Saturday, April 22, 2017

துயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70, 71)


   

    ஊழினால்  விரட்டப்பட்டு ஓடி பெருந்துயரக் கிணற்றில் விழுந்துவிடுபவர்களைக் கண்டிருக்கிறோம்.  அங்கிருந்து அவரால்   தப்பிக்கவே முடியாது என்று தோன்றும். அதிலிருந்து வெளிவந்து தப்பமுடியாமல் அங்கேயே இருந்து சித்தம் கலங்கி அழிந்து  போய்விடுவார் எனறுதான் நினைப்போம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் சென்று பார்த்தால்  அவர் அதிலிருந்து வெளிவந்துவிட்டதை கண்டு அதிசயித்துப்போவோம்.  அக்கிணறோர வேர்களை அல்லது விழுதுகளைப் பற்றி முயன்று வெளிவந்து விட்டிருப்பார்கள். காயங்கள் வடுக்கள் ஏன் ஊனங்கள் கூட ஏற்பட்டிருக்கலாம. ஆனாலும் அவர் அந்தக் கிணற்றிலிருந்து வெளிவந்துவிட்டார் என்பதுதான் உண்மை. அரிதிலும் அரிதாக வெகு சிலரே அதிலிருந்து வெளிவரமுடியாமல் அங்கேயே இருந்து இறந்து மக்கி மண்ணாகிவிடுவதைப் பார்த்திருக்கிறோம். மற்ற அனைவரும் அந்த பெருந்துயரக் கிணற்றிலிருந்து தப்பி வெளிவரவே செய்கிறார்கள்.
   
இதை ஒப்பிடுகையில் தேவயானிவிழும் மலர்க்கிணறு மிகச் சாதாரமானது. ஆனால் தன்னைக் காக்காமல் போன சர்மிஷ்டையை தேவயானி தள்ளிவிடும் கிணறோ மிக ஆழமான துயரக்கிணறு.  அப்போது சர்மிஷ்டைமட்டுமலாமல் அவள் தந்தை தாய்மார்கள், உற்றார் உறவினர்கள், அந்நாட்டு குடி மக்கள் என அனைவரும் அந்தத் துயரக் கிணற்றில் விழுந்துவிடுகிறார்கள்.  சர்மிஷ்டை விருஷபர்வனின் ஒரே மகள். அவன்  மூன்று மனைவியருக்கும் அவளே மகள் என இருப்பவள். அவள் குருதி வழிபிறப்பவன் அடுத்து அசுர குலத்தை ஆண்டு வழிநடத்துவான் என அந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.  ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கள் எல்லாம சிதறிப்போய்விடுகிறது.   அவர்கள்  அனைவரும் இந்நிகழ்வில் பேரிழப்பையும் அதன் காரணமாக பெருந்துயரையும் அடைகிறார்கள்.
   
 சர்மிஷ்டையின் தந்தை விருஷப்ர்வன் அடையும் துயரத்திற்கு  வெறும் தந்தைப்பாசம் மட்டும் காரணமல்ல. அவன் குடியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியதாக ஆகிவிடுகிறது.  இதுவரை சுக்ரரின் துணையினால்  தோல்வியின்றி இருந்தவன் இப்போது பெருந்தோல்வியடைந்தவனாகிவிடுகி
றான்.  அவன் வருங்காலத்திற்கென்று போட்டிருந்த திட்டமெல்லாம் பாழாகிப்போகின்றன. தன் மகள் அறியாச்சிறுமியென செய்த ஒரு தவறுக்கு அவன் அடைவது எவ்வகையிலும் நியாயமற்ற ஒரு பெருந் தண்டனை.   அவனால் தனக்கிழைக்கப்பட்டுள்ள இந்த அதீதமான தண்டனையை   எதிர்த்து வாதிடவோ அல்லது குறைக்கும்படி முறையிடவோகூட முடியாது போகிறது. தான் அடைந்த பெரு வலிக்கு வருந்தி அழக்கூட உரிமையற்றவனாக அவன் நிற்கிறான்.  ஆனாலும் அவன் இந்தப் பேரிழப்பை  தான் குருவுக்கு அளிக்கும்  காணிக்கையென   கொள்கிறான். 
 
நான் ஒப்புகிறேன், ஆசிரியரின் ஆணையை நிறைவேற்றுகிறேன்” என்றான் விருஷபர்வன். கிருதர் அவனை வெறுமனே நோக்கினார். அவன் விழிகளில் தெரிந்த துயருக்கு நிகரான ஒன்றை அதற்குமுன் கண்டதே இல்லை என்று சாயை எண்ணிக்கொண்டாள். “இப்படி ஏதேனும் நிகழுமென்றே எதிர்பார்த்திருந்தேன். பெற்றுக்கொண்டே இருந்திருக்கிறேன், திரும்ப அளிக்கவேண்டியிருக்கும். திரும்ப அளிக்கவேண்டாத எதையும் நாம் பெறுவதில்லை.”
   
 
இந்தக் கருத்தை ஒரு நூலேணியாகப் பிடித்துக்கொண்டு அவன் அந்த துயர்க்கிணறிலிருந்து அவனால்  வெளிவர முடிகிறது.  
  
  
    அவளின் அன்னையர் அடையும் துயரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.     பேரரசியென ஆக இருந்த தன் மகளை ஒரு அடிமையென ஆகி நிற்பதை  எந்த அன்னையால்  பொறுத்துக்கொள்ளமுடியும். 
 
 அன்னை விம்மி அழுதபடி மஞ்சத்தில் மெல்ல சாய்ந்து “நான் என்ன செய்வேன்…? நான் எப்படி இங்கு வாழ்வேன்…? எங்கோ அறியா நாட்டில் இவள் சேடியாக இருக்கையில் இவ்வரண்மனையின் அரச இன்பங்களும் மணிமுடியும் எனக்கென்ன பொருளளிக்கும்…?” என்றாள்.  “அனைத்தும் சில நாட்களுக்கே, அன்னையே” என்றாள் சர்மிஷ்டை. “நான் அங்கு பழகுவதும் நீங்கள் இங்கு பழகுவதும்.” அன்னை சினத்துடன் தலைதூக்கி “என்னடி சொல்கிறாய்?” என்றாள். “நாம் எளியவர்கள். நம்மைச் சூழ்ந்திருப்பவற்றுடன் பின்னி கரந்து அவற்றில் ஒன்றாகவே நம்மால் வாழமுடியும். மிகச் சிறந்த சேடியாக நான் விரைவிலேயே மாறிவிடுவேன்” என்றாள் சர்மிஷ்டை.
 
அவர்களுக்கும் அவரடைந்த துயரம், சீற்றம், அனைத்தும் இறுதியில் தணியவே செய்கின்றன. சர்மிஷ்டை இந்நிலைக்கு திறந்த மனநிலையுடன் துயரின்றி தன்னை ஒப்படைத்தல் அவர்களின் மனத்துயரத்திலிருந்து மேலேறி இயல்பு நிலைக்கு வர மிகவும்  உதவுகிறது. 
        
நாட்டு மக்கள் அடையும்துயரெல்லாம் ஒரு கணம்தான்.  பலபேர் ஒன்று சேர்ந்து அனுபவிக்கும் துயரம் சில நிமிடங்களில் கொண்டாட்டமாக ஆகிவிடுகிறது. மக்கள் பரபரப்புடன் பேசிக்கொள்கிறார்கள். தன்னை தனிப்பட்டவகையில் பாதிக்காத பொதுத்துயரத்தை உள்ளூற விரும்பச் செய்கிறார்களோ என்றுகூட தோன்றும். 100 பேர் இறந்த ரயில் விபத்தைவிட 1000 பேர் இறந்த ரயில் விபத்தில்  அதிக பரபரப்பாகின்றனர். ஒரு தலைவர் இறந்துவிட்டால் மக்கள் பேசிப் பேசி அதை பெரிதாக்கிக்கொள்கிறார்கள். ஆக இந்த விஷயத்தில் மக்கள் துயரென்பது பனிநீர் காயும் நேரம் கூட நீடித்திருக்காது என்பது தான் உண்மை. உண்மையில் அவர்கள் துயரக்கிணற்றில் விழுந்தவர்கள் அல்ல. அங்கு விழுந்திருப்பவர்களை வேடிக்கைப்பார்க்க ஆவலுடன் கூடியிருக்கும் வெறும் கூட்டம் மட்டுமே என்றூ தோன்றுகிறது.
 
“நகரத்தின் ஓசை முழுக்கவே மாறிவிட்டிருக்கிறதல்லவா?” என்றாள். அணுக்கச்சேடி தலையசைத்தாள். சர்மிஷ்டை புன்னகைத்து  “இன்று நகருக்குள் சென்று முகங்களைப் பார்த்தால் முற்றிலும் வேறு முகங்களையும் நோக்குகளையும் சந்திப்போம். அவர்கள் துயர்கொண்டிருப்பார்கள் என்று தந்தை சொன்னார். அது துயரல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. எளிய மக்கள் துயர்கொள்வது எதுவும் நிகழாத சலிப்பு நிலையில்தான். இத்தகைய பேரிழப்புகளும் அவர்களுக்கு மறைமுகமான கொண்டாட்டமே.
        
 ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவள் சர்மிஷ்டை அவள் அடைந்த  இத் துயரத்திற்குக் அவள் மட்டுமே காரணம் என ஆகி நிற்கிறாள்.  தன் எதிர்கால வாழ்வு முழுதையும் தான் இழைத்த ஒரே குற்றத்திற்காக தொலைத்து நிற்கிறாள்.  அவள் சிறு சிறு துன்பங்களுக்கு ஓடோடி வந்து உதவியர்கள், இப்போது அடைந்திருக்கும் பெருந் துன்பத்தில் எவ்வுதவியும் செய்ய முடியாமல் எட்டி நிற்கிறார்கள்.  ஆனாலும் அவள் இத்துயரக் கிணற்றிலிருந்து வெளிவர முடிகிறது.  தான செய்த தவறை ஒத்துக்கொண்டு அதன் பலனாக தான் அடைந்த பாதிப்புக்களை அதற்கான பிழையீடு என எடுத்துக்கொள்கிறாள். 
    
இன்று நான் இழைத்துவிட்டு வந்த பிழைக்கு என்ன மாறு செய்வதென்றறியாமல் உள்ளூர எரிந்துகொண்டிருந்தேன். எட்டாவது உப்பரிகைக்குச் சென்று கீழே குதித்துவிட்டால் என்ன என்று கூட எண்ணினேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும். ஏழு நிலை வரை ஏறிச்செல்லவும் செய்தேன். என்னால் இயலவில்லை. இப்போது உளம் நிறைவடைகிறேன். என் பிழைக்கு ஈடுசெய்யப்பட்டுவிட்டது. இக்குலத்திற்குப் பழி கொணர்ந்த பெண்ணாக என்னை இனி எவரும் சொல்ல மாட்டார்கள். இக்குலம் வாழ தன்னை இழந்தவளாகவே சொல்வார்கள்.” 
    
அவள் ஆழ்ந்திருந்த துயரக்கேணியிலிருந்து எளிதில் வெளிவர அவளின் இந்த இயல்பு வெகுவாக உதவுகிறது.  அவள் நிலையை உள்ளவாறு எவ்வித கேள்வியும் இல்லாமல் அவள் ஏற்றுக்கொள்ளும் உளப்பக்குவம் அதை வெளியில் தெரியப்படுத்தும்படியான அவள் நடத்தையும்  உண்மையில் அனைவர் உள்ளத்திலும் கொண்டிருந்த துயரத்தை மட்டுமல்லாது  குற்ற உணர்வை நீக்குகிறது. வெகு சீக்கிரத்தில் அத்துயரக்கேணியிலிருந்து அனைவரும் மேலேறிவந்துவிடுகின்றனர்.
  
   அனைத்தும் எத்தனை விரைவில் திரும்பி மறுதிசைச்சுழற்சி கொள்ளத்தொடங்கின என்பதை சர்மிஷ்டை பெருவியப்புடன் எண்ணிக்கொண்டாள். ஒருநாள் இரவு இருண்டு மறுநாள் புலர்ந்ததும் சூழ்ந்திருந்த அனைத்துமே பிறிதொன்றென்றாயின. அத்தனை மானுடருமே பிறிதொரு முகம் கொண்டனர். சுவர்களும் தூண்களும்கூட உருமாறியிருப்பதாகத் தோன்றியது. எத்தனையோமுறை நூல்களில் ஒவ்வொரு காலையும் புவியில் புதிதாகத்தான் பிறந்தெழுகிறது என்பதை அவள் படித்திருந்தால்கூட அன்றுதான் அதை கண்முன் உண்மையென அறிந்தாள்.

வெண்முரசின் மற்றொரு ஆத்ம வாக்கியமாக திகழும் பின்வரும் வரியை நினைவில் கொள்ள்ளும் எவர் ஒருவரும் எத்தகைய துயர நிலையிலிருந்தும் வெளிவந்துவிடலாம்  என்பது உறுதி.

அனைவருக்கும் உரியதே நமக்கும். நமக்கென்று தெய்வங்கள் பெரிய துயரையோ ஆற்றாச்சிறுமையையோ சமைப்பதில்லை” என்றாள் சர்மிஷ்டை
 
தண்டபாணிதுரைவேல்