Sunday, July 9, 2017

அந்த அழுகை

:

அன்புடன் ஆசிரியருக்கு

விடியலின் வெளிச்சத்துக்கு கண்கள் பழகிய பின்னர் தான் அலைபேசியை எடுக்க வேண்டும் என எனக்கு நானே ஒரு அன்புக் கட்டளை இட்டுக் கொண்டிருக்கிறேன். அதனால் அலுவலகம் கிளம்பும் முன் jeyamohan.in வாசிக்க மட்டுமே அவகாசம் இருக்கும். வெண்முரசு அத்தியாயம் வாசிப்பதற்கு சரியான கால அளவு இருந்தால் மட்டுமே தொடங்குவேன். பெரும்பாலும் இருக்காது.  பேருந்தில்  தான் வாசிக்கும்படி ஆகும். ஆனால் இன்று நேரம் இருந்தது. நேற்றிரவு நல்ல மழை. அதனால்  சீக்கிரமாக தூங்கிப் போயிருந்தேன். காலையிலும்   சீக்கிரம் எழுந்து விட்டேன். ஸ்டாலின் ராஜாங்கத்தின் எழுதாக்கிளவி குறித்து வாசித்து முடித்த பின் நீர்க்கோலம் வாசித்தேன். தொடக்கம் முதல் அவ்வத்தியாயம் எனக்கென்று எழுதப்பட்டது போன்ற ஒரு உணர்வைத் தந்தபடி இருந்தது. சைரந்திரி உடனான அத்தியாயத்துக்குப் பிறகு சம்பவனையும் சிம்ஹியையும் இவ்வளவு  விரிவாக வலவனிடம் அறிமுகம்  செய்திருக்க  வேண்டியதில்லை என்ற எண்ணம்  இப்போது  எழுகிறது.  சைரந்திரி  அங்கு நிகழ இருப்பவற்றை அவர்களிடம் சொல்லி  விடுகிறாள். ஒரு  சில வார்த்தைகளில் வலவனின்  விரிவை  அவர்கள் அறியும்படி செய்து கடந்து  சென்றிருக்கலாம்.  ஆனால்  இந்த  அத்தியாயம்  மிக  விரிவாக  அதைச்  செய்கிறது.  அதிலும் அவன்  சிம்ஹிக்கு முதலில்  கசப்பைத்தான்  அளிக்கிறான். அதன்  வழியாக சுவையை நோக்கி அவளைச்  செலுத்துகிறான். மற்றொரு முனையில்  சம்பவன்.  அழுகையை  கட்டுப்படுத்த  முடியவில்லை. அழுதபடியே தான் குளிக்க முடிந்தது.

நிறைய எழுதத்  தோன்றியது. ஆனால் அந்த அழுகையை எப்படி  சொல்வதென்று  தெரியவில்லை. 

அன்புடன்

சுரேஷ்  பிரதீப்