வண்டு தன் சிறகுகளால் குடைந்துகொண்டு தசைக்கதுப்புக்குள் மெல்லப்புரண்டபோது என் வாழ்நாளில் அதுவரை அறியாத உடலின்பம் ஒன்றை அடைந்தேன். காமத்தை விட ஆயிரம் மடங்கு பெரியது. இறப்புக்கு நிகரானது. என் முதுகெலும்பு குளிர்ந்து சொடுக்கிக்கொண்டது. விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஏறிக்கொள்ள தொண்டைக்குள் நாக்கு இறங்கி நிற்க காலம் முழுதாக அழிந்து எங்கோ மறைய மீண்டு வந்தபோது மலைப்பாறைக்கூட்டம் வந்து உடல்மேல் பொழிந்ததுபோல் வலியின் அலைகள். அடியில் குருதிக்குழம்பாகக் கிடந்த என் சித்தம் கோரியது. அந்த உடலின்பத்தை மேலும் மேலும் என கெஞ்சியது.
http://www.jeyamohan.in/68760
வலி
தெறிக்கிறது காலில். இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும். வலியை ஒன்று இரண்டு
என்று எண்ண முடியும் போலிருந்தது. அப்படி எத்தனை வரை எண்ணுவது? என் வலியை
இந்தக்கணம் இப்பூமியில் பல்லாயிரம், பல லட்சம், பலகோடி படுக்கைகளில்
வலித்துக்கிடக்கும் மக்களின் வலிகளுடன் சேர்த்து எண்ணினால்? முடிவிலி வரை எண்ணலாமா
என்ன?
பிரபஞ்சம்
தன் அணுக்கள் தோறும் ஒவ்வொரு கணமும் அழிவை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்று
ரிக்வேத ரிஷி கண்டார். அழிவின் அதிபன் அரன். வலி என்பது அழிவை நம் அறியும் ஒரு
விதம். மெல்லமெல்ல சீராக ஒலிக்கும் அழிவின் மந்திரம் அது. என் காலில் இப்போது
துடித்துக் கொண்டிருப்பது பிரபஞ்ச அழிவின் ஒரு துளி. ஒரு துளி சிவம்.