Monday, July 7, 2014

முதற்கனல்-கனவுப்புத்தகம்- கேசவமணி


கடந்த ஒரு வாரமாக ஜெயமோகனின் முதற்கனல் நூலில் மூழ்கித் திளைத்திருந்தேன். முதற்கனலின் ஒரு அத்தியாயத்தைக்கூட நான் இணையத்தில் படிக்கவில்லை. தொடராக எதையும் வாசிப்பது என்னால் ஆகாத ஒன்று. நாவலில் எங்கே எந்த இடத்தில் நிறுத்த வேண்டும், மேற்கொண்டு படிக்கவேண்டும் என்பதை வாசகன்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் இணையத்தில் ஒரு புத்தகத்தை அவ்வளவு நெருக்கமாக உணரமுடியாது எனவே ஆழ்ந்து நுட்பமாக வாசிக்க இயலாமல் போய்விடும். 

நாவலை வாசித்துவந்த ஏழு நாட்களும் அற்புதப் புனைவின் வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். வாசித்து முடித்ததும் நான் யார்? என்று என்னைக் கேட்டுக்கொள்ளவில்லை மாறாக நானே இல்லாமலாகிவிட்டேன். பீஷ்மராக, விசித்திரவீரியனாக, சத்தியவதியாக, அம்பையாக, சிகண்டியாக வாழ்ந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

நாவலின் மூன்று விசயங்களைப் பற்றி சொல்லவேண்டும். முதலில் ஜெயமோகனின் சொல்லாடல்கள். என்னை கவர்ந்த, ஈர்த்த விசயம் அது. எத்தனைவிதமான சொல்லாடல்கள். கற்பனையின் உச்சமாக அவற்றைச் சொல்லலாம். 
  • அம்பு விடுபட்ட வில்லின் நிம்மதி. 
  • பல்லக்கில் பிணம் இருப்பதுபோல என் நெஞ்சில். 
  • அழுக்கு மீது குடியேறும் மூதேவி என. 
  • கண்கள் பழுத்த அரசிலை போல. 
  • கதவு மூடிக்கொண்டது மூழ்கியவள் தலைமேல் நீர்போல. 
  • இலை நுனியில் கனக்கும் நீர்த்துளிபோல. 
  • படகு நீளமான அகல் விளக்கு போல. 
  • யானைகள் அலைகளில் கரியநாவாய்கள் போல. 
  • கீழ்வாயுவை வெளியேற்றிய உடலின் நம்மதி. 
  • வானிலிருந்து ஒளித்துருவல்களாக மென் மழை. 
  • வெண்காளான்கள் பூத்துப்பரவியது போல கொக்குகள். 
இன்னும் இப்படி ஏராளமான வாக்கியங்கள் நாவல் முழுதும் நிறைந்திருப்பதை நாம் காணமுடியும். இவைகள் நம் கற்பனையை விரித்தெடுத்து நம்மை நாவலுடன் ஒன்றவைக்கிறது.

இரண்டாவதாக, காட்சிகளின் சித்தரிப்புகள். வார்த்தைகளும் வாக்கியங்களும் உருக்கொண்டு அவைகள் நம் மனதில் ஏற்படுத்தும் மனக்காட்சிகள் கிளர்ச்சியையும், அழகையும் ஊட்டுபவை. திரைக்காட்சிகளுக்கு நிகரான பிம்பத்தை அவைகள் நம் மனதில் ஏற்படுத்துகின்றன. மகுடிக்குக் கட்டுண்ட நாகமாக நாம் அவற்றின் பின்னே செல்கிறோம்.

உதாரணமாக பின்வரும் சித்தரிப்பு நம்முள் எத்தகைய கற்பனைய அளிக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்:

“அறியாத யட்சி ஒருத்தி தன் தோளில் அவளைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோலிருந்தது. அரண்மனைத் தூண்களெல்லாம் விறைத்து நிற்பதுபோல, சுவர்கள் திரைச்சீலைகளாக மாறி அலையடிப்பதுபோல, கூரை அந்தரத்தில் பறந்து நிற்பதுபோல. இரவு துளித்துளியாக தேங்கித் தயங்கிச் சொட்டியது. வெளியே அறுபடாத நீண்ட சில்வண்டு ஒலியில் அத்தனை ஒலிகளும் கோர்க்கப்பட்டிருந்தன. மௌனமாக வந்து முகர்ந்துநோக்கும் கரடிபோல கரியவானம் அரண்மனைமுகடில் மூக்கு சேர்த்து வெம்மூச்சுடன் குனிந்திருந்தது.”

“காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நின்றாள். கைகள் நெற்றிக்குழலை நீவ, கழுத்து ஒசிந்தசைய, இடை நெகிழ, மார்பகங்கள் விம்ம, இதோ நான் என.”

காட்சிகளின் சித்தரிப்பு மனதுக்கு எனில் நாவலில் எழும் விவாதங்கள், உரையாடல்கள் நம் அறிவுக்கு உணவாவதை மூன்றாவதாகச் சொல்லலாம். நம் சிந்தனைகளை அவை வளர்த்தெடுகின்றன. நமக்குள் எழும் பல கேள்விகளுக்கு அவைகள் பதிலாகின்றன. ஆனால் அந்த பதிலிலிருந்து மேலும் பலகேள்விகளை மனம் கேட்டுக்கொள்கிறது. அவற்றைக் கண்டடையும் விதமாக நாம் நாவலில் மேலும் மேலும் பயணிக்க தூண்டப்படுகிறோம்.

ஓரிடத்தில், கர்ப்பத்தில் எத்தனைவிதமான கர்ப்பங்கள் இருக்கிறது என்றும், அவற்றுக்கான அறிகுறிகளுமாக அவர் சொல்லும் கருத்துகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. எத்தகைய ஆராய்ச்சிக்கும் ஆய்வுக்கும் பிறகு ஜெயமோகன் மகாபாரதத்தை எழுதத் தலைப்பட்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அதேபோல உணவுகள் சமைக்கப்படும் விதத்தையும் மதுவகைகள் தயாரிக்கப்படுவதையும் அவற்றின் குணத்தையும் பல இடங்களில் நுட்பமாகக் காட்டியிருக்கிறார் ஜெயமோகன். அறிவியல் பூர்வமான இத்தகைய ஏராளமான விசயங்கள் நாவல் முழுதும் நாகங்களின் படமென படர்ந்து விரிந்திருக்கிறது.

வாசிப்பில், இவையனைத்தும் பின்னிப் பிணைந்து பெரும் நாகமாக உருக்கொண்டு நம்மை விழுங்கிவிடுகிறது. அதனுள்ளே நாம் இன்னும் பல அதிசயங்களையம், அற்புதங்களையும் காண்கிறோம். நாவலைப் படிக்கப்படிக்க வெறும் கதையாக மட்டுமே நாம் அறிந்திருந்த மகாபாரத்தின் பல நுட்பங்கள் ஜெயமோகன் எழுத்தில் துலங்குகின்றன. மலை உச்சியிலிருந்து திரண்டுவரும் நீரெனெ, மலை இடுக்கில் கசிந்தொழுகும் நீரென ஜெயமோகன் நடை தடங்களில்லாமல் நாவலில் புரண்டு, உருண்டு, ஆர்ப்பரித்துச் செல்கிறது. அதைப் பின்தொடர்வது நமக்கு ஓர் சுகமான அனுபவம்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாகத் தெரியும் மகாபாரதக் கிளைக்கதைகள் நாவலில் ஓர் ஒழுங்குடனும் ஒழுக்குடனும் தொடர்ந்து வந்து, அவற்றின் அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறது. மனித மனங்களில் உறைந்திருக்கும் எண்ணற்ற உணர்வுகளையும், அதன் சிக்கலான எண்ணற்ற முடிச்சுகளையும் கேள்வியாக்கி நம்முன் வீசுகிறார் ஜெயமோகன். அவற்றின் மோனத்தில் நாம் கட்டுண்டு கிடக்கிறோம். நாகத்தின் விசம்போல் அவைகள் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தி அமிழ்த்தி விடுகின்றன.

அரசாங்கம் என்பது மன்னர்கள் இன்பத்தில் மூழ்கித் திளைத்து உல்லாசமாக வாழ அல்ல. அது மிகப்பெரிய பொறுப்பு. நாட்டையும் மக்களையும் காப்பதற்காக அரசர்கள் எதையும் தியாகம் செய்யத்தயாராய் இருக்கவேண்டும் என்பது நாவலில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்தைக் காக்க ஒரு பெண் எத்தகைய முயற்சிகளையும், சிரமங்களையும் படுகிறாளோ அத்தனை சிரமங்களையும், அதைவிடவும் அதிகமாக, தன் நாட்டைக்காக்க சத்தியவதி படாத பாடுபடுகிறாள். வம்சத்தின் வளர்ச்சி என்பதும் நீட்சி என்பதும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. நம்மின் எச்சமாக மிஞ்சியிருக்கப்போவது நமது சந்ததிகளன்றி வேறில்லை என சத்தியவதி எடுக்கும் முயற்சிகள் நமக்கு அறிவுறுத்துகிறது.

சந்தனு வெறும் ஆசைப்பட்டு, காமவயப்பட்டு கங்கையை மணம்புரியவில்லை. மாறாக தன் குலத்தின் வம்சக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றுதான் மணம் செய்கிறான். ஆனால் விதி விளையாடி விடுகிறது. நோயுற்ற விசத்திரவீரியன்தான் மிஞ்சுகிறான். நோயுற்ற அவன் உலகின் அழகை வியந்து சொல்வது அழகான சித்தரிப்பு. மரணம் அவனுக்கு ஒரு விளையாட்டாகிவிடுகிறது. மரணத்தைக் கண்டு அஞ்சாதவன்தான் இந்த உலகை அதன் அழகை ரசிக்க முடியும். 

விசித்திரவீரியன் ஸ்தானகரிடம் சொல்கிறான்:

“காலையொளி பளபளக்கும் இலைகள். இளங்காற்றில் மகரந்தபீடம் குலையும் மலர்கள். காற்றில் சிறகுகள் விசிறிய பறவைகள். எவ்வளவு வண்ணங்கள் ஸ்தானகரே…. ஒருபறவையின் சிறகிலேயே எத்தனை வண்ணங்கள்! ஒவ்வொரு வேளையிலும் அவை மாறுபட்டுக் கொண்டிருக்கின்றன…. இவ்வுலகம் வண்ணங்களின் பெருக்கு. ஒலியின் பெருக்கு. மணங்களின் பெருக்கு. சுவைகளின் பெருக்கு….ஸ்தானகரே புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால் அறிய முயல்வது. ஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடி புலன்கள் தேவை.” 

இவ்வாறு அவன் சொல்வது ஒப்பற்ற உண்மை. ஒப்பற்ற பேரறிவு. நோயுற்றவர்களுக்கு புலன்கள் மிகக் கூர்மையடைந்து விடுவதுண்டு. எதையும் அவர்கள் தங்கள் உடலோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறார்கள். அப்படியான ஒரு தருணத்தில்தான் விசித்திரவீரியன் இவ்வாறு பேசுகிறான்.

பீஷ்மர் சத்தியவதி சந்திப்புகள் அனைத்தும் ஜெயமோகனால் அற்புதமாக புனையப்பட்டிருக்கிறது. ஒருவர் மனத்தை மற்றவர் அறிந்தது போன்ற அந்த உரையாடல்கள் நாம் திரும்பத் திரும்ப படித்து ரசிக்கவேண்டியவை. அனல் பறக்கும் பீஷ்மர் அம்பை சந்திப்பும் அவ்வாறானதே. ஒவ்வொரு முறை சத்தியவதியின் முயற்சிகள் தோற்பதும். அவள் மீண்டும் மீண்டும் பீஷ்மரை நாடுவதும் பிறகு தன் காரியம் கைகூடியதும் அவரை வெளியேற்றிவிடுவதும் நாவலில் மிக சிறப்பாக புனையப்பட்ட புனைவுகள். வெளியேறிய பீஷ்மர் கங்கபுரி செல்வதும், வழியில் மதுவருந்தி மயங்கிக் கிடப்பதும், பின் ஆற்றின் கரையோரம் பாறையொன்றில் தனிமையில் அமர்ந்து கங்கையைப் பார்த்திருப்பதும், அவரின் தனிமைத் துயரை வெளிப்படுத்தும் அற்புதமான பகுதிகள். ஒரு பெரும் இருள்போர்வையாக தனிமை அவரைச் சூழ்ந்து, அவர் மனதைக் கலங்கடிக்கிறது.

பீஷ்மரை மட்டுமல்ல வியாசரையும் சத்தியவதி தன் வம்சத்தின் விருத்திக்காக பயன்படுத்திக்கொள்கிறாள். தன் பணி முடிந்ததும் கிளம்பிச் செல்லும் அவர் சாத்தன் எனும் துறவியை வழியில் சந்திக்கும்போது அவரிடம், “நான் செய்த எல்லாம் சரியே என்று வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது” என்று வியாசன் சொல்வது நம்மை அதிரச்செய்வது. அந்த வரிகள் நம்முள் ஏற்படுத்தும் மன அதிர்வுகள் அபரிமிதமானது.

இதேபோன்ற பின்வரும் கருத்தை பீஷ்மரிடம் விசித்திரவீரியனும் இவ்வாறு சொல்கிறான்:

“மூத்தவரே, பெரும்பாவங்களுக்கு முன் நம் அகம் கூசவில்லை என்றால் எதற்காக நாம் வாழவேண்டும்? எனக்குத் தெரியவில்லை. அறமென்ன பிழையென்ன ஏதும் நானறிந்ததில்லை. இருந்துகொண்டிருப்பதே வாழ்க்கையென இதுநாள் வரை வந்திருக்கிறேன். இன்னும் எத்தனை நாட்களென அறியமாட்டேன். இந்த மெலிந்த தசைகளில் நின்று துடிக்கும் உயிரின் நோக்கம்தான் என்ன? இதன்வழியாக சென்றுகொண்டிருக்கும் ஆன்மாவின் இலக்கு என்ன? தெரியவில்லை….”

பின்னர் நிகழப்போகும் எத்தனையோ நிகழ்ச்சிகளை அறிந்தவனாக விசித்திரவீரியனின் இப்பேச்சு இருக்கிறது. அம்பிகை அவனிடம் நெருக்கமானதுபோல் நாமும் அவனுடன் நெருக்கம் கொண்டுவிடுகிறோம். அவன் மரணம் நம் மனதில் ஆழ்ந்த துயரத்தையும், இரக்கத்தையும் ஏற்படுத்துகிறது. ஒற்றை வாக்கியமாக மட்டுமே நாம் அறிந்திருந்த விசித்திரவீரியன் பாத்திரத்தை நம் நெருக்கமான உறவின் இழப்பாகக் காட்டியிருக்கிறது ஜெயமோகனின் எழுத்து.

அம்பை மற்றும் சிகண்டியின் பாத்திரத்தின் சித்தரிப்புகள் அபாரமானவை. அவர்களின் மனோதிடம், வலிமை நம்மை அச்சம் கொள்ளவைக்கிறது. அந்த அச்சம் பரிதாபமான ஒரு உணர்வாக பீஷ்மர் மேல் படிகிறது. மூன்று பேரின் மூன்றுவிதமான உணர்வுகள் நாவலில் பிரதானமாக இருக்கிறது. பீஷ்மர், சத்தியவதி, அம்பை ஆகி மூவரின் உணர்வுகளே அவை. இவர்கள் அனைவரும் தன்னளவில் நான் செய்வதே சரி என்ற கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதைவிட காலத்தின் கைப்பாவையாக அவ்வாறாக இயங்குகிறார்கள் என்பது சரியாக இருக்கும்.

பீஷ்மரின் தனிமையும் துயரமும் அவரை மட்டுமல்ல நம்மையும் வாட்டுகிறது. சத்தியவதியின் கடமை உணர்வு அவளை ஓடஓட விரட்டுகிறது. எப்படியேனும் எதையேனும் செய்து நாட்டைக் காக்கவேண்டிய பெரும் பொறுப்பு அவளை சதா அலைக்கழிக்கிறது. அந்த அலைக்கழிப்பில் நாமும் உருள்கிறோம். அம்பையின் கோப உணர்வு கனலாக தகிக்கிறது. அதன் வெம்மை நம்மையும் சுடுகிறது. எனவே பீஷ்மராகவும், சத்தியவதியாகவும், அம்பையாகவும் வாழ்ந்த உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

ஜெயமோகனின் முதற்கனல் ஒரு கனவுப் புத்தகம். கனவுகள் விசித்திரமானவை. ஆனால் காலையில் எழுந்ததும் அவைகள் மறந்துவிடுகின்றன. எவ்வளவுதான் முயற்சித்தாலும் கனவை முழுமையாக நினைவுக்குக் கொண்டுவர முடியாது. முதற்கனலை படிக்கலாம். ரசிக்கலாம். வியக்கலாம். ஆனால் முடித்த பிறகு மனம் வெறுமையாகிவிடுகிறது. படித்த எல்லாவற்றையும் தொகுக்கும் முயற்சியில் மனம் தோற்றுப்போகிறது. எனவே மீண்டும் நாவலை வாசிக்க ஆவல் எழுகிறது. எனவேதான் அதைக் கனவுப் புத்தகம் என்கிறேன். அதுமட்டுமல்ல செம்பதிப்பின் கட்டமைப்பும், அச்சும், படங்களும் நேர்த்தியாக அமைந்து இப்படி ஒரு புத்தகத்தை இதுவரை கண்டதில்லை என்ற உணர்வாலும் இது ஒரு கனவுப் புத்தகமாகிறது.

நான் மாகபாரதத்தை முழுமையாகக் கற்றவனல்ல. இருந்தும் மகாபாரதத்திலிருந்து எவ்வளவு தூரம் ஜெயமோகன் தன் கற்பனையின் வீச்சைக் காட்டியிருக்கிறார் என்பதை உணரவும் அறியவும் முடிகிறது. இனி மகாபாரதம் என்று சொல்லும்போது ஜெயமோகன் பெயரும் சேர்த்தே உச்சரிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எந்த இந்திய மொழியிலும் இல்லாத ஒரு சாதனை இது.

கண்முன் நாம் காணும் கடல் பிரம்மாண்டமானது. அதன் ஆழம் நம் கற்பனைக்கெட்டாதது. கரையில் நின்று பார்க்கும்போது நம் கால்களை வந்து நனைத்துச் செல்லும் நீரெனெவே நான் முதற்கனலைப் பார்க்கிறேன். அதுவே பரவசத்தைத் தருகிறது என்றால், கடலில் இறங்கி அதன் ஆழத்தையும் அதிசயங்களையும் காட்டப்போகும் அடுத்தடுத்த பகுதிகளுக்காக மனம் ஏங்குகிறது.
- See more at: http://kesavamanitp.blogspot.in/2014/04/blog-post_26.html#sthash.xKBFc4X1.dpuf