உதவியை கொடுக்காத உறவினர் மேல் நமக்கு கோபம் ஏற்படுகிறது. ஆக உறவு என்பது நட்பைவிட ஒருவனுக்கு மிக நெருக்கமானது, இறுக்கமானது, தவிர்க்க முடியாதது. ஆகவே தான் காதல் நட்பாக தொடராமல் திருமண உறவாக மலர்கிறது. உறவின் இடத்தை ஒருபோதும் நட்பு  பிடிக்க முடியாது. சில விதி விலக்குகள் இருக்கலாம்
 
.
     உரிமைகள், பொறுப்புகள்,  கடமைகள் உறவுகளுக்குள் இருப்பதால் எதிர்பார்ப்புகளும் அது நிறைவேறாதபோது ஏமாற்றங்களும் அதிகம் ஏற்படுகின்றன. உறவுகளுக்குள் சிக்கல்கள் கோபங்கள் வருத்தங்கள் அதிகம் ஏற்படுகிறன. இவை எதுவும் நண்பர்களுக்கிடையில் ஏற்படுவதில்லை. ஏனென்றால், ஏற்படுவதற்கான காரணங்கள் நட்பில் இல்லை.  நாம் மேலோட்டமாக, இதையெல்லாம்  யோசிக்காமல் 'நண்பரெல்லாம் அருகில் இருங்கள் உறவினர்களெல்லாம் விலகிச் செல்லுங்கள்'  என வசனம் பேசி கைதட்டல் வாங்கிக்கொள்கிறோம்.  

     அதே நேரத்தில், யாரோ ஒருவனின் உயர்வு நம்மை பாதிக்கும் தூரத்தை தாண்டி அப்பாலுள்ளது. ஆனால் உறவினன் நம் அருகில் நெருக்கத்தில் உள்ளான். தூரத்தில் இருக்கும் பெரிய மலை நமக்கு எதையும் மறைப்பதில்லை, நம்மை பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால் நம் அருகே இருக்கும் ஒரு சிறிய கட்டிடம் உலகத்தின் பாதியை நம் கண்ணில இருந்து மறைத்துவிடுகிறது.   உறவினன் தன்னைத் தாண்டி  வளர்வது ஒருவனுக்கு அவன் மனதில் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவன் தன் திறமையில் மேல் சந்தேகம் கொள்ள வைக்கிறது அவன் அகங்காரத்தை காயப்படுத்துகிறது.  அதனால் உறவினர்களுக்குள் கோபம், பகை, பொறாமை, வெறுப்பு வெகு எளிதாக பற்றிக்கொள்கிறது. ஒருவருக்கொருவர் புரிதலின்மை வெகு எளிதாக ஏற்பட்டுவிடுகிறது.  தன் உறவினனின் முன்னேற்றம் தன் முன்னேற்றத்தைவிட அதிகரித்தால் உள்ளம் வஞ்சம் கொள்கிறது. உறவினன் அடைந்திருக்கும் கல்வி, திறமை,  பதவிக்கு,  கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை நாம் கொடுப்பதில்லை.   எவரோ ஒருவரின் பிள்ளை உயர் நிலையடைந்தால் நாம் இயல்பாக இருக்கிறோம். ஆனால் நம் உறவினனின் பிள்ளை தன் பிள்ளையை விட உயரும்போது மனதின் இருட்டான மூலையில் ஒரு எரிச்சல் தோன்றுகிறது. 

     சல்யன் பிருஹத்சேனர் இருவரும் இணக்கமாக இருக்கிறார்கள். பின்னர் அவர்களுக்கிடையில் பிணக்கு. சல்யன் த்யுதிமானர் இடையில் பிணக்கு. பிருஹத்சேனர் த்யுதிமானர் இடையே இணக்கம். அடுத்து சல்யன் துய்திமானர் இடையே இணக்கம்.  பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து பிருஹத்சேனர் மேல் பிணக்கு கொள்கின்றனர். இறுதியில் சல்யன் பிருஹத்சேனரை மன்னித்து ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறார். இப்படி இணக்கமும் பிணக்கும் அவரகள் உறவினர்கள் என்பதாலேயே அவர்களுக்குள்  மாறி மாறி ஏற்படுகிறது.ஒருவர்மேல்  ஒருவர் ஒரு அற்ப பிழைக்காக தீரா பகைகொள்வதும், ஒரு சாதாரண நிகழ்வில் ஒருவரை ஒருவர் மன்னித்து அணைத்துக்கொள்வதும் உறவினர்களுக்கிடையே தான் சாத்தியம். 

    துரியோதனன் பீமன் மேல் பகைகொள்ளும் ஆதி காரணத்தில் என்ன அர்த்தம் உள்ளது. அது வளர்ந்து வாரணாவதத்தில் பற்றி எரிகிறது. அதற்கு பிறகு பாண்டவர் அஸ்தினாபுரம் திரும்பும்போது  அதே பாண்டவரும் கௌரவரும் மனம் நெகிழ்ந்து கட்டியணைத்து கண்ணீர் பெருக்குகின்றனர். இது தான் உறவின் பலவீனமும் பலமும். இரு நண்பர்களுக்கிடையே இத்தகைய நிகழ்வுகள் நடக்க முடியுமா? 

   ஆகவே  உறவுகளுக்கிடையேயான அரசியலில் நாம் சமாதனத்திற்கு மட்டுமே முயலவேண்டும். நாம் யாராவது ஒருவரின் பொருட்டு மற்றொருவரிடம் பூசலிட்டுக்கொண்டால்( அது நியாயமான காரணாமாக இருந்தால்கூட) நாம் பின்னர் ஏதாவது ஒரு நேரத்தில் இணைந்திருக்கும் அவ்விருவர்  முன் முட்டாளாக முகம் கவிழ்ந்து நிற்க வேண்டியிருக்கும்.

தண்டபாணி துரைவேல்