Monday, July 7, 2014

இதிகாசமா புனைவா? -கி மு பக்கங்கள்

இதிகாசமா ? புனைவா ?

சேலத்தில் இருக்கும் பாலம் புத்தக நிலையத்தில் முருகன் என்பவருடன் சமீபமாக பேசினேன். அதில் ஒன்று ஜெயமோகனின் முதற்கனல் பற்றி இருந்தது. ஜெயமோகன் அரசியல் நிலைப்பாட்டில் இந்துத்துவா என்பதால் இந்த முதற்கனல் அல்லது வெண்முரசின் பகுதி அதற்கு கொடுக்கும் நூதன ஆதரவு என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த விஷயத்துடன் எனக்கு உடன்பாடே கிடையாது.

வெண்முரசு நாவலை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இரவானால் கண்ணியமாக வெளியிடும் நண்பர்களின் உழைப்பிற்கு சிரம் தாழ்த்தவே வேண்டும். அது மட்டுமில்லாமல் ஷண்முகவேல் என்பவரின் ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியமும் அந்த அத்தியாயங்களில் சொல்லப்படும் எல்லா விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக சொல்பவை. நுண்மையாக நேர்த்தியாக வரையப்பட்டவை.

முதற்கனல் என்னும் வெண்முரசின் முதல் பாகத்தை தொடர்ந்து மழைப்பாடல் என்னும் இரண்டாம் பாகத்தையும் ஆரம்பித்துவிட்டார். நான் முதற்கனல் சார்ந்து என் இணையத்தில் எழுதவேயில்லை. பார்க்கும் போதெல்லாம் என் நண்பனிடம் வெண்முரசு சார்ந்து பேசிக் கொண்டே இருப்பேன். இந்த நிலையில் தான் ஏன் அதைப் பற்றி எழுதாமல் இருக்கிறாய் என்னும் கேள்வி அவனிடம் எழுந்தது. சில ஆங்கில நூல்களை நான் அடிலெய்ட் இணைய நூலகத்திலிருந்து ஈபுக்காக எடுத்து வாசித்து எழுதுகிறேன். அப்படி இந்த நாவலை என்னால் எழுத முடியாது. அதற்கான காரணம் இந்நாவலின் பரப்பு மிக விஸ்தீரமானது. அப்படி ஒருவர் இணையத்தில் தொடர்ந்து வாசித்து நாவல் முடிந்தவுடன் எழுத முடியுமெனில் நான் அவரின் உழைப்பை கண்டு நிச்சயம் பெருமிதம் கொள்வேன். என்னால் அப்படி முடியவில்லை. முடியவும் முடியாது. என்னுடைய ஞாபக சக்தி குறைவு. ஆதலால் முதற்கனல் நாவலை நூல்வடிவில் மீள்வாசிப்பு செய்தேன்.

நூல்வடிவம் எனும் போதே நான் இணையத்தில் நுகர்ந்த நாவலே முழுவடிவம் பெறுகிறது. இணையத்தில் ஒவ்வொரு இரவும் வாசிக்கும் போது எனக்கு முந்தைய நாளின் தொடர்ச்சி கொஞ்சமெனும் அறுந்தே இருந்தது. நாவல் பெரும் களம். அக்களத்திற்கு சவால் விடும் புனைவே முதற்கனல்.

புனைவா ? ஆம் புனைவு தான். முன்னுரையிலேயே சொல்லியிருக்கிறார். அநேகம் பேருக்கு மகாபாரதம் தாயின் வழியாகவே கடத்தபட்டு சில சில கதைகள் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இதைத் தான் மகாபாரதம் என்று நாம் கொண்டிருக்கிறோம். இந்த மகாபாரதத்தை நாம் வழிபடுகிறோம். இதிகாச நூலாக இந்து மதத்தின் ஒரு புராணமாக புராதனமான நூலாக வைத்து பூஜிக்கிறோம்.

ஒரு இதிகாசம் என்ன செய்கிறது. அம்மதத்தை தழுவுபவர்களை அற வழியில் செலுத்துகிறது. வழிநடத்துகிறது. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். அவரவர்களின் புனித நூல்களை ஆராய்ந்தாலும் அங்கே குறுங்கதைகள் நிறைய இருக்கின்றன. அந்த குறுங்கதைகள் எல்லாம் ஒரு அறத்தை நிறுவுகின்றன. அந்த அறத்தை வாசிப்பவனின் மனதிலோ கேட்பவனின் செவியிலோ ஆழமாக பதிய வைக்கிறது.  இக்கதைகளை, இதிகாசங்களை விரும்புபவர்கள் முதலாக எதிர்பார்ப்பது சலிப்பில்லாமல் செல்லும் கதைகள் தான்.

சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் கதை முகாமில் கூட எல்லா இளைஞர்களுக்கும் அறிவுரைகளை கேட்க பிடிக்கும். ஆனால் அது அறிவுரையின் வடிவத்தில் இருத்தல் கூடாது என்றார். இதற்கான முன்னுதாரணம் தத்தமது இதிகாசங்களில் இருக்கிறது. நம்முடைய அம்மா அப்பா காலத்தில் கதை சொல்லுபவர்கள் நிறைய பேர் இருந்தனர். இப்போது கதை சொல்லுபவர்களுக்கு ஒரு படிப்பினை தேவைப்படுவதாய் இருக்கிறது. இந்த நிலையில் இதிகாசம் என்னும் மரபை உடைத்து முழுக்க ஒரு புனைவை மையமாக வைத்து எழுதப்படுவது தான் வெண்முரசு. அதன் முதல் பகுதி தான் முதற்கனல்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திற்கு கலியுகம் எனும் பெயர் இருக்கிறது. இந்த யுகங்கள் பலவித கணக்குகளில் பல பெயர்களில் இருந்து வளர்ந்து வந்திருக்கிறது. இந்த கலியுகம் அறப்பிழை நிறைந்ததாய் ஒழுங்கின்மை நிறைந்ததாய் இருத்தல் கூடாது என்னும் நல்லதொரு ஆசையில் யாகம் நடத்துகிறான் ஜனமேஜயன் என்னும் அரசன். அந்த வேள்வி ஒரு முனிவரால் தடுக்கப்படுகிறது. அதற்கு காரணம் ஒழுங்கின்மையினால் தான் ஒரு ஒழுங்கு அமையப்படுகிறது. ஒழுங்கின்மையை முழுதாக அழித்தால் உலகத்தால் இயங்க முடியாது. அதுவும் இருத்தல் வேண்டும் என்று சொல்லி வியாசனின் பாரதத்தை ஜனமேஜயன் கேட்கிறான். இங்கிருந்து தான் நாவல் ஆரம்பமாகிறது.



இந்த நாவலில் இரண்டு பிரதான கதைகள். அஸ்தினாபுரம் என்னும் பாரதவர்ஷத்தின் மைய நிலவியலை அரசாளும் அதிகாரத்திற்கு கொண்டுவர சத்யவதி செய்யும் பிரயத்னங்கள். மற்றொன்று பீஷ்மர் என்னும் தேவவிரதன். இவனுள் இருக்கும் தனிமையையும் கடமையையும் அவமானங்களையும் பயணம் வீரம் அறம் என்று எல்லாவற்றையும் சொல்லி செல்கிறார். இந்த இரண்டு கதைகளும் மையபிணைந்து இருக்கிறது.

முதலில் அஸ்தினாபுரத்தைக் காண்போம். பாரதவர்ஷத்தையே அடக்க ஹஸ்தி என்னும் மன்னன் வைத்த நாட்டை ஆள அரசனில்லை. அரசனில்லாத எல்லா கதைகளும் சொல்லப்படுகிறது. அப்போது சந்தனு என்னும் அரசனுக்கு கங்கர் குலம் மூலமாக பிறந்த மகன் தான் தேவவிரதன். இவன் கங்கர் குலம் என்பதாலேயே நாடாளக் கூடாது என்னும் கட்டளை விதிக்கப்படுகிறது. அதன் பின் சத்தியவதி என்பவளை மணம் செய்து இரு குழந்தைகள் பிறக்கின்றன. சித்ராங்கதன் விசித்திரவீரியன். சித்ராங்கதன் இறந்து போக விசித்திர வீரியனை நாடாள வைக்க ஆசை கொள்கிறாள். ஒருவேளை அரசன் இல்லாத நாடாக இருப்பின் அந்நாட்டை யார் வேண்டுமெனினும் போரிட்டு வெல்ல முடியும். தேவவிரதன் பிதாமகனாக இருக்கும் வரையில் அது நிகழாது என்று அறிந்தும் அவளுக்குள் இந்த பயம் இருந்து கொண்டே இருக்கிறது. விசித்திரவீரியன் ஒரு நோயாளி.

இப்போது பீஷ்மர் என்னும் தேவவிரதனுக்கு செல்வோம். பீஷ்மர் அறத்தால் நிறைந்தவன். சாபத்தால் நிறைந்தவன். விசித்திர வீரியனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் காசி நாட்டு மகளிரை கவர்ந்து வரச் சொல்கிறாள் சத்யவதி. பீஷ்மர் அதை செய்ய அதில் ஒரு பெண்ணாக வரும் அம்பை எதிர்த்து நின்று பீஷ்மர் பிடியிலிருந்து வெளியே வருகிறாள். பீஷ்மர் கடத்தி வந்தார் என்னும் காரணத்தினாலாயே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அஸ்தினாபுரத்தின் படையை தம்மால் எதிர்த்து நிற்க முடியாது என. பீஷ்மர் நைஷ்டிக பிரம்மாச்சாரி. அம்பை காதல் கொண்ட சால்வ மன்னனும் விரட்டியடிக்க காசிமன்னனும் அப்பாவாக அவளுக்கு இடமளிக்காமல் போக பீஷ்மரும் காதலை ஏற்காமல் போக பித்தியாகிறாள்.

அவளுடைய மகன் சிகண்டி பீஷ்மரை கொல்ல தயாராகிறான். அவன் ஆண் குணம் நிறைந்த பெண் உடல் கொண்டவன். தோற்றத்தால் அவன் கொள்ளும் இழிவுகள் அவமானங்கள் என்று இந்த மூன்று விஷயங்களையும் அழகாக அறத்தால் நிறைவு செய்கிறார்.

அவர் உருவாக்கும் புனைவு களம் அஸ்தினாபுரம், சால்வ நாடு, கங்கை, சிபி நாடு, காந்தாரம் என்று நிறைய வருகிறது. அந்த எல்லா இடங்களையும் விரிவாக வித்தியாசங்களை காண்பித்து விளக்கி செல்கிறார். நிறைய இடங்களில் இந்த விஷயங்கள் தான் முட்டுக்கட்டையக இருக்கிறது. சில இடங்களின் வர்ணனைகள் நிறைய பக்கங்களுக்கு செல்வதால் அயற்சியை கொடுக்கிறது.

அறம் தர்மம் என்று நம் ஏட்டில் வகுத்த நியதிகளும் நிகழும் விதிகள் ஒன்றாகின்றனவா என்று தெளிவாக சொல்லிச் செல்கிறார். இது முழுமுதற் புனைவு. அந்த புனைவினுள்ளேயே அறம் தர்மம் அரசியல் களம் என்று எல்லாவற்றையும் சொல்கிறார். இதிகாசங்கள் எப்போதும் குறுங்கதைகளால் நிறைந்தது. அதன்படியே இங்கே அறத்தை போதிக்க அறப்பிழையை சுட்டிக்காட்ட நேரும் போதெல்லாம் ஒரு குறுங்கதை வருகிறது. சிபிசக்ரவர்த்தியின் கதை சத்யவான் சாவித்ரியின் கதை என்று நீள்கிறது. அதிலிருந்து கதாபாத்திரங்கள் அறத்தை எடுத்துக் கொண்டு தத்தமது நோக்கை நோக்கி செல்கின்றன. இந்நாவல் பேசும் அறத்தை நாவலிலேயே ஒருவரியாய் குறிக்கிறார்

நூல்கள் நெறிகளை சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறைகளை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன.

ஒவ்வொரு மனிதனின் அகமும் ஏதோ ஒரு கோட்டில் இயங்கிக் கொண்டிருகின்றன. உற்று நோக்கினால் எதுவுமே புதியதில்லை. எல்லாமே புராணங்களிலும் காப்பியங்களிலும் சொல்லப்பட்டவையே. அதை அழகுற இந்நாவல் பேசுகிறது.

வாசிப்பதற்கு இந்நாவல் கடினமாக இருக்கிறது என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். நூல்வடிவில் அந்த கடினம் இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய வார்த்தைகளுக்கு அப்பக்கத்தின் அடியிலேயே அர்த்தம் சொல்கிறார். இதில் நிறைய அரசியல் பேசப்படுகின்றன. எல்லாவற்றையும் நடைமுறையால் இருக்கும் அரசியலோடு ஒப்பீடு செய்யவும் முடியும். இது அவரவர்களின் மனதை பொருத்து. எனக்கு இது பெரும் களத்தில் இயங்கும் ஒரு மாபெரும் புனைவு.

இந்நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றன. எல்லாமே அவர்கள் காட்ட நினைக்கும் இடத்தின் பிரதிநிதிகள். இதிகாசம் என்னும் போர்வைக்குள் வெறும் கதையை சொல்லிபோகாமல் முதற்கனல் ஒவ்வொரு கதைமாந்தரின் அகத்தை வெளிக்கொணருகிறது. நாவல் முடிக்கும் நேரத்தில் சில இடங்களின் மதிசூழ் அரசியலின் முழுமையை நமக்கு அளிக்கின்றது என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

பின் குறிப்பு : முருகன் கேட்ட கேள்வி சமீபத்தில் வந்த நோவா படத்தையே எனக்குள் நினைவூட்டியது. வேதாகமத்தில் காயினை கொள்பவர்களுக்கு பழி வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. படத்திலோ காயீன் கொல்லப்படுகிறான். பாவங்களை காண்பிப்பதில்லை. ஒரு பேட்டியில் அதன் இயக்குனர் டாரென் அரனோஃப்ஸ்கியிடம் இது சுற்றுச்சூழலை பற்றி நிறைய பேசுகிறதே என்று கேட்ட போது வேதாகமம் அதை சொல்கிறது அதை நான் படமாக்கியிருக்கிறேன் என்றார். இந்த பதிலே வெண்முரசு முழுமுதற்புனைவு என்பதற்கும் பொருந்தும்.

வெண்முரசின் அடுத்த பாகமான மழைப்பாடலையும் தினம் வாசித்து வருகிறேன். அது வேறு ஒரு மையத்தை கொண்டிருக்கிறது. அதையும் நூல்வடிவில் வாசித்து பின்னரே எழுதுவேன். முதற்கனலில் வெகுண்டெழும் சினத்தை சூழ்ச்சியுடன் இணைக்கிறார் எனில் மழைப்பாடல் முழுக்க சூழ்ச்சிகளும் அரசியலும்.