Saturday, August 2, 2014

வாசகர்கள் யார்?

அன்புள்ள ஜெமோ

என் நண்பர்களில் பலர் உங்களுடைய இணையதளத்தை வாசிப்பவர்கள். ஆனால் அவர்களில் வெண்முரசை வாசிப்பவர்கள் யாரும் இல்லை.. நான் வெண்முரசைப்பற்றி பேச ஆளில்லாமல் அவர்களிடமே பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆதங்கம் எல்லாம் தமிழில் உண்மையில் பெரிய அளவில் இலக்கியம் என்று எவரும் எழுதுவதில்லை. ஒரு வருசத்தில் நாலைந்து புத்தகங்கள் வருவதுகூட கம்மி. இருந்தும் இவ்வளவு உச்சமாக ஒரு எழுத்து வந்துகொண்டிருக்கையில் ஏன் வாசிக்கமாட்டேன் என்கிறார்கள் என்பதுதான். என் வருத்ததை தெரிவிக்கவே இதை எழுதினேன்

ஜெயராமன்


அன்புள்ள ஜெயராமன்

என்னுடைய நெருக்கமான குழும நண்பர்களிலேயே பலர் வெண்முரசு வாசிப்பதில்லை. அதில் எனக்கு ஏமாற்றமும் இல்லை. நான் அதை எதிர்பார்த்தே இருந்தேன்

எதிர்பாராதது வெண்முரசுக்கு இருக்கும் விரிவான வாசிப்புதான். என் தளத்தின் அளவு ஐந்துமடங்கு பெருகியிருக்கிறது. மும்மடங்கு செலவில் இரண்டு சர்வர்களை வாங்கி இணைத்து இதை விரிவாக்கியிருக்கிறோம்

வெண்முரசு இணையத்தளத்திலும் கணிசமானவர்கள் வாசிக்கிறார்கள். ஏன், இந்த விவாதத்தளத்துக்கே தினம் ஆயிரம் பேர் வருகிறார்கள். உலகமெங்கும் ஒவ்வொருநாளும் வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் கடிதங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழில் இந்த அளவுக்கு தீவிர இலக்கியம் எப்போதுமே பரவலாக வாசிக்கப்பட்டதில்லை. வெண்முரசு எளிய வாசிப்புக்குரியது அல்ல. கூர்ந்த கவனம் இல்லாமல் வாசிக்கமுடியாது. இருந்தும் இத்தனை ஆயிரம்பேர் வாசிப்பதென்பது திகைக்கவைக்கும் விஷயம்.

வெண்முரசு வாசிக்காத நண்பர்கள் என்னிடம் பெரும்பாலும் நேரமில்லை என்ற காரணத்தையே சொல்வார்கள். நானும் அதை வலியுறுத்திக் கேட்பதில்லை. ஆனால் தினம் இரண்டுமணி நேரம் இணையத்தில் மேய்பவர்கள், தினம் மூன்றுமணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பவர்கள்.

நேரம் அல்ல பிரச்சினை. தினசரி தொடர்கள் தொலைக்காட்சியில் பலகோடிப்பேரால் இங்கே பார்க்கத்தான் படுகின்றன

பிரச்சினை கவனம்தான். இணையத்தின் அன்றாட வம்புவழக்குகளில் சிக்குபவர்கள், பல விஷயங்களைத் தொட்டுத்தொட்டு மேய்ந்துசெல்பவபர்கள் வெண்முரசு போன்ற கவனம் தேவைப்படும் ஒன்றை வாசிக்கமுடியாது

அதாவது காலையில் கண் விழித்ததுமே கம்ப்யூட்டரைத் திறந்து ஃபேஸ்புக் பக்கத்தை திறப்பவர்களால் வெண்முரசை வாசிக்கமுடியாது. வெண்முரசை அல்லது வேறு ஏதேனும் ஒரு கனமான நூலை திறப்பவர்களாலேயே வாசிக்கமுடியும்

இது உண்மையில் ஒரு சர்வதேசப்பிரச்சினையாக உருவாகி வந்துகொண்டிருக்கிறது. இணையம் கோரும் மேலோட்டமான கவனத்துக்குப் பழகியபின் கூர்ந்த கவனம் செலுத்தமுடியாமலாகிறது. பொறுமையின்மை உருவாகிவிடுகிறது

இணையத்தில் அலைபவர்கள் பல  சாளரங்களைத் திறந்து வைத்து மாறி மாறி ஒரேசமயம் உலவிக்கொண்டிருக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. இது  தொடர்ந்த வாசிப்பு, ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி சிந்தனையை விரித்துக்கொண்டுசெல்லும் பழக்கம், நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது. அவ்வக்கணத்தில் வாசித்து அப்படியே மறந்து அடுத்ததற்குச் செல்லும் மனநிலைஅயி உருவாக்குகிறது.

அதாவது ஒருவர் இணையப்பக்கத்தைத் திறந்ததுமே அதன் நீளத்தை ஸ்கோல் செய்து பார்ப்பவர் என்றால், ஒரே சமயம் பல சாளரங்களைத் திறந்து வைத்து ஓரிரு பத்திகளுக்கொருமுறை அங்குமிங்கும் சென்று வருபவர் என்றால் அவருக்குரியதல்ல வெண்முரசு

என் இணையப்பக்கமும் சரி, வெண்முரசும் சரி, இணையத்தின் பொதுவான போக்குக்கு நேர் எதிர்த்திசையில் செல்லக்கூடியவை. ஆகவேதான் நீளமான , அடர்த்தியான விஷயங்களை அளிக்க நான் தயங்குவதில்லை. இது இணையத்தின் வடிவில் கிடைக்கும் ஒரு சிற்றிதழ்தான். எதிர்வினைப் பக்கத்தைக்கூட அதனாலேயே வைத்துக்கொள்ளவில்லை. எதிர்வினை ஆற்றுவதாக இருந்தால் கடிதம்தான் போடவேண்டும்

இதற்கு வரும் வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் மிக இளைஞர்கள்.  2010க்குப்பின் வாசிக்க வந்தவர்கள். [ஆகவேதான் மறுபிரசுரங்கள்] இணையத்தின் அர்த்தமற்ற மேலோட்டத்தன்மை அவர்களுக்குச் சலிப்பூட்டியிருக்கிறது.

அந்தச் சலிப்பை அடைந்தவர்களுக்கு வெண்முரசு வாசிப்பது எளிது. இன்னும் இணையம் அளிக்கும் ரங்கராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு கடினம். ஒரு பத்திக்குள்ளாகவே மூளை தெறிக்கும். அவர்கள் வரவேண்டியதில்லை என்பதே என் எண்ணமும்

ஜெ