Monday, July 7, 2014

மழைப்பாடல் மனங்களின் உடல் - ராமராஜன் மாணிக்கவேல் கடிதம்

ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

தேவர்கள் பற்றியது வாசுகியின் தலையையா? வாலையா? என்று கேட்டு இருந்தேன். இது பெரிய அபத்தமாக இருக்குமோ என்ற ஐயத்துடனேயே இந்த வினாவை எழுப்பினேன். அறியாமையை வெளியிடுவதை விட அறியாமையை சுமப்பது பெரும் சுமை. அதை வெளியிடும்போது அறியாமையை வெளியிடுகின்றோம் என்பதை அறியா அறியாமையோடு இருப்பதுதான் பெரிய சோகமாகப்படுகிறது. நம்மிடம் இருப்பது அறியாமை என்பது அறிந்துக்கொள்ளும் வரை அறியமுடியவில்லை. உங்கள் விளக்கங்களுக்கு நன்றி!
அந்த ஹைக்கூவில் வண்ணத்துப்பூச்சி முள்மேல் அமர்ந்ததே இந்த ஹைக்கூவில்அது எப்படி கம்பளத்திலுள்ள பூவில் அமரமுடியும்” இந்த உவமை வரும்வரை எனக்கு அந்த கேள்வியின் அபத்தம் புரியவில்லை. செக்கில் கட்டப்பட்ட மாடுபோல அந்த இடத்தையே சுத்தி சுத்தி வந்தேன். கழுத்தில் வைக்கப்பட்ட நுகத்தடியே பிரதானம் என்றுப் பட்டது. காலமலர்களில்   சூழலை சிறகாக்கி தேன்குடிக்கும் வண்ணத்துப்பூச்சியாக மாற்றியதற்கு நன்றி!

அசுரர்களின் மூக்கிலிருந்தும் வாயில் இருந்தும் நுரைகொட்டியதுதேவர்கள்மும்மூர்த்திகளையும் கூவி அழுதனர்.
உங்கள் பதிலுக்கு பின்பே தேவர்கள் தலைப்பகுதியில் நின்றதும். சிவன் விடம் உண்டதும் விளங்குகின்றது. எடுத்த செயலில் எங்கிருந்தாலும், விஷம் விழும் இடத்தில் நின்றாலும் இறைவனை அழைப்பவர்கள் ஒரு தருணத்தில் காக்கப்பட்டு செயலின் பயனை அடைகின்றார்கள். பாதுகாப்பான இடத்தில் நின்றாலும் தனக்குமேல் ஒரு சக்தி இல்லை என்று நினைப்பவன் அந்த செயலின் அத்தனை தாக்கத்தையும் அனுபவித்து உருகுலைந்து செயலின் பயனையும் அடையாமல் போய்விடுகின்றான் என்று விரிந்து போகின்றது அந்த காட்சி. மீண்டும் நன்றி.

எங்களிடம் இருப்பது எல்லாம் வெறும் கல்வார்த்தைகள் எங்களுக்குள் இருக்கும் வரை எங்களுக்கு கனக்கும், எறியும்போது உங்களுக்கு வலிக்கும் அறிகின்றோம். பொருத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் வார்த்தைகள் எல்லாம் மலர்கள் உங்களுக்கும் இருக்கும்போதும் வாசம், தேன் எங்கள் மீது தூவும்போதும் வாசம், தேன். ஒவ்வொரு இதழாக விரியும்போதும் அது பூக்காடாகிறது.

கவிதை எல்லாம் என்னங்க? எப்படி எழுதறது? எப்படிப் படிக்கிறது? என்று  பொறியியல் படித்த நண்பன் கேட்டபோது இமயமலையை சம்மட்டியாக தூக்கி யாரோ தலையில் அடித்ததை உணர்ந்தேன். சொல்லொன்றும் இல்லாத எனக்கே இப்படி என்றால் சொல் கனிந்த வனமாகிய உங்களுக்கு எப்படி இருக்கம் எங்கள் கேள்விகள் உணரமுடிகின்றது.

பலர் உங்களிடம் ஏன் மகா பாரதம் மீண்டும் எழுதுகின்றீர்கள் என்று கேட்கும்போது எனக்கு பற்றிக்கொண்டு வருகிறது. மகாபாரதத்தை நீங்கள் எழுதவேண்டும் என்று பலநாள் நான் நினைத்திருக்கிறேன். காரணம் என்ன வென்றால் தங்கக்கட்டியை எவ்வளவு வைத்திருந்தாலும் பெறமுடியாத ஒரு மகிழ்ச்சியை, எழுச்சியை, களிப்பை, பரவசத்தை அணிமணிகள் தருகிறது. அதுவும் அந்த தங்கம் உருக்கப்பட்டு கைவண்ணம் மிக்க பொற்கொல்லனால் அணிஆபாரணம் ஆகும்போது. அதைப்பார்ப்தே ஒரு பரவசம். அணிவது தொடாத்தூரத்தைத் தொட்ட எழுச்சியை வரம் அருள்கிறது.

உங்களின் பத்மவியூகம்தான் நான் முதலில் படிக்கநினைத்த மகாபாரதக்கதை. படித்த பலராலும் முன்மொழியப்பட்ட சிறந்த படைப்பு. படித்ததோ தீ அறியும் (கிளிசொன்னக்கதைகள்) கதையில் வரும் தாட்சாயணி கதை. தந்தையின் உள்ளக்கிடக்கையும், பெண்ணின் பாசத்தை, காதலை, சுயத்தை, பரிதவிப்பை சொல்லும் அனைத்து மகத்துவத்தையும் ஒளியில் செதுக்கி, தீப்பூசி வைத்ததுபோல தொடமுடியாமல், விளகமுடியாமல் கவர்ந்துக்கொண்டே இருந்தது. பின் களம், அதர்வம், பத்மவியூகம், நதிக்கரையில், வடக்குமுகம். பதுமை என்று ஒவ்வொன்றாகப் படிக்கும்போது இப்படியே தனித்தனியாக மொத்த மாகபாரதத்தையும் எழுதிக்கொண்டே இருக்கமாட்டீர்களா? என்று ஏங்கியது உண்டு. மாகபாரதத்தின்மேல் இந்த தீராமோகம் வந்ததுக்கு காரணம். மனம் எத்தனைக் கற்பனைக்கொள்கிறதோ அத்தனை கற்பனையையும் நிஜமனத்தின் வடிவத்தில் காட்டும் ஒரு காவியம் மகாபாரதம் மட்டும் என்பது எண்ணம்.   மனதை மட்டுமே ஒரு சிற்பமாக வடிக்கும் மகத்துவம் மிகுந்த காவியம் மகாபாரதம் என்று நினைக்கிறேன்.  அதன் அலையாடல் ஒய்வதும் சலிப்பதும் இன்றி இயங்கும் மாக்கடலாகவே எனக்குப்படுகின்றது. மகாபாரதம் ஒரேஒரு காவியம் என்று நினைக்கமுடியாத அளவுக்கு ஒவ்வொரு மனத்திலும் ஒரு காவியமாக படர்ந்து பூத்திருப்பதுபோல தெரிகிறது.

ஞானம் எப்படி மதத்தில் அடங்காதோ? அப்படியே இந்த காவியமும் மதத்தில் அடங்காது. உடம்புக்கு வடிவம் இருக்கு அந்த உடம்புக்குள் இருக்கும் மனதின் வடிவம் என்ன? அது அந்த உடம்பு கொள்ளும் பெயருக்கு தக்க பெயர் உடையதாகிவிடுமா?

“அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு” –திருக்குறள் என்னும் உடம்புக்குள் இருக்கும் இந்த “ஆன்மா” திருக்குறள்மட்டும்தானா?

”தட்டுங்கள் திறக்கப்படும்” பைபிலின் உடம்புக்குள் இருக்கும் இந்த “ஆன்மா” பைபிலுக்கு மட்டும்தானா?
”நீயே உனக்கு ஒளியாவாய்” புத்தத்துக்கு மட்டும்தானா?

உடம்பு அதன் வரம்புக்கு உட்பட்டுதான் விரியும் இல்லை என்றால் சிதையும், மனம் விரிவதும், சுருங்குவதும் எல்லை இல்லா தன்மையோடுதானே.

மகாபாரதம் முழுவதும் மனங்களால் உருவாக்கப்பட்ட உடல் அதை உங்களைப்போன்றவர்கள் இன்னும் பெரிய அளவுக்கு விரிவுப்படுத்திப் பார்க்கமுடியும். வாசகர் கைகளுக்கு கொடுக்கவும் முடியும். இதை செய்யும் உங்கள் இதயம் முழுவதும் உற்சாகத்தால் வியாசன் நிரப்பட்டும். தமிழ் அன்னை தலைக்கோதட்டும்.
நன்றி
வாழ்க வளமுடன்
அன்புள்ள
ஆர்.மாணிக்கவேல்.