அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
மறைப்பு எதுவும் இல்லாமல் எடுத்துவரும் அகல்தீபம் ஆடுவதுபோல் இந்த பகுதி பிரயாகை-65 ஒரு அசைவு அசைந்து தாழ்ந்து சுழன்று அணைந்விடும் என்ற பதற்றத்தை ஏற்பத்தியது. பாண்டவர்கள் இறக்கவில்லை என்ற விவரம் சகுனியும் அறிந்து உள்ளான் என்பதுதான் அது. அந்த மறைப்பற்ற அசைவுதான் அங்கு ஒரு தீபம் இருக்கிறது என்பதையும் காட்டியது. கதை பளிச்சென்று சுடர்கொண்டு பிரகாசித்தது.
கர்ணனுக்கு ஏற்படும் சந்தேகமும், கர்ணனுக்கு ஏற்படும் சந்தேகத்தின் மூலம் துரியோதனன் அடையும் சந்தேகமும் யதார்த்தமாக இருந்தது. ஒரு பெரிய நிகழ்வு இவ்வளவு எளிதாக நடந்துவிடுமா? என்ற கர்ணனின் மனநிலையை குழந்தையின் கதை கேட்கும் மனநிலை என்று சொல்லும் துரியோதனன் வாரணவதத்தில் இருந்து வந்த எலும்பை தான் கவனிக்காததும் ஒரு குழந்தையின் மனநிலைதான் என்று அதன் பின்தான் உணர்ந்து இருப்பான். அதன் பின் துரியோதன் பாண்டவர்கள் இறக்கவில்லை என்று நம்புவதும். கர்ணன் பாண்டவர்கள் இறந்திருப்பார்கள் என்று நம்புவதும் மீண்டும் ஒரு யதார்த்தம். மறைப்பற்ற அகல்தீபம் அசையும் தருணம். சுழலும் தருணம். அணைந்துவிடுமா?
அரசுசூழ்தலுக்கும் படைசூழ்தலுக்கும் இடையில் உள்ள வேற்றுமையை விளக்கி அதன் மூலம் திறக்கின்ற பாதையை காட்டும் இடத்தில் சகுனி அணைந்துவிடாமல் சுடர்விடும்தீபம். பாண்டவர்கள் இருக்கும் இடம் சகுனி அறிந்துவிட்டானே என்று வாசகர்கள் நினைக்கும்போதே அது மீண்டும் மர்மம் என்று ஆக்கியவிதத்தில் நுட்பத்தில் நுட்பம் செய்கின்றீர்கள் ஜெ. இது தெரிந்ததில் இருக்கும் தெரியாத மர்மம். காற்றில் ஆடும் தீபம்போல் கதை அசைந்தாலும் அதற்குள் நிற்கும் நுட்பத்தில் பற்றி சுழன்று எரிந்து வாசக உள்ளக்காற்றை வெல்கின்றது கதை. எங்கு இருக்கிறார்கள் என்று கேட்கும் கர்ணனிடம் எங்கு இருந்தார்கள் என்பது மட்டும்தான் தெரியும் என்று சகுனி சொல்லும் இடத்தில் சகுனியின் உழைப்பும். அதற்கு ஈடாக குந்தியின் உழைப்பும் மின்னல்போல் ஒன்றை ஒன்று வெட்டிச்செல்கின்றது. நீயா? நானா? என்ற மௌனயுத்தத்தின் உக்ரத்தை அறியமுடிகின்றது. கதை அணையாதீபம் ஆகும் அற்புத காட்சி மட்டுமல்ல அசையாதீபம் ஆகும் அற்புதம். பந்து வரும் வழியெல்லாம் அதை பிடித்துவிட ஆட்கள் நிற்கையில் ஆள் இல்லாத இடத்தில் பந்தடித்த குந்திதான் ஆட்டநாயகன். ஓநாய் கடித்த அன்று தண்ணீருக்கு தவித்த சகுனிக்கு உண்மையில் குந்தியிடம் ஏழு ஆண்டுகளாக தண்ணிக்கு தவித்ததை மறக்கவே முடியாது.
//கர்ணன் “அவர்கள் எங்கிருக்கிறார்கள்?” என்றான். சகுனி“எங்கிருந்தார்கள் என்பது மட்டும்தான் தெரியும்” என்றார். “இடும்பவனத்தில்… அங்கேயே ஏழுவருடங்கள் இருந்திருக்கிறார்கள்.அவர்கள் அங்கிருந்து கிளம்பிய பின்னரே அச்செய்தியை நான்அறிந்தேன். அதுவும் மிகநுட்பமாக ஒற்றர் செய்திகளைக்கொண்டுநானே உய்த்தறிந்ததுதான்.” //
பாண்டவர்கள் வாரணவதத்தில் தீயில் இறந்துவிட்டார்கள் என்று நினைதது கதாயுதத்தை கீழே வைத்த துரியோதனன் இங்கே சிந்தனைக்கு உரியவன். பீமன் இடும்பனுடன் போர்செய்து வேறு ஒரு பரிணாமத்தை அடைந்து இருக்கிறான். வீரனின் தந்தையாகிவிட்டான். த ுரியோதனன் இத்தனை நாள் கதாயுதம் சுற்றியது பாண்டவர்களுக்குதான் என்பதுபோல் கதாயுதத்தை வைத்துவிட்டான். இங்கு காலையில் எழுந்ததும் பீஷ்மர் நித்தம் செய்யும் வில்வித்தையும் ஷண்முகவேலின் முதற்கனல் படமும் நினைவில் எழுந்தாடும் தருணம்.
//துரியோதனன் புன்னகையுடன் “செய்தி வந்த அன்று எட்டுநாழிகைநேரம் இடைவெளியே இல்லாமல் கதைசுழற்றினேன். உதிரம்முழுக்க வியர்வையாகி வழிந்தோடிவிடும் என்று தோன்றியது.ஆனால் மறுநாள்காலை தூக்கி வைத்த கதாயுதம்தான்.ஏழுவருடங்களாக தொட்டே பார்க்கவில்லை” என்றான்//
தனக்கா கற்றுக்கொள்பவனையும், எதிரிக்காக கற்றுக்கொள்பவனையும் காலம் எதிர் எதிராக கொண்டு வந்து நிறுத்தும். காலத்தின்மீது கோபப்பட்டு என்ன பயன்?.
இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்-என்கின்றார் வள்ளுவர்.பாண்டவர்களையும், கௌரவர்களையும் நினைத்து வள்ளுவர் இந்த குறளை செய்தாரா? அதற்
கு பொருள் செய்யத்தான் துரியோதனன் ஏழு ஆண்டுகளாய் கதையை சுவற்றில் சாய்த்து வைத்தான் என்று சொல்கின்றீர்களா ஜெ. துரியோதனனே அப்படி என்றால் அவனை உடல் அசைவுகளாய் இருக்கும் தம்பிகள்?
கு பொருள் செய்யத்தான் துரியோதனன் ஏழு ஆண்டுகளாய் கதையை சுவற்றில் சாய்த்து வைத்தான் என்று சொல்கின்றீர்களா ஜெ. துரியோதனனே அப்படி என்றால் அவனை உடல் அசைவுகளாய் இருக்கும் தம்பிகள்?
துரியோதனன் இந்த மனநிலை யதார்த்தமானதுதான் என்றாலும் இந்த வரிகளை கொண்டுவந்து வைத்து ஒரு அமுக்கு அமுக்குகின்றீர்கள் ஜெ. துரியோதனன் பெரும் உடம்மீது இருந்த ஒரு ஈர்ப்பு பெரும் வெறுப்பாக மாறி அவனை பார்க்கவேண்டாம் என்று சொல்லியது. பாண்டவர்களை எரித்துக்கொல்லலாம் என்பதை துரியோதனன் ஏற்றுக்கொண்டபோது அவன் அகத்தின் பாடு அப்படிப்பட்டது என்று நினைத்து ஏற்றுக்கொண்டாலும் அவனின் இந்த ஓய்வைப்பார்த்தபோது அது உடம்பே இல்லை வெறும் மாமிச பொதி என்று தோன்றியது. குந்தி பீமனிடம் இந்த காட்டில் ஒரு செடிபோல மரம்போல இருந்துவிடலாம் என்றாலும் என்வயிற்றில் இளவரசனாய் பிறந்துவி்ட்டதால் ரஜோகுணத்தோடு இரு என்று சொல்கின்றாள். இங்கு அதன் எதிர் துருவமான தமோகுணத்தின் அடையாளம் துரியோதனனாக தெரிந்தான். என்னதான் நாய் அகம் நன்றி உள்ளது என்றாலும் அது குப்பையில் கிடக்கும் உடல் நினைவில் வந்தது.பீமனின் ரஜோகுணமும், துரியோதனன் தமோகுணமும் காட்சியாக்கப்படும் ஓவியம் இன்று. துரியோதனனும் பீமனும் ஆடிப்பிம்பங்கள் எதிர் எதிர் திசையில் நடப்பார்கள் என்பது பழையதுதான் ஆனால் வேறுவேறு உடம்போடு நடக்கிறார்கள் என்பதுதான் புதியது.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.