Sunday, March 29, 2015

புத்தனெனும் விளையாட்டுப்பாவை(வெண்முகில் நகரம் அத்தியாய்ம் நாற்பத்து ஆறு)




அன்பு ஜெயமோகன்,

          வெண்முகில் நகரத்தின் நாற்பத்து ஆறாம் அத்தியாயத்தில் சூரனிடம் “மானுடரைப்போல சிறந்த விளையாட்டுப் பாவைகள் எவை?” என ஒரு கேள்வியை எழுப்புகிறான் கிருஷ்ணன். அக்கேள்வி சூரனுக்குமானது மட்டுமன்று. மானுடராகிய நம் ஒவ்வொருவருக்குமானது. வாழ்க்கை விளையாட்டில் நாம் பொம்மைகளாக மட்டுமே இருப்பதைப் புரிந்து கொள்ளும் நேரத்தில் விளையாட்டு முடிவை நெருங்கி இருக்கும். அந்தோ பரிதாபம்!

”நம் வாழ்வு தனித்துவமானது” என நாம் நினைப்பதில் இருந்து விளையாட்டு துவங்குவதாக நான் கருதுகிறேன். ஆனால், அப்போது நமக்கு விளையாட்டாகத் தெரிவதில்லை. ஒரு கடினமான போராட்டமாகவே தொனிக்கிறது. முதலில் வீட்டில் துவங்கும் போராட்டம் படிப்படியாக சமூகத்திற்கு நகர்கிற்து. சமூகமும், வீடும் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தீவிரமாக்கி விடுகிறதோ என்பதைக்கூட யோசிக்க மறந்தவர்களாக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம். பள்ளியில் மதிப்பெண்களுக்கு, சமூகத்தில் நல்ல பதவிகளுக்கு என நமக்கான அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சலிக்காது ஓடிக்கொண்டே இருக்கிறோம். தீவிரப்போராட்டங்களுக்குப் பின் நாம் நினைத்த அடையாளத்தைப் பெற்றுவிட்டாலும் நிறைவு வருவதில்லை. ஏதோ ஒரு வெறுமை நமக்குள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமூகமும், வீடும் நம்மைத் தனிமைப்படுத்தும் வயோதிக காலத்தில்தான் வாழ்வை அசைபோட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது தவறாக வாழ்ந்து விட்டோமோ எனும் குற்ற உணர்வும் தவிர்க்க முடியாததாகிறது. நமக்கான நிறைவின்மைக்கும், வெறுமைக்கும் காரணம் “நம் வாழ்வு தனித்துவமானது” என்பதான கருத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டுகொள்கிறோம். சக மனிதர்களையும், உலகையும், இயற்கையையும் கண்டுகொள்ளாது முழுக்க முழுக்க நம் தனிப்பட்ட வாழ்வுக்குச் செலவழித்த நாட்கள் எவ்விதத்திலும் நம்மை திருப்தியுறச் செய்யவில்லை. அங்குதான் ’விளையாட்டுப்பாவை’யாக நாம் இருந்திருப்பது உறைக்கவும் செய்கிறது. துவக்கத்திலேயே அதைப் புரிந்து கொண்டிருப்பின் எவ்வித அலைக்கழிப்பும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கலாம் என யோசிக்கவும் செய்கிறோம்.
”மானுடன் தனித்துவமானவன். ஒவ்வொரு மானுடனும் தன்னைப் போன்றே இருப்பான், வாழ்வான்” எனும் கெளதம சித்தார்த்தனின் கணக்கு ஒருநாள் நகர்வலத்தில் தகர்ந்து போகிறது. அப்போதுதான் அவன் நாம் காலத்தின் கைப்பாவைகளாக இருப்பதைப் புரிந்து கொள்கிறான். அங்கிருந்து தீவிரமாக நிறைவைத் தரும் உண்மையைத் தேடிக் கிளம்புகிறான். தன்னை வருத்திக் கொள்கிறான்; காடு மேடுகளில் அலைகிறான்; பிச்சை எடுத்து உண்கிறான். ஒரு உண்மையும் கிடைக்கவில்லை. ஒரு அரச மரத்தடியில்(பாலி மொழியில் போதிமரம் என்பது அரசமரம் எனச் சொல்கின்றனர்) அமர்கிறான். அது தரும் நிழலும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் அவனுக்கு ஏதோ செய்தியளிப்பதை உணர்கிறான். உற்றுக் கவனிக்கிறான். அவன் முகத்தில் ஒளி தோன்றுகிறது. ஆம், “கணந்தோறும் வாழ்ந்தால் போதும். மற்றபடி, முன்பின்னாக எதையும் கோத்து கற்பனையாக ஒரு வடிவத்தைக் கொள்வதும், அதற்காக வாழ்வதும் இயல்புக்கு முரணானது” என்பதை அறிந்து கொள்கிறான். வாழ்க்கையை விளையாட்டாக அவன் கண்டுகொண்ட தருணமே அவன் வாழ்வில் முக்கியமானது. அக்கணத்திலிருந்து அவன் விளையாட்டுப்பாவையாகிப் போகிறான். கெளதம சித்தார்த்தன் தன்னை விளையாட்டுப்பாவை எனக்கண்டு கொண்ட கணத்தில் புத்தனாகி விட்டதாக நான் நம்புகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சித்தார்த்தனும், புத்தனும் இருக்கின்றனர். சித்தார்த்தனாக இருக்கும்வரை நமக்குப் போராட்டம்தான். புத்தனைத் தெரிந்து கொண்டுவிட்டாலோ எல்லாமே விளையாட்டுத்தான். கிருஷ்ணனின் கேள்வி என்னைப் புத்தனைச் சந்திக்க வைத்ததுகூட விளையாட்டாகத்தான் தோன்றுகிறது. ஒரு முடிவில்லா விளையாட்டைக் காலம் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறது என்பதை கிருஷ்ணன் எளிமையாகப் புரியவைத்து விடுகிறான்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.