Thursday, July 17, 2014

வெண்முரசு கடிதங்கள்

அன்பான ஜெயமோகன்

"தோழர்களே முள்மீதமர்ந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியின் பேதமைதான் எத்தனை மகத்தானது! எத்தனை வகையான அறியாமைகளால் வாழ்த்தி மண்ணுக்கனுப்பப்பட்டவன் மானுடன்!"

இன்று இந்த வரிகள் என்னுடன் தங்கிக் கொண்டன. பேதைமை மகத்தானது என்பதையும் , அறியாமைகளால் வாழ்த்தப் பட்டதையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.


நீங்கள் நலமாக இருக்க வேண்டுகிறேன்.

அன்புடன் 

ரவிச்சந்திரிகா



அன்புள்ள ஜெ

இன்றைய பதிப்பு.

ப்ரமித்து வாசித்துக் கொண்டிருந்தேன் வில் வித்தையை நீங்கள் ( நீங்கள் தான் துரோணரின் மூலமாக) விளக்கிக் கொண்டிருந்த போது.

உள்ளுர அர்ஜுனனின் பயத்தையும் உணர்ந்து கொண்டு இருந்தேன்.

அர்ஜுனனைப் பார்த்து துரோணரே பயந்த சூழல் ஏற்பட, அந்த பயத்தில் பெற்ற பாசத்தினால் பெரிய குரு தட்சணையை கேட்டு விட்டாரே?

பாசம் அறத்தையே கொன்று விடும் வலிமை உள்ளது அல்லவா? அதையே நீங்கள் சொல்வதாக நான் பொருள் கொள்கிறேன். 

அதையே அர்ஜூனனும் உணர்ந்து முதல் மாணவனாக அறிவிக்கப் பட்டாலும் அதிலுள்ள தன் சத்தியத்தால் ஊனமானவனாகவே உணர்கின்றான் அல்லவா?

அருமை ஜெ.

திருதராஷ்டிரன், துரோணர் எல்லோரும் பாசத்திற்கு அடிமையாகி இறுதியில் பேரழிவிற்கு காரணமாக வழி போட்டாயிற்று.

உடம்பு ஆடிப் போயிற்று இன்று எனக்கு.

கடவுளின் அருள் பரிபூர்ணமாக உங்களுக்கு இருக்கட்டும்.

அன்புடன்
மாலா’



அன்புள்ள ஜெ.மோ ஐயா அவர்களுக்கு,
வணக்கம். மகாபாரதத்தில், போர்க்களத்தில் அர்ஜுனன் கொண்டது அறியாமை அல்ல. அது அவனின் ஞானம். அதனினும் சிறந்த ஞானத்தையே கிருஷ்ணன் வழங்கினார் என்று தாங்கள் எழுதியிருப்பதைப் படித்து தெளிவுற்றேன். எனக்கு ஒரு சந்தேகம். கிருஷ்ணன் கெளரவர்களுக்கு தன் படையை ஏன் கொடுத்தார். அவரே அவரின் படைகளின் அழிவுக்குக் காரணமாக ஆகிறார் அல்லவா?
நன்றி,
சங்கர்


அதற்கான விடையை ம்காபாரதத்தை ஒட்டுமொத்தமாக பார்ப்பதன் வழியாகவே அணுக வேண்டும் வாசியுங்கள்

ஜெ