Wednesday, July 9, 2014

துரியோதனன் துச்சாதனன்


மகாபாரதத்தின் கதை சிறு வயது முதலே மிக விருப்பமான ஒன்றாக இருந்தது.  பீமனாக கற்பனை செய்து கொண்ட காலம் ஒன்று இருந்தது. உங்கள் மகாபாரதம்  அற்புதமாக இருக்கிறது, பாத்திரங்களை நுட்பமாக அறிமுகம் செய்கிறது, தத்துவங்கள் , விவரணைகள் ஆர்வத்தை இழுக்கிறது. எல்லாம் புரிந்தது என சொல்லவில்லை, கடைசி பாகம் மிகவும்  தடுமாற வைக்கின்றது, மீண்டும் மீண்டும் படித்து கொண்டு உள்ளேன், புரிந்து கொள்வேன் என நினைக்கின்றேன்.       மிக்க நன்றி.

பாத்திரங்கள் நெகிழ்ச்சி என்று ஒற்றை பரிணாமம் கொண்டு மட்டுமே இருக்கிறதா என்று சந்தேகம் வரும் வேளையில் பீஷ்மர் சத்திரதில் தங்கி கதை கேட்கும் அத்தியாயன் வந்தது, சுமந்திரன் நியாபகம் வந்தது.

 
அன்புடன்
நிர்மல்   



அன்புள்ள நிர்மல்
நன்றி
முதற்கனல் அந்நாவலின் எல்லைக்குள் பலவகையான உணர்வுகளையும் கூறுமுறைகளையும் தொட்டுச்செல்வதுதான்
மகாபாரதம் முழுமையாக வரும்போது மேலும் மேலும் அதன் தளங்கள் வெளிப்படும்
ஜெ


உங்கள் கர்ணனும், சகுனியும், துச்சனும் எப்படி இருக்க போகிறார்கள். அரக்கு மாளிகை எரிப்பு எப்படி இருக்க போகிறது, காந்தாரி என்னும் தாய்மை எப்படி வர போகிறது என்றெல்லாம் பல ஊகங்களை பேசிக் கொண்டு இருந்தோம்.

உங்களுடைய தனிப்பார்வையும், கண்ணோட்டமும் கூறுமுறையும் இது வரை எண்ணியிருந்த மகாபாரதத்தை வேறு வேறு கோணங்களில் யோசிக்க வைக்கின்றது.

இந்து தத்துவ மரபில் முறையாக பயிற்சி இருப்பின் நீங்கள் வைக்கும் நுண்கோணங்களை வாசித்து பொருத்தி கொள்ளலாம், இப்போதைக்கு அந்த தளத்தில் பலவீனமாக இருக்கிறேன். நாட்டார் மரபு, தத்துவ மரபு பற்றியெல்லாம் நீங்கள் இடும் வரிகள் முழுதும் விளங்க எனக்கு நிறைய உழைப்பு வேண்டும். ஜனமஜெயன் யாகத்தில் ஏன் பாம்புகள் விழுந்தன  என்பதை பற்றி எம்.டி,எம் ஓராண்டு முன் கோடிட்டு காட்டினார். அப்போது முழு அம்சமும் புரியவில்லை. இப்போது உங்கள் விளக்கம் அதை பற்றிய இடங்களை நிரப்புகின்றன்.

கதையாக, கதாபாத்திரங்களாக விறுவிறுப்பாக போகிறது. உங்கள் இந்திய பயணம் முழுதும் இந்த கதையின் ஊர்களை தொடுவதை போல் பிரமை.  உணவு, உடை, ஊர், தெரு, வீடு அமைப்பு என விவரிப்பான சித்தரிப்புடன் இருக்கிறது.

நன்றி

நிர்மல்