Saturday, July 12, 2014

நாகம்,ஓவியங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

முதற்கனல் 13ல்  “அதன் தலையை தேவர்களும் வாலை அசுரர்களும் பற்றிக்கொண்டனர்”  என்று வருகிறது. தலையை அசுரர்களும், வாலை தேவர்களுமல்லவா பற்றிக் கொண்டனர்? அதனால்தானே விஷம் வெளிவந்தபோது அசுரர்கள் பாதிக்கப்பட்டனர்?

http://venmurasu.in/2014/01/13/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-13/

மேலும் வாசுகி என்பது பெண் நாகத்தை குறிக்கிறது என்று எண்ணியிருந்தேன். வெண்முரசை படித்தபிறகு இணையத்தில் தேடும்போது சிலவற்றில் பெண் என்றும், சிலவற்றில் ஆண் என்றும் குறிப்பிடப்படிருக்கிறது. (சோவின் “மஹாபாரதம் பேசுகிறது”வும் ஆண் என்றே குறிப்பிட்டதாக ஞாபகம்)


அன்புடன்,
கணேஷ்.

அன்புள்ள கணேஷ்

வாசுகி அரவுகளின் அரசன். அது தெளிவாகவே மகாபாரதத்தில் உள்ளது

ஜெ



ஐயா,
      இன்று தான் தங்களின் மழைப்பாடலை முழுமையாகப் படித்து முடித்தேன்.
       என்னுள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும் துக்கமும் நிறைந்துவிட்டன. இது தான் நான் வாசிக்கும் முதல் உணர்வு பூர்வமான இலக்கியம்.
      பாண்டுவின் தந்தையுணர்வும் மாத்ரி மற்றும் குந்தியின் பேறுகால நினைவுகளும் என்னை உலுக்குகின்றன. கல்யாணம் கூடாது என்ற எண்ணம் உடைய எனக்கு எப்படியாவது தந்தை ஆகி குழந்தைகளைக் கொஞ்ச  வேண்டும் என்ற உணர்வே மேலோங்குகிறது.  ஏன் ஒரு பெண்ணாகப் பிறக்காமல் போய்விட்டோமே என்றும் வருந்துகிறேன்.
      இவை இரண்டும் தான் என்னை மிக உலுக்கிவிட்டன.
      மற்றபடி அனைத்து கதைமாந்தர்களின் சித்தரிப்பும் மிக அருமை; ஒவ்வொரு வர்ணனையும் அந்த நிகழ்வை கண்முன் நிகழ்த்திக் காட்டுகிறது.
      சண்முகவேல் ஐயாவின் ஓவியங்கள் அருமையோ அருமை; பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டுகின்றன அனைத்து ஓவியங்களும். என்னுடைய மடிக்கணினியிலும் சரி அலைபேசியிலும் சரி வெண்முரசின் ஓவியங்களே சுவரோவியங்களாக (wallpaper slide-show) அலங்கரிக்கின்றன. அவற்றின் மூலம் நான் இக்கதையினூடாகவே வாழ்வது போன்ற ஓர் உணர்வு உள்ளது. மிக்க நன்றி.
       ஒரே ஒரு ஐயம் ஐயா, ஒரு பகுதிக்கு ஒரு ஓவியம் மட்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால், எதைக் கொண்டு இந்தக் காட்சியை ஓவியப்படுத்தலாம் என்று முடிவெடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சில இடங்களில்  இதையும் ஓவியமாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆகவே ஓவியங்கள் ஒரு பகுதிக்கு ஒன்றுக்கு மேலும் வைக்கலாம் அல்லவா.
     நன்றி ஐயா.


அன்புள்ள தினேஷ்

ஓவியங்களை ஏ.வி.மணிகண்டன் என்ற நண்பரும் ஷண்முகவேலும் சேர்ந்து முடிவுசெய்து வடிவம் கொடுக்கிறார்கள். அது இணையத்தில் ஏறியபின்னரே நான் பார்க்கிறேன். அது ஒரு தனி படைப்புக்கோடு

ஜெ