Monday, July 7, 2014

வெண்முரசு வரைபடங்கள்

அன்புள்ள ஜெ
வண்ணக்கடல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பலமுறை வாசித்துக்கொண்டு செல்கிறேன். ஒருபக்கம் மனிதர்களின் அடிப்படை உணர்ச்சிகளின் கொந்தளிப்பு. ஆதார இச்சைகளின் விளையாட்டு. இதை வாசிக்கும்போது நவீனவாழ்க்கையை முன்வைத்து இப்படி அடிப்படை மானுட எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் எழுதிவிட முடியாதோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது. ஏனென்றால் இதில் மனிதர்கள் கூட மெடஃபர்களாக ஆகியிருக்கிறார்கள். துரோணர் ஒரு கேரக்டர் இல்லை ஒரு மெட்டஃபர். இதேமாதிரி நவீன வாழ்க்கையிலே என்றால் காந்தியோ பெரியாரோ டெண்டுல்கரோ தான் ஆகமுடியும். அவர்களை வைத்து நவீன படைப்பை எழுதமுடியாது. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை எல்லாருக்கும் தெரியும்.காந்தியையோ டெண்டுல்கரையோ ஐநூறு வருடம் கழித்து அன்று எஞ்சியிருக்கும் விஷயங்களை வைத்து நாவலெழுதினால் இது சாத்தியம். அவர்கள் மெடாஃபர்களாக ஆகியிருப்பார்கள் இல்லையா? இத்தனை நுட்பமும் தீவிரமும் உருவாவதற்கு இன்னொரு காரணம் இதில் நேரடியான சமகாலத்தன்மை கிடையாது என்பதுதான் என்றும் தோன்றுகிறது. எல்லாவற்றையும் நீக்கிவிட்டு Id ஐ மட்டுமே முன்வைத்து எழுத வேறு தளமே இல்லை
கூடவே இதிலுள்ள தகவல்களின் வெள்ளம். Novel is an art of manipulating data என்று சொன்னவன் வாழ்க. பண்டைய வாழ்க்கைமுறை, சாதியடுக்குகள், வியாபாரம், சாப்பாடு, சாலைகள், நகரங்கள், நதிகள்…நீங்கள் இந்த வண்ணக்கடலில் குறிப்பிடும் நகரங்களை அடையாளம் காண ஒரு நல்ல மேப் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது
சண்முகம்
அன்புள்ள சண்முகம்
வரைபடம் கொடுப்பதில் ஒரு தயக்கம். அதைவைத்து ஒரு விவாதத்துக்கு நான் இப்போது தயாராக இல்லை. இருந்தாலும் இரு பிரபலமான வரைபடங்களை அளிக்கிறேன். பெரும்பாலும் ஊகத்தின் அடிப்படையில் போடப்பட்டவை. ஆனால் ஓர் எளிய சித்திரத்தை அளிப்பவை
ஜெ