Saturday, June 2, 2018

மகாபாரத அரசியல்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

ஜெ

வாசித்து நீண்டநாளாகிறது. ஆனால் மகாபாரத அரசியல்சூழலை சுருக்கமாக வரைபடங்களுடன் அளித்திருக்கும் அந்த இணைப்பு மீண்டும் வாசிக்க புதிதாக இருந்தது. மீண்டும் அரசியலும் போரும் தொடங்கும் நிலையில் மிக உதவியாக இருந்தது அது. வரும் அத்தியாயங்களில் அதை வாசித்து வாசித்துத்தான் என்ன நிகழ்கிறதென்பதைப்புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்

சாரங்கன்

Friday, June 1, 2018

ராதையும் கண்ணனும்




ஜெ

ஒவ்வொரு நாவலின் இடைவெளியிலும் நான் நீலம் நாவலை சென்று வாசிப்பதுண்டு. அதைச் சரியாக வாசிக்கவில்லை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருப்பது ஒரு காரணம். அதோடு அந்த காலண்டர் என் வீட்டில் இருக்கிறது. ஆண்டு முடிந்தாலும் அதை மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறேன். வெண்முரசு ஓவியங்களில் அதுதான் கிளாஸிக். எல்லா ஓவியங்களுமே உச்சகட்ட கிரியேட்டிவிடியுடன் இருந்தன. நீலம் படிக்கும்போது எல்லா அத்தியாயங்களிலுமே ஒரு பெரிய குதூகலம் ஏற்படுகிறது. ஒரு மகத்தான விஷயத்தை செய்வதுபோல நிறைவு. நீலத்தில் கிருஷ்ணனுக்கு ராதை அவனைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணன் என்கிறாள். அவன் அவளைச் சுட்டிக்காட்டி ராதை என்கிறான். நான் அடிக்கடி போய் வாசிக்கும் இடம் அது. அந்த கண்ணனுக்கு அழிவே கிடையாது

மனோகர்

போர்




அன்புள்ள ஜெ

ஒருவழியாக மகாபாரதப்போர் வரப்போகிறது. அந்த நினைப்பு வந்ததுமே ஒரு பெரிய சோர்வு. அது வரக்கூடாதென்றே நீங்கள் மிகவும் தயங்கி ஒத்திப்போட்டீர்கள். நாங்களும் போருக்கு முந்தைய அனைத்துக்கதைகளையும் வாசித்து போர் இன்னும் எப்போதோ வரப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தோம்

ஆனால் நான் இப்போதுள்ள நிகழ்வுகளைப் பார்க்கிறேன். அறிவுஜீவிகளுக்கு ஒரு சமூகம் அமைதியாக இருந்தால் ஒரு நிம்மதியில்லாத தன்மை உருவாகிறது. அன்றாடம் ஏதேனும் கொந்தளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். ஒன்றும் இல்லாவிட்டாலும் கொந்தளிக்கவைக்கிறார்கள். இதுதான் ஒரு உண்மை. அறிவுஜீவிகள் கொந்தளிப்பையும் அழிவையும்தான் விரும்பி உண்டுபணுகிறார்கள். அதுதான் மக்களுக்கும் பிடித்திருக்கிறது.

ஆகவே போர் என்பது அனைவருக்கும் ஆழமாக மனசுக்குள் பிடித்த ஒன்றாகவே இருக்குமென நினைக்கிறேன். நானும் அப்படித்தானா என்று கேட்டுக்கொள்கிறேன்

ரவீந்திரன் நாகராஜன்

கதைகளுக்குள் கதை




அன்புள்ள ஜெ

வெண்முரசின் கதைகளுக்குள் கதைகளுக்குள்  என்று சென்றுகொண்டே இருக்கிறேன். இந்த அனுபவம் கடந்த நான்கு ஆண்டுகளாக அனேகமாக ஒவ்வொரு நாளும் நிகழ்கிறது என்பது நினைத்துப்பார்க்கவே அபூர்வமான நிகழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் இத்தனைபெரிய ஒரு படைப்பு எழுதப்படும் அதை இத்தனைபேர் இப்படி வாசிப்பார்கள் என்பதெல்லாம் எவரும் நம்பமுடியாத நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். நான் இதற்குமுன்னால் இதேபோல பெரிய நாவல் என எதையுமே வாசித்ததில்லை. இந்த பெரிய நாவல் மன ஓட்டங்களையும்  தத்துவ நுட்பங்களையும் கவிதையையும் நிறைத்து வைத்திருந்தாலும்கூட இப்படி வாசிக்கவைப்பது ஆச்சரியமானதுதான்

ராஜேந்திரன்

Thursday, May 31, 2018

இமைக்கணம்




அன்புள்ள ஜெயமோகன்,
         
எழுத உங்களுக்கு மட்டும் இமைக்கணம் அதிக நேரம் 
எடுத்துக் கொள்ளவில்லை;வாசிக்க எங்களுக்கும்தான்.
தெரியாமல் ஒரு முடிவெடுத்து விட்டேன் வெண்முரசு 
பயிலும் போது மிகவும் முக்கியமான வாக்கியங்களை 
ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொள்வதென்று.இளைய யாதவரின் 
சொற்களில் ஒவ்வொன்றுமே அற்புதமாக உள்ளபோது எதை 
விடுவது?எப்படியும் பாதிக்கு மேல் எழுத வேண்டியுள்ளது.
         

வெண்முரசில் எனக்கு மிகவும் பிடித்தது இமைக்கணம்தான்.
அடுத்து சொல் வளர் காடு. மகாபாரதத்தில் மரியாதைக்குரிய 
கேரக்டர் தர்மர்.ஆனால் அவரை பீமன் மூலம் நீங்கள் மிகவும் 
கேலி செய்வது போல் தோன்றும்.இப்போது அவருக்கு மிக 
அணுக்கமான சகதேவனும்.அவருடைய சோர்வும்,அறம் பிழைத்து 
விட்டதோ என்ற கையறு நிலையும் என்னை மிகவும் பாதித்தது.
ஆனால்,ஒரு அறத்தான் ஏன் பிறரால் விரும்பப் படுவதில்லை 
என்பது மிக தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. 
ஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் இளைய யாதவர் மூலம் 
புதிய கோணங்களில் அலசியிருக்கிறீர்கள்.
          

 கடந்த ஒரு மாத காலத்தில் புல்  வெளி தேசம்,முன் சுவடுகள்,
இன்று பெற்றவை,தெய்வங்கள்,பேய்கள்,தேவர்கள் நான்கும் 
படித்தேன்.படிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் கடிதம் எழுதாததால் 
படிக்கவில்லை என்றோ,எழுத எதுவுமில்லை என்றோ அர்த்தமில்லை 
என்று நீங்கள் அறிவீர்கள்.தஞ்சைக்காரர்கள் அதிகம் கடிதம் 
எழுதுவதில்லை என்பது உண்மைதான்.
          

பல்வேறு அழுத்தங்களால் சமகால செய்திகளை ஓராண்டு 
துறத்தல் என்பது நல்ல முடிவே.ஓராண்டுக்குப் பிறகு பெரிதாக 
ஒன்றும் மாறியிருக்காது என்றே நினைக்கிறேன்.நன்றி.

சாந்தமூர்த்தி,
மன்னார்குடி. 

ரக்தபீஜன்




ஜெ

பன்னிருபடைக்களத்தில் ரக்தபீஜனின் கதையை மகனுக்குச் சொல்வதற்காக மீண்டும் வாசித்தேன். முதல் வாசிப்பில் அந்தக்கதையையும் அதை நீங்கள் இண்டெர்பிரெட் செய்திருக்கும் விதத்தையும்தான் கவனித்து வாசித்தேன். இப்போது வாசிக்கும்போதுதான் வரிவரியாக எழுதப்பட்டது அந்தக்கதை என உணர்ந்தேன். இவ்வளவு கூடுதலாக பக்கங்கள் இப்படி வரிவரியாக எழுதப்படும்போது அதற்குரிய வாசிப்பு அதன் தீவிரவாசகர்களிடமிருந்தே கிடைக்க வாய்ப்பில்லை. ரக்தபீஜன் பிளந்து பிளந்து வளர்கிறான். அவனுடைய குருதியின் துளியில் இருந்தே பெருகுகிறான். ஆனால் அவன் உண்மையில் பெருகுவது அவனுடைய எதிரிகளின் எண்ணத்தில்தான் என்பதை  இப்போது வாசிக்கும்போதுதான் உணர்ந்தேன். அவனை அஞ்சி அவனைக்கொல்லமுயல்பவர்களின் அச்சம்தான் அவனை வளர்க்கிறது. . “எண்ணியதுமே அவன் எழுகிறான், எண்ணத்தை வெல்ல முயல்கையில் அவ்வெண்ணம் தொட்டு மேலும் பெருகுகிறான்” என்றனர் இளையோர். “போரிடப் பெருகுபவனிடம் பொருதுவதெப்படி?” என குமைந்தனர். என்ற வரி அவனைப்பற்றிய அற்புதமான ஒரு சித்திரத்தை அளித்துவிடுகிறது. இன்று எத்தனை ரக்தபீஜன்கள். ஹிட்லர் ஸ்டாலின் என எல்லாருமே அவர்கள் மீதான அச்சத்தால் வளர்க்கப்பட்டவர்கள்தானே? இன்றைக்கு ஐஎஸ்ஐஎஸ் கூட அப்படித்தானே? அந்தக்கதையையே ஒரு மிகப்பெரிய சைக்காலஜிக்கல் நேரேஷனாக வாசிக்கமுடிந்தது . ஒரு அரசியல் கோணத்தில் புரிந்துகொள்ளமுடிந்தது

அருண்குமார்