Sunday, March 29, 2015

புத்தனெனும் விளையாட்டுப்பாவை(வெண்முகில் நகரம் அத்தியாய்ம் நாற்பத்து ஆறு)




அன்பு ஜெயமோகன்,

          வெண்முகில் நகரத்தின் நாற்பத்து ஆறாம் அத்தியாயத்தில் சூரனிடம் “மானுடரைப்போல சிறந்த விளையாட்டுப் பாவைகள் எவை?” என ஒரு கேள்வியை எழுப்புகிறான் கிருஷ்ணன். அக்கேள்வி சூரனுக்குமானது மட்டுமன்று. மானுடராகிய நம் ஒவ்வொருவருக்குமானது. வாழ்க்கை விளையாட்டில் நாம் பொம்மைகளாக மட்டுமே இருப்பதைப் புரிந்து கொள்ளும் நேரத்தில் விளையாட்டு முடிவை நெருங்கி இருக்கும். அந்தோ பரிதாபம்!

”நம் வாழ்வு தனித்துவமானது” என நாம் நினைப்பதில் இருந்து விளையாட்டு துவங்குவதாக நான் கருதுகிறேன். ஆனால், அப்போது நமக்கு விளையாட்டாகத் தெரிவதில்லை. ஒரு கடினமான போராட்டமாகவே தொனிக்கிறது. முதலில் வீட்டில் துவங்கும் போராட்டம் படிப்படியாக சமூகத்திற்கு நகர்கிற்து. சமூகமும், வீடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தீவிரமாக்கி விடுகிறதோ என்பதைக்கூட யோசிக்க மறந்தவர்களாக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம். பள்ளியில் மதிப்பெண்களுக்கு, சமூகத்தில் நல்ல பதவிகளுக்கு என நமக்கான அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சலிக்காது ஓடிக்கொண்டே இருக்கிறோம். தீவிரப்போராட்டங்களுக்குப் பின் நாம் நினைத்த அடையாளத்தைப் பெற்றுவிட்டாலும் நிறைவு வருவதில்லை. ஏதோ ஒரு வெறுமை நமக்குள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமூகமும், வீடும் நம்மைத் தனிமைப்படுத்தும் வயோதிக காலத்தில்தான் வாழ்வை அசைபோட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது தவறாக வாழ்ந்து விட்டோமோ எனும் குற்ற உணர்வும் தவிர்க்க முடியாததாகிறது. நமக்கான நிறைவின்மைக்கும், வெறுமைக்கும் காரணம் “நம் வாழ்வு தனித்துவமானது” என்பதான கருத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டுகொள்கிறோம். சக மனிதர்களையும், உலகையும், இயற்கையையும் கண்டுகொள்ளாது முழுக்க முழுக்க நம் தனிப்பட்ட வாழ்வுக்குச் செலவழித்த நாட்கள் எவ்விதத்திலும் நம்மை திருப்தியுறச் செய்யவில்லை. அங்குதான் ’விளையாட்டுப்பாவை’யாக நாம் இருந்திருப்பது உறைக்கவும் செய்கிறது. துவக்கத்திலேயே அதைப் புரிந்து கொண்டிருப்பின் எவ்வித அலைக்கழிப்பும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கலாம் என யோசிக்கவும் செய்கிறோம்.
”மானுடன் தனித்துவமானவன். ஒவ்வொரு மானுடனும் தன்னைப் போன்றே இருப்பான், வாழ்வான்” எனும் கெளதம சித்தார்த்தனின் கணக்கு ஒருநாள் நகர்வலத்தில் தகர்ந்து போகிறது. அப்போதுதான் அவன் நாம் காலத்தின் கைப்பாவைகளாக இருப்பதைப் புரிந்து கொள்கிறான். அங்கிருந்து தீவிரமாக நிறைவைத் தரும் உண்மையைத் தேடிக் கிளம்புகிறான். தன்னை வருத்திக் கொள்கிறான்; காடு மேடுகளில் அலைகிறான்; பிச்சை எடுத்து உண்கிறான். ஒரு உண்மையும் கிடைக்கவில்லை. ஒரு அரச மரத்தடியில்(பாலி மொழியில் போதிமரம் என்பது அரசமரம் எனச் சொல்கின்றனர்) அமர்கிறான். அது தரும் நிழலும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் அவனுக்கு ஏதோ செய்தியளிப்பதை உணர்கிறான். உற்றுக் கவனிக்கிறான். அவன் முகத்தில் ஒளி தோன்றுகிறது. ஆம், “கணந்தோறும் வாழ்ந்தால் போதும். மற்றபடி, முன்பின்னாக எதையும் கோத்து கற்பனையாக ஒரு வடிவத்தைக் கொள்வதும், அதற்காக வாழ்வதும் இயல்புக்கு முரணானது” என்பதை அறிந்து கொள்கிறான். வாழ்க்கையை விளையாட்டாக அவன் கண்டுகொண்ட தருணமே அவன் வாழ்வில் முக்கியமானது. அக்கணத்திலிருந்து அவன் விளையாட்டுப்பாவையாகிப் போகிறான். கெளதம சித்தார்த்தன் தன்னை விளையாட்டுப்பாவை எனக்கண்டு கொண்ட கணத்தில் புத்தனாகி விட்டதாக நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சித்தார்த்தனும், புத்தனும் இருக்கின்றனர். சித்தார்த்தனாக இருக்கும்வரை நமக்குப் போராட்டம்தான். புத்தனைத் தெரிந்து கொண்டுவிட்டாலோ எல்லாமே விளையாட்டுத்தான். கிருஷ்ணனின் கேள்வி என்னைப் புத்தனைச் சந்திக்க வைத்ததுகூட விளையாட்டாகத்தான் தோன்றுகிறது. ஒரு முடிவில்லா விளையாட்டைக் காலம் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறது என்பதை கிருஷ்ணன் எளிமையாகப் புரியவைத்து விடுகிறான்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

Saturday, March 28, 2015

கதைவலை




அன்புள்ள ஜெ,

கதைகள் வழியாக தனியாக ஒரு பாதையில் வெண்முரசு இணைக்கப்படுகிறது. இந்தவகையான ஒரு secondary texture ஒரு நவீன இலக்கியத்திற்கு சாத்தியம் என்பதே ஆச்சரியம் அளிப்பதுதான். ஒரு படைப்பாளியாக இதுதான் மகாபாரதத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் கொடை

மகாபாரதத்திலே இந்த உதிரிக்கதைகள் எல்லாமே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தனித்தனியாகச் சொல்லப்படுகின்றன. வெவ்வேறு காலகட்டங்களிலே சேர்க்கப்பட்டவை என்று சொல்லுகிறார்கள். இவையெல்லாம் ஒரு கலைக்களஞ்சியம் மாதிரியோ கதைக்கொத்து மாதிரியோதான் இருக்கின்றன. கதைகளுக்கு நடுவே இணைப்பு என்று ஏதும் கிடையாது

நீங்கள் அர்த்தபூர்வமாக ஒரு இணைப்பை உருவாக்குகிறீர்கள் . இந்த இணைப்பு முக்கியமானது. இந்த கதைகள் வரும் இடம் அந்த மையக்கதையை மேலதிகமாக விளக்குகிறது. அதேபோல இந்தக்கதைகளை மட்டும் கொண்டே மகாபாரததத்தையும் வேறுவகையிலே வாசிக்கமுடிகிறது

இந்த அமைப்புதான் இந்தியாவின் புராணக்கதைகளில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது. இதுதான் நம்முடைய அழகியல் என்று நினைக்கிறேன்

சண்முகம்

குபேரனின் நோய்




ஜெ,

வெண்முரசில் வரும் குபேரனின் கதையில் நீங்கள் அளித்திருக்கும் மேலதிக அடுத்தம் வியப்பூட்டுகிறது. குபேரனை பொன்னின் காவலன், அரசன் என்ற் சொல்லலாம். குபேரனின் உடல் அழுகிக்கொண்டிருக்கும் தொழுநோயாளியின் உடல். அந்த அழுகல் என்பது பொன்னில் இருந்து வந்த அழுகலே என்பது ஒரு சிறந்த கற்பனை

கம்பனும் இலங்கையை அற்புதமாக வர்ணிக்கிறான். அத்தனை சிறப்பான நகரம் எப்படி அரக்கர்களின் நகரமாக இருந்தது என்பதர்கான விளக்கமாக உத்தர ராமாயணத்தில் இருந்து இந்தக் கதையை அளித்திருக்கிறீர்கள். வெறும் அகந்தைக்காகவே உருவாக்கப்பட்ட நகரம் அது. அதற்கு வேறெந்த நோக்கமும் இல்லை. அகந்தை அழுகக்கூடியது

அகந்தையின் சித்திரத்தை அளிக்கும் இலங்கையின் கதையுடன் இந்திரப்பிரஸ்தையும் இணைத்திருப்பதில் இருக்கிறது படைப்புவேகம்


முரளி கிருஷ்ணன்

யானைகளின் பாகன்



யானைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாலும் எனக்கு சலிக்காது, ஆனாலும் அதன் அருகே நெருங்கமாட்டேன், யானை மனிதர்களை விரோதியாக காணும் விலங்கினம். அன்பே உருவானதுபோல தோன்றும் கோயில் யானைகள் பழக்கப்படுத்துதல் என்ற சங்கிலியால் கட்டுபோடப்பட்டவை. அந்தக் கட்டை எந்த நேரத்திலும் அது உடைத்துக்கொண்டு ஒரு வனவிலங்காக அதன் இயல்பை அடையக்கூடும்.  ஆகவே ஒரு யானைமேல்  எனக்கு இருக்கும் நேசத்தைவிட அதன்மேல் இருக்கும் அச்சம் எனக்கு அதிகம்.  ஒரு சிறந்த பாகனால் மட்டுமே அதை நாட்டுவாழ்க்கைக்கு உட்படுத்தமுடியும். அதே நேரத்தில் அதை போர்யானையாக மாற்றி பலரை கொல்லவைக்கவும் முடியும். 

    திருதராஷ்டிரர் ஒரு யானை என்றே அனைவராலும் கருதப்படுவது அவர் அத்தகைய இயல்பை கொண்டிருப்பதால்தான்.  அவர் விதுரர் என்ற பாகனால் வழி நடத்தப்படும்வரை ஒரு கோயில் யானையைப்போல மிக இனியவராக இருப்பார்.  அவர் சற்றே கோபத்திலேயோ அல்லது வேறு உணர்ச்சியினாலோ சற்றே தடம் மாறும்போது விதுரனின் சொற்கள் அவரை நேர்வழி செலுத்துகிறது. ஆனால் விதுரனின் சொற்கள் அவர் காதில் விழாத நேரத்தில் அவரால் பாதகமான செயல்களை செய்ய வைக்க முடியும்.  சகுனி போன்றவர்கள் அவரை ஒரு போர் யானையாக மாற்றிவிடமுடியும்.  அதனால் பல தீங்குகள் நடப்பதற்கு  அவரை காரணப்படுத்தமுடியும்.

   பலராமனும் ஒரு யானையைப்போல. இன்னும் முழுமையாக பழக்கப்படுத்தாத பெரு விலங்கு, உணர்ச்சிகளால் ஆளப்படுபவர்.  தன் கண்களால் காண்பதை மட்டுமே காண்பவர். அதைத்தாண்டி பார்க்கும் யுக்தி கைவரப்படாத  ஒரு பெரிய குழந்தை. அவரை ஒரு கட்டுக்குள் வைப்பதும் அவரை ஒரு பாதையில் செலுத்துவதும் மிகவும் கடினம்.  குழந்தையை ஒரு தாய் சிறப்பாக கையாள்வதைப்போல கண்ணன் அவரை கையாள்கிறான். ஒரு திறமையான குழந்தைவளர்ப்பவர்  ஒரு செயலை குழந்தை தானே செய்வதைப்போல்  செய்யவைக்கவேண்டும். அது எடுக்கக்கூடாத பொருளை குழந்தையின் கைபடும் இடத்தில் வைக்கக்கூடாது. அது சாப்பிட வேண்டிய உணவை அக்குழந்தையே விரும்பி சாப்பிடும் வகையில் சுவைசேர்த்து வண்ணம் தந்து அதன் கண்ணெதிரில் வைக்கவேண்டும்.  குழந்தை எதை விளையாடவேண்டும் எதை கற்க வேண்டும் என்பதை திட்டமிட்டு அக்குழந்தையே அதை விரும்பி செய்யும் வண்ணம் நிகழ்த்தவேண்டும்.  கண்ணன் பலராமரை கையாள்வது அத்தகையது
   
ஒரு அரச அவை கூட ஒரு யானையைப்போன்றதுதான். திறமையான முன்னவர் இல்லாத அவை மதம்கொண்ட யானையைப்போல கட்டற்றுபோய் பெரும் குழப்பத்தில் முடியும். ஒரு பாதையில் செல்லும் பெரிய யானை அதுவாக சுதந்திரமாக நடந்து செல்வதுபோல் தோன்றும். ஆனால் அதன் மேல் அமர்ந்திருக்கும் ஒரு நல்ல பாகன் சிறிதாக சில ஆணைகள் இடுவதன் மூலம், தன் கால்களை சற்றே அழுத்துவதன் மூலம், தேவைப்படும்போது அங்குசத்தால் மெல்ல அடிப்பதன் மூலம் அவன் நினைக்கும் பாதையில் யானையை நடத்தி செல்கிறான்.   அஸ்தினாபுர  பேரவையை கண்ணன் குறைவான சொற்களைக்கொண்டு தான் நினைக்கும் வழியில் செலுத்துவது  மிகவும் அழகு.

கண்ணனை இப்படி புரிந்து எழுத வெறும் சிந்தனையில் மட்டும் கண்ணன் இருந்தால்  போதாது. அவனை தன் நாடி நரம்பினுள் எல்லாம் ஜெயமோகன் நிறைத்திருக்கவேண்டும்.



தண்டபாணி துரைவேல்

சூதர் குரல்


ஜெ,

சூதர் பாடல்கள் கொடுக்கும் மேலதிக அர்த்தம் வழியாகவே மகாபாரதத்தின் வீச்சு வெளிப்படுகிறது. சூதர்களின் திமிர்தான் முக்கியமான விஷயம். பெருநகரத்தை அமைத்துவிட்டு ஒருவன் வந்து அமர்ந்திருக்கிறான். ஒருத்தி அமைக்கப்போகிறாள். பொன்னகரம் என்பது எப்போதுமே கருணையே இல்லாதது, அழுகி நாறுவது என்று சூதன் வந்து பாடுகிறான் என்றால் அவனுடைய அந்த அறிவின் திமிர்தான் முக்கியமானது. அவனுடைய குரல் அறிஞனின் குரல். அல்லது கவிஞனின் குரல்

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் அந்தக்குரலாக ஒலிப்பது வியாசர்தான் என்றுதான். வியாசர் சொல்லவேண்டியதைத்தான் சூதர் வந்து சொல்கிறார். அதேபோல நீங்களும் ஒரு நவீனச் சூதர். நீங்கள் உங்கள் குரலாகவும் சூதனைத்தால் பாடவிடுகிறீர்கள்.

சூதன் இரண்டு ஆட்சியாளருக்கும் விடுக்கும் எச்சரிக்கை அபாரமானது. ஒரு துளி கருணை, ஒரு துளி மண் இல்லை என்றால் பொன்னுக்கு ஒரு பயனும் இல்லை என்கிறான். இலங்கை என்பது ஆணவத்தின் அடையாளம். அது ஒருநாளும் வாழ்ந்ததில்லை என்கிறான்

ஜெயராமன்

நாடகத்தில் உண்மை

 
 
 
 
அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

பறத்தல் படித்தேன், இது பித்தனின் பத்துநாள் அக்கினி செடியில் இருந்து ஒரு புது துளிர் வந்ததுபோல் உள்ளது, துளிர் என்பதாலேயே மென்மையாக ஆனால் உயிர் துடிப்பின் அதிர்வை உணரமுடிகின்றது, தகிக்கின்றது. என்னால் அந்த உயரத்தில் நின்று உங்களைப் பார்க்கமுடியவில்லை, நகர்ந்து வெண்முரசு பகடைத்தளத்தில் நின்று சகுனியை, கண்ணனைப்பார்க்கின்றேன். 

ஒரு மென்மையான விளையாட்டுப்போன்ற பெரும் உக்ரம் நிறைந்த போர்க்களம், அகம் மட்டுமே விளையாடும் வீரவிளையாட்டு அதைப்படித்து அசந்தபோது நினைவில் வந்தது இந்த திருக்குறள். 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

,இந்ந திருக்குறளில் சொல்லெல்லாம் பொருளாகி, பொருளே வாழ்வாகி, வாழ்வென்றும் சொல்லென்றும் இல்லாத ஒரு தருணத்தில் இந்த திருக்குறள் வைக்கப்படுத் தளம் பெருகி செல்லும் வகை வண்டு சிலிர்த்தேன். சகுனியும் கண்ணனும் பகடையாடும் அன்று இந்த திருக்குறள் சகுனியின் கண்கள் வழியாக கண்ணன் ஆவதைக்கண்டு சிலிர்த்தேன். கண்ணன் ஆண்தான் ஆனால் அவன்தான் அப்பன் சிவனின் பாகமான அன்னைசக்தி. அந்த சக்தி என்னும் பெண்மையின் மூலத்தை அவன் வேறுவேறு வண்ணத்தில் வடிவத்தில் அனைவரிடமும் காட்டுகின்றான். சகுனியிடம்கூட அவன் பகடையாடும்போது அந்த பெண்மையின் மூலத்தை ஐம்புலன்களை அறியும் வகையில் துளிர்க்கவைப்பதாகவே படுகின்றது எனக்கு. வெண்முரசின் நாதத்தில் மிதந்துபோகும் அந்த இசையின் துடிப்பு தழுவிச்செல்கின்றது. 

சகுனி வெல்வதற்காக விளையாடுகின்றான், மாறாக கண்ணன் நான் யார் என்பதை நீ அறி என்று காட்டுவதற்காக விளையாடுகின்றான். அன்று வில்போட்டியில் தனது ஆண்மையை உலகுக்கு, இன்று பகடையில் தனது பெண்மையை சகுனிக்கு. கண்ணன் வெல்வதற்காக விளையாடவில்லை மாறாக தன்னை காட்டுவதற்காக விளையாடுகின்றான் இல்லை..இல்லை தன்னை அறியுங்கள் என்று ஒரு வாய்ப்பை அளிக்கின்றான். 

சகுனியும் ஏதோ ஒரு புள்ளியில் அவனை காதலிக்கத்தான் வேண்டும் அது அவன் நடத்தும் நாடகமா? அல்லது நாடகத்தின் உண்மையா?

நன்றி
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்.