Sunday, January 11, 2015

பிரயாகை-72-அதன் அதன் தேவை



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

//மூடாத சிறிய வாயிலுக்கு அப்பால் இருளுக்குள் அமைந்திருந்தாள் இருள் ஆளும் இறைவி// என்ற வரிகளுக்கு அப்பால் முழுவதும் இருளுக்குள் நுழைந்து கதைப்படித்த அனுபவம்.கதையின் ஒவ்வொரு நிகழ்வும் இருட்டில் நடப்பதுபோலவே தெரி்ந்தது. ஐம்புலன்களும் விழித்து இருந்தும் ஐம்புலன்களுக்கும் அப்பால் அடர்ந்திருக்கும் இருட்டே அறியாமைபோல் அடர்த்தியாக இருந்தது.

ஜிஹ்வன், பூமிகன், அன்னைநரி, முதியநரி எல்லாம் ஒன்றாகி ஒரு கட்டத்தில் துரியோதனன், துச்சாதனன், காந்தாரி, திருதராஷ்டிரன் ஆவதை தவிர்க்கமுடியவில்லை. துரியோதனன் பின்னால் ஓடும் அன்னைநரியாகிவிட்டாள் காந்தாரி என்னும் சித்தரம் வந்து அவளும் அம்மாதானே என்று மனம்தேறவைத்தது.
//அன்னை பின்னால் செல்வதா வேண்டாமா என்று தவித்து முதியநரியை நோக்கசெல், உனக்கு வேறென்ன வழி?” என்றது. அன்னை முன்னங்கால்களால் மண்ணைக் கீறியது. “அங்கே உணவு வருமென்றால் என்னை நோக்கி கூவுவந்துவிடுகிறேன். நான் வயிறு நிறைய உண்டு நீண்டநாள் ஆகிறது. என் பற்களும் தேய்ந்துவிட்டனஎன்றது முதியநரி//

 கௌரவர்களை கண்டபின்பு பாண்டவர்களை காணாமல் இருக்கமுடியுமா? நரிகள் நரியாக மட்டும் இருக்க, பாண்டவர்கள் ஆடுகளாகி விட்டார்கள்.  கண்ணன் மாடாகிவிட்டான். ஆடும், மாடும் பேசிக்கொள்கின்றன கூட்டணியாக இருக்கின்றன. அவைகளுக்க குழந்தைகள் உருவாகிவிட்டன என்று காட்டும் இடம் அழகு. 

//சதுப்புக்கு மறுபக்கம் காட்டில் இருந்து நிழல் போல ஒரு காட்டுஆடு எச்சரிக்கையுடன் நடந்துவருவதை காணமுடிந்தது// 
//பெரிய உடலைத் தூக்கி வைத்து காட்டுமாடு ஒன்று வந்தது. அதன் துணை காட்டின் விளிம்பிலேயே நின்றிருந்தது. பின்னர் அது வந்தபோது அதனுடன் குட்டி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து காட்டுமாடுகள் வந்துகொண்டே இருந்தன//

இருள்தேவிக்கு பலியாவதற்காகவே வந்தவன் தன் கழுத்தை தானே வெட்டிப்பலியாக, அதைக்கண்டு தாலமேந்தியவன் தானே வந்து பலியாவதும் வரும்போரில் பங்குபெறும் இரு உள்ளங்களின் பாங்கை வெளிப்படுத்துவதாக இருந்தது. அதிர்ச்சி ஏற்படுத்தும் அந்த இடம் அதுதான். பலியாக வந்தவன் பலியாவது கட்டாயம். பார்க்கவந்தவன் பலியாவதுதான் பெரும் கொடுமை. அரசுவேண்டும் என்று அடித்துக்கொள்ளும் கூட்டம் இரத்தம் சிந்துவது தப்பில்லை. ஏன் சாகின்றோம் என்று அறியாமலே சாகும் ஒரு கூட்டமும் மண்ணில் இருந்துக்கொண்டுதானே இருக்கின்றது. 

//ஜிஹ்வன் கால்களை பின்னால் எடுத்துவைத்துஅவன் நம்மவன்என்றான்// என்ற இடம் மீண்டும் மீண்டும் நெஞ்சல் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. அவன் எல்லாவற்றிற்கும் அப்பால் இருக்கும் யோகி. ஞானத்தில் உறையும் முக்கண்ணன். இது நரி. வயிற்றுக்காக வாழும் சீவன். இரண்டும் ஒன்று எண்ணும்போது உலகம் யோகத்தில்(இணைப்பில்) இருக்கிறது. உலகத்தின் உயிர்கள் அதன் அதன் தேவைகளுக்கான யோகத்தில் இருக்கிறது. 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.