ஜெ
மாமலரில்
வரும் இந்த வரிகளை வெட்டி ஒட்டியிருந்தேன். அதை இன்றைக்கு வாசித்தேன். புரூரவஸின்
நாடுகடத்தலில் ஊர்மக்கள் பேசுவது. பெரும்பாலும் முதியவர்கள்
“எண்ணுகையில் எளியோனாக வாழ்ந்து எளியோனாக இறப்பதே உகந்ததென்று தோன்றுகிறது”
“யானைக்கு புண் வந்து சீழ் கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? படிகக் கோடரியால் வெட்டி முழங்கைவரை உள்ளேவிட்டு மருந்திடுவார்கள். பெருவலி கொண்டு அக்கரிய உடல் துடிப்பதை நெடுந்தொலைவிலேயே நின்று பார்க்கமுடியும்.”
“எறும்புக்கும் யானைக்கும் இறப்பு ஒன்றேதான் போலும்”
”ஆற்றல்மிக்க விலங்குகள் நொந்து நாட்பட்டு சாகின்றன. எறும்புகள் நொடியில் பல்லாயிரமென மறைகின்றன. ஊழுக்கும் கருணையுண்டு”
“எவர் துயரும் அதற்கு ஒரு பொருட்டல்ல. எல்லாமே குமிழிகள்தான் நதிக்கு. அதில் பெரிதென்ன சிறிதென்ன?”
இந்த
வரிகள் வழியாக அவர்கள் புரூரவஸின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.
எவருக்கும் கொஞ்சம்கூட கருணையோ அனுதாபமோ இல்லை. மிகப்பெரிய மனிதர்களின் வாழ்க்கையை
மக்கள் ஒருமாதிரியான கசப்புடன் பார்க்கிறார்கள். அவர்கள் வீழ்ச்சி அடையும்போது
நிறைவடைகிறார்கள். நாமெல்லாம் சாமானியர்களாக இருப்பதே மிகப்பெரிய விஷயம் என
நினைக்கிறார்கள். அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள். அதைக்கொண்டு மனதை
ஆறுதலடையச்செய்கிறார்கள். அந்த பரிதாபத்தையே இவ்வாறு தத்துவமாக
ஆக்கிக்கொள்கிறார்கள்
ஆனால்
அதில் கடைசியாகப்பேசுபவர் பெரிதுக்கும் அப்பாலுள்ள பெரிய ஒன்றை உணர்ந்தவர் என
நினைத்தேன்
சங்கரநாராயணன்