Saturday, July 8, 2017

சதகர்ணிகள் விவாதம்



அன்புள்ள ஜெ,

என்னுடைய கடிதத்தில் சீண்டல் தொனி இல்லையென்றே நம்புகிறேன். எவ்விதத்திலும் உங்களது உழைப்பைச் சீண்டவோ, குறைப்பதோ என் நோக்கம் அல்ல என்பதை அறிவீர்கள் என்றே எண்ணுகிறேன். 

என்னுடைய ஐயத்திற்கான நீண்ட விளக்கத்திற்கு நன்றி.இங்கே நண்பர்களிடம் விவாதித்த வரையில் ஒரு தெளிவு கிடைக்கவில்லை. சிலருக்கு அப்பெயர்கள் பெயர்களாவே இருந்தன. சிலருக்கு ஒரு தகவலாக மட்டும். நீங்கள் ஒரு ராஜாங்கத்தின், இனக்குழுவின் பெயரை தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க மாட்டீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு. எனவே தான் கடிதத்திலேயே இந்த ஊகத்திற்கான அனைத்து மூகாந்திரங்களையும் கொடுத்திருந்தேன். என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இப்படி ஊகித்திருக்கக் கூடுமோ என்பதே. அதைத் தாங்கள் உறுதிப் படுத்திவிட்டீர்கள்.

மேலதிகமாக அந்த ஊகத்திற்கான பின்புலத்தையும் தந்திருக்கிறீர்கள். நீங்கள் கூறுவது போல ஸ்ரீமுகா அறிமுகமாகையிலேயே பேரரசர் தான். ஒரு நிலத்தில் அரசு உருவாகி, அது பேரரசாக ஆவதன் விரிவான சித்திரங்கள் வெண்முரசு முழுக்க வந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு ஆகும் கால அவகாசங்களை வைத்துப் பார்க்கையில் திடீரென்று ஒரு குலத்தொகை பேரரசாக மாறியிருக்க வாய்ப்பில்லை என்ற பார்வை உண்மையே. இதைத் தான் தவற விட்டிருந்தேன். (எனவே தான் அக்கடிதமும்)

மேலும் இந்திய வரலாற்றின் 'அகழிகள்' நமது தமிழ் நாட்டுக்கும் பொருந்துவது தானே. இன்றளவும் சங்க காலத்திற்கு என்று உறுதியான தொல்லியல் சான்றுகள் இல்லையே!! கற்பனையால் நிரப்ப வேண்டிய, நிரப்பக் கூடிய கடனும், உரிமையும் ஒரு புனைவெழுத்தாளருக்கு நிரம்பவே உண்டு. மீண்டும் நன்றி.
 
 அருணாச்சலம்


அன்புள்ள அருணாச்சலம்

நீங்கள் சீண்டுவதுபோல ஏதும் கேட்கவில்லை. சரியான வினாக்கள்தான். நான் எழுதுவதற்குத் தயங்கியது நாவலுக்கு வெளியே இந்த விஷயங்கள் விவாதிக்கப்படுவது நல்லதா என்றுதான். ஏனென்றால் நாளை நாவல்தான் நிற்கப்போகிறது. விவாதங்களையும் அதனுடன் சேர்க்கக்கூடாதல்லவா? ஆனால் உங்கள் வினாக்கள் மிக முக்கியமனாவை பொதுவாகவே ஓரு புரிதலை உருவாக்குபவை என்பதனால்தான் விரிவாக எழுதினேன்

ஜெ